Monday, December 28, 2009

தொழிலாளியின் பிள்ளையென்றால் தோட்டத் தொழில் செய்ய மட்டும் உரிமை உள்ளவர்களா?

மலையக சமூகம் இன்று சகல துறைகளிலும் ஏதோவொரு வகையில் பின்தங்கியுள்ளது. கல்வி, சுகாதாரம், போஷாக்கு, குடியிருப்பு, பொருளாதாரம், விளையாட்டு, அரசியல், தொழில்துறை என்று இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

இலங்கையின் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது மிகவும் பின்தள்ளப்பட்ட சமூகமாக மலையக சமூகமே உள்ளது. இச் சமூகத்தின் விடுதலைக்கு மலையக தொழிற்சங்கங்கள், அரசியல் வாதிகள் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு வீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்பது சகலரும் அறிந்த விடயமே.

தேயிலை, இறப்பர் தோட்டங்களில் நாட்கூலிக்கு தொழில் செய்ய மட்டுமே இம் மக்கள் உரிமை உள்ளவர்களா? ஏன்ற வினாவை எழுப்ப வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் அரச துறையில் வேலை வாய்ப்புப் பெறுவதென்பது பெரும் சாதனையாக பேசப்படும் இந் நாட்களில் பெருந்தோட்டத்துறையிலுள்ள படித்த பிள்ளைகளை நியமிப்பதில் தயக்கம் காட்டப்படுவது பற்றி மலையகத் தொழிற்சங்கங்களோ அரசியல் தலைவர்களோ நடவடிக்கை எடுப்பதில்லை என்று தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தோட்ட அலுவலகங்களில் எழுதுவினைஞர்களாக, தொழிற்சாலை அலுவலர்களாக வெளிக்கள உத்தியோகத்தர்களாக, வாகன சாரதிகளாக, தொழிற்சாலை அதிகாரிகள் போன்ற பல பதவிகள் பெருந்தோட்டத்துறையில் இருக்கின்றன. இப் பதவிகளில் தோட்டத் தொழிலாளர் பிள்ளைகள் உள்வாங்கப்படுவதில்லை.

இருந்த போதிலும் கடந்த பல ஆண்டுகளாக பெருந்தோட்டத்துறையில் தமிழர் அல்லாதவர்களைக் கொண்டே இப் பதவிக்கு ஆட்சேர்க்கப்பட்டு நியமனம் வழங்கப்படுகின்றது. பெருந்தோட்டத்துறையிலுள்ள பதவி வெற்றிடங்களுக்கு போட்டிப் பரீட்சையோ, நிபந்தனைகளோ எதிர்பார்க்கப்படுவதில்லை. வெறும் சிபாரிசு கடிதங்களே நியமனத்திற்கு போதுமானதாக உள்ளன.

பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களாக நாட் கூலிக்கு தொழில் செய்பவர்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு வருமானம் கூடியவர்கள் அல்லர். குடியிருப்பு, குடிநீர், மலசலகூட வசதி, மின்சாரம் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளின்றி பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றனர். ஆனால் தோட்டத்துறையில் பதவி வசிப்பவர்களுக்கு அரசாங்கத்துறையில் தொழில் செய்பவர்களைவிட கூடிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாக திகழும் பெருந்தோட்டத்துறை தமிழ்த் தொழிலாளர்களின் படித்த இளைஞர், யுவதிகளுக்கு உரிய தொழில் கிடைக்க மலையக அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்விமான்கள் அக்கறை செலுத்த வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒரு மாணவன் கல்வி கற்றுவிட்டால் அந்தக் குடும்பம் தலைநிமிர்ந்து விடும் ஒதுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சிலர் கல்வியை கற்றுவிட்டால் அந்தச் சமூகம் தலை நிமிர்ந்து விடும். ஆனால் மலையகத்தில் தற்போது கல்விமான்கள் பலர் இருந்த போதிலும் அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கி தங்களுக்கு தாமே ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.

இந்நிலை மலையகத்தில் தொடருமேயாயின் எமது சமூகம் எப்போது தலை நிமிரும் என்பது விடைகாண முடியாத விளைவாகவே இருக்கும். இலங்கையில் மிகவும் பின் தள்ளப்பட்ட சமூகமாக மலையக சமூகம் உள்ளது. இச் சமூகத்தின் விடுதலைக்கு உறுதுணை புரிய வேண்டும்.

மலையகத்தின் கல்விமான்களும் படித்த இளைஞர் யுவதிகளும் சமுதாயத்தை பற்றி அக்கறையுள்ளவர்களும் இன்று ஏனையோரை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனரே தவிர தான் இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்தில் எமது பங்களிப்பை நிறைவேற்றியுள்ளோமா என்பதைப் பற்றி மறந்தவர்களாகவே உள்ளனர். மலையக சமூகத்தின் விடுதலைக்கு உண்மையாக பாடுபட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல. கல்வியாளர்களும், இளைஞர் யுவதிகளுமே.

பின்தள்ளப்பட்ட சமூகத்திற்கு வழிகாட்ட கிடைத்த இந்தத் தருணத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கல்வியாளன் நினைத்தால் பாறையிலும் பயிர் வளரச் செய்யலாம். மலையகம் இன்று ஒரு பாறையைப் போன்று காட்சி தருகின்றது. நாட்டின் ஏனைய இனங்களோ சரி நிகராக வாழ்வதற்கும் சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் சிறந்த இனமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இந்த நிலையை முறையான வகையில் முறையான விதத்தில் செயற்படுத்த கல்விமான்களே வழிகாட்ட வேண்டும். அவர்களின் சிந்தனை வெளிப்பாடுகள் மூலமே ஒரு திடகாத்திரமான சமூகத்தை உருவாக்கி காட்ட முடியும்.


சிவா ஸ்ரீதரராவ்

வீரகேசரி.


No comments: