இனப்பிரச்சினையில் தமிழக கட்சிகளின் நிலைப்பாடு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். – சந்திரசேகரன் பா.உ
1983ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டபோது அனைத்து தமிழக கட்சிகளும், மக்களும் திரண்டெழுந்த வரலாற்று சம்பவத்துக்கு பின்பு தமிழகத்தில் ஆளும், எதிர்கட்சிகள் இலங்கை சிறுபான்மை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முனைந்திருக்கின்றமை இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என சமூக அபிவிருத்தி அமைச்சர் பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகம் திரண்டெழுந்தால் இந்திய டில்லி அரசு தலைகுனிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதுவே இலங்கை தமிழ் மக்களுக்கு தலை நிமிர்வை உருவாக்கும். இலங்கை வாழ் வடக்கு கிழக்கு தமிழர்களாக இருந்தாலும், மலையக தமிழ் மக்களாக இருந்தாலும் எவரும் சிங்கள மக்களை அடிமைப்படுத்த நினைத்தவர்கள் அல்ல. சிங்கள தலைமைகளோடு கைகோர்த்த கடந்த வரலாறே இது வரையிலும் பதியப்பட்டுள்ளது. தமிழர்களின் உயர்வுக்கு தேசிய தலைவர்கள் எப்போது தடைபோட ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே முறுகல் நிலையும் போராட்டமும் தோன்ற ஆரம்பித்து விட்டன. இலங்கை பிரச்சினையில் மௌனம் காத்த தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தற்போது உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க கூடிய அளவில் சில முடிவுகளை எடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அதேபோல் எதிர்கட்சி தலைவி ஜெயலலிதா இலங்கை தொடர்பில் இவ்வளவு வெளிப்படையாக தமது கருத்தை வெளிப்படுத்தியிருப்பது இலங்கை தமிழர்களுக்கு புத்தூக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்று மாற்றங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மாணவனுக்கு பல்கலைகழக அனுமதி வழங்க கோரி அமைச்சர் செல்லச்சாமி கடிதம்
தேங்கிக் கிடந்த தபாலினால் பல்கலைகழக அனுமதியை இழந்த மாணவன் தொடர்பிலும் மேற்படி மாணவனுக்கு பல்கலைகழக அனுமதியை பெற்றுக் கொடுக்கும்படியும் உயர்கல்வி அமைச்சர் விஸ்வ வர்ணபால அவர்களுக்கு தபால், மற்றும் தொலை தொடர்பு பிரதியமைச்சர் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவனுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்குமாறு இரத்தினபுரி இ.தொ.கா காரியாலயத்திற்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment