Thursday, July 2, 2009

மவுசாகலை நீர்த்தேக்கம் திறக்கப்படும் நிலை

கடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கம் எந்தவேளையிலும் நிரம்பி வழியக் கூடிய கட்டத்தை அடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே. டி. ஏக்கநாயக்கா தெரிவித்தார். இதனால் இந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் எந்த வேளையும் திறந்து விடப்படலாம். அதனால் களனி கங்கைக்கு இரு மருங்கிலும் அமைந்திருக்கும் கித்துல்கல, யட்டியந்தொட்டை, அவிசாவளை, ஹங்வெல்ல போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என குறிப்பிட்டார்.
மலையகத்தில் 24 மணி நேர எச்சரிக்கை

மலையத்தில் இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய நான்கு நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார தெரிவித்தார். நேற்று இரண்டாவது நாளாகவும் 24 மணி நேர முன்னெச்சரிக்கையை விடுத்தது. இந்த நான்கு மாவட்டங்களிலும் 100மி.மீட்டருக்கும் மேலாகத் தொடராக மழை பெய்திருப்பதுடன் தொடர்ந்தும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கிறது. மணிசரிவு அச்சுறுத்தல்மிக்க இடங்களாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்கள் இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியகொட, கலவான, கஹவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, புளத்ஹோபிட்டிய, தெரணியாகல ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளிலும்,நுவரெலிய மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பகுதியிலும், கினிக்கத்தேன, நோட்டன் பிரிட்ஜ், கெனியன், லக்ஷபான, மஸ்கெலியா பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, அகலவத்த, மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் மிக்க பல இடங்கள் உள்ளன.அவை ஏற்கனவே மணிசரிவு அச்சுறுத்தல்மிக்க இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
லயன்கள் எரிந்து நாசம்

வலப்பனை ‘பெப் ஸ்பேல்’ தோட்டத்தின் தியனில்ல கீழ் பிரிவிலுள்ள பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் தியனில்ல கீழ் பிரிவிலுள்ள 17ம் இலக்க லயனில் ஏற்பட்ட தீ விபத்தினால் லயன் அறைகள் எரிந்து சாம்பராகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார். இச்சம்பவத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் நிர்க்கதியான நிலையில் அங்குள்ள விகாரையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும்,இச் சம்பவம் காரணமாக உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சமைத்த உணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இச் சம்பவத்திற்கு லயன் அறையொன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து தீ பரவியதே காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Tuesday, June 30, 2009

சேமலாப நிதி இல்லாமல் வேலை செய்யும் தொழிலாளர்கள்

புளத்சிங்கள, தங்கஸ்கந்த தோட்டம் சுமார் 200 ஏக்கரைக் கொண்ட தனியாருக்குச் சொந்தமான ஒரு இறப்பர் தோட்டம். பத்து குடியிருப்புக்களைக் கொண்ட ஒரு லயன் கட்டடமும், பன்னிரெண்டு குடியிருப்புகளைக் கொண்ட ஒரு லயன் கட்டடமுமாக இரண்டு கட்டடங்களே இருக்கின்றன. 24 குடியிருப்புக்கள் மட்டுமே இருந்த போதிலும் அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான குடும்பங்கள் இதில் வசித்து வருகின்றனர்.50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல வருடங்களாக வேலை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் மாதம் 1500, 2000 என்ற தொகையையே சம்பளமாகப் பெற்று வந்துள்ளனர். சட்டப்படி சம்பளம் வழங்கப்படாது பட்டைசீவி இறப்பர் பால் கொண்டு வருவதைப் பொறுத்து நாளொன்றுக்கு 95 ரூபா என்ற கணக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பளம் பெற்றுக் கொண்டவர்களும் கையொப்பம் எதுவும் போடாது பணத்தை மட்டுமே பெற்று வந்துள்ளனர்


2003ம் ஆண்டு முதல் தோட்டம் மூடப்பட்டுள்ளதாகத் தோட்ட உரிமையாளர் அறிவித்ததையடுத்து இங்குள்ள தொழிலாளர்கள் வெளியில் சென்று உழைத்து ஊதியம் தேடி குடும்பம் நடாத்தி வருகின்றனர்.தோட்டம் மூடப்பட்டுள்ளதாக அறிவித்த போதிலும் வெளியிடங்களில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து வேலை வாங்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.வேலை செய்த காலத்தில் அவர்களுக்கான எவ்வித சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்படவில்லை.லயன் கட்டிடம் திருத்தி கொடுக்கப்படவில்லை

தோட்டத்தில் தற்பொழுது வேலையில்லாத போதிலும் தொடர்ந்து இதே லயன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். குடி நீர்வசதி, மலசலகூட வசதி எதுவுமே கிடையாது. இந்த வசதிகள் எதுவுமே அற்ற நிலையிலேயே இன்று வரையில் இங்குள்ள தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி அட்டை வழங்கப்படவில்லை. 1982 முதல் 1992 வரையிலான காலப் பகுதியில் ஒரு சிலருக்கு ஊழியர் சேமலாப நிதிக்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஏனையோர் இது தொடர்பாக தோட்ட உரிமையாளரிடம் கேட்ட போது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆந் திகதி இங்குள்ள தொழிலாளர்கள் தாம் அங்கத்துவம் வகித்த தொழிற்சங்கமான இ.தொ. கா. மூலம் களுத்துறை தொழில் நீதிமன்றத்தில் தோட்ட உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். கஷ்டப்பட்டு உழைத்துத் தேடிய பணத்தை நான்கு வருடகாலமாக நடைபெற்ற வழக்கு தொடர்பாக செலவு செய்த போதிலும் தொழிலாளர்கள் வேலை செய்தமையை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் கிடையாது எனக் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அடைந்ததுடன், இந்த வழக்கு தொடர்பாக ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதி தோட்ட உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு எங்களைக் கஷ்டத்தில் போட்டுவிட்டார் என விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.


நேர்மைக்கும், நீதிக்கும் உரிய இடம் கிடைக்கவில்லையென அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக 2007ம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் தொழில் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் எதுவித பதிலும் கிடைக்கவில்லையென தெரிவித்தனர்.தோட்டப்பாதை மிக மோசமான நிலையிலேயே உள்ளது. அவசரத் தேவைகளுக்கோ அல்லது திடீர் நோயாளி ஒருவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதாயின் சுமார் ஒரு கி.மீ.தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. முச்சக்கரவண்டியில் செல்வதாயின் 150 ரூபா கட்டணமாக அறவிடப்படுகிறது. தபால் சேவை கிடையாது. புளத்சிங்கள தபால் அலுவலகத்துக்குச் சென்று கடிதம் ஏதும் வந்துள்ளதா என அவரவர் விசாரித்துப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பாடசாலை மாணவர்களும் நடந்தே செல்ல வேண்டியுள்ளனர்.


தனியார் தோட்டம் என்று சொல்லும் பொழுது பெரும்பாலும் அங்கு சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயம் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. மூடி மறைந்த ஒரு பிரதேசமாகவே இருந்து வருகிறது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்பது கூட வெளியில் தெரிவதில்லை. தொழிற்சங்கவாதிகளும் தனியார் தோட்டம் குறித்து பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்வதில்லை.கம்பனித் தோட்டங்களில் வசித்து வரும் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளைவிட தனியார் தோட்டங்களில் கெடுபிடிகளும் பிரச்சினைகளும் எண்ணிலடங்கா தவையாகவே இருந்து வருகின்றன.

தொழிலாளர் சார்பாக ஆஜராகி வாதாடி அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டிய தொழிற்சங்கவாதிகள் தோட்ட உரிமையாளரிடம் சந்தோஷம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டு தொழிலாளரை நட்டாற்றில் கைவிட்டு விடுகின்றனர். இது மிகவும் கவலைக்குரியதாகும் என இங்குள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரைகாலமும் இந்தத் தோட்டத்தில் தொழிலாளரின் நலன் கருதி எந்தவொரு திட்டமோ உதவியோ எவரும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. ஆக மேல் மாகாண சபை உறுப்பினரான கித்சிரி கஹட்டபிட்டிய சுமார் 25 லட்சம் செலவில் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.


எஸ். சூரியமாலா (53)


இருபத்தைந்து வருடகாலம் கணவனும் நானும் தோட்டத்தில் வேலை செய்தோம். சம்பளம் மட்டுமே கிடைத்தது. வேறு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. கிடைக்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி கிடைக்கவில்லை. வழக்கு தொடர்ந்து எதுவித பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது. நாலு வருடங்களாக நடந்த வழக்குக்காக பெரும் பணம் செலவழித்தோம். கடைசியில் தொழிற்சங்கவாதிகள் எங்களை ஏமாற்றி தோட்ட உரிமையாளருக்கு சாதகமாக நடந்து கொண்டனர். இவ்வளவு காலம் தொழிற் சங்கத்தில் இருந்தும் ஒரு பயனுமில்லை. எங்கள் நிலையை கடவுளிடம்தான் சொல்ல வேண்டும் என்றார்.


எஸ். ராஜசிங்கம் (48)

நான் வெளியில் வேலை செய்து நாளொன்றுக்கு 275 ரூபா முதல் 300 ரூபா வரையில் உழைத்து வருகிறேன். தோட்டத்தில் ஏழு வருடகாலம் வேலை செய்த போதிலும் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.தனியார் தோட்டங்களில் நடக்கும் அநீதியை யாரும் தட்டிக்கேட்பது கிடையாது.


தமிழ் அரசியல்வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் இருந்தும் பயனில்லை. ஒரு கையொப்பத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களிடம் மூன்று மாதம் அலைய வேண்டியுள்ளது. அவர்களைச் சந்திக்கச் சென்றால் ஐயா குளித்துகொண்டு இருக்கிறார். சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். அல்லது செய்தி கேட்கிறார், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியான பதில்கள் தான் கிடைக்கின்றன என்றார்

இங்கிரிய மூர்த்தி


நன்றி- தினகரன்
சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தை துரிதப்படுத்த வேண்டுகோள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை நிர்ணயித்து தீர்மானிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியாகி விட்டதால் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தை துரிதப்படுத்த வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் சந்திரசேகர் தொழில் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுட செனவிரத்னவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அக்கடிதத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமையால் தொழிலாளர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன்னைய சம்பள அதிகரிப்பின்போதும் அவர்களுக்கு வாழ்வதற்கு போதுமான சம்பள உயர்வு வழங்கப்படாமையினாலும்,அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினாலும் தோட்டத் தொழிலாளர் நாளுக்கு நாள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள். தோட்டத்தொழிற்துறையைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் மக்கள் வாழ்வாதாரப் போராட்டத்துடன் தோட்டங்களில் தொழில்புரிகின்றனர். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 10 இலட்சம் மக்கள் இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் வழங்குவதாக வாக்குறுதியளித்த நிவாரணம் கூட அம்மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. வாழ்க்கைச் செலவு வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக அவர்கள் எதிர்கொண்டுவரும் கஷ்டங்களை ஓரளவாவது நிவர்த்திசெய்யும் வகையில் அரசாங்கத்தினதோ, முதலாளிமாரினதோ ஒத்துழைப்பு கிடைக்காது அவர்களது சம்பளத்தை சட்டபூர்வமாக அதிகரித்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தை தொடர்ந்து பிற்போடுவது தோட்டத்தொழிற்துறைக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. இவ்விடயத்தில் நம்பிக்கை இழந்திருக்கும் தொழிலாளர்கள் வாழ்வதற்குப்போதுமான சம்பள அதிகரிப்பைப் பெற்றுத் தருமாறு பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேயிலை, இறப்பர் தொழிற்துறை உற்பத்திகள் குறைந்தன. இதனால், தேசிய வருமானத்துக்கும் பாதிப்பேற்பட்டது. இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும். எனவே தான் இதனை நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
2006 ஆம் ஆண்டு சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதற்காக மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்காததால் தொழிற்சங்கப் போராட்டம் 3 மாதங்களாகத் தொடர்ந்தன. அத்தொழிற்சங்க போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் 3.300 மில்லியன் நட்டமேற்பட்டதாக முதலாளிமார் தெரிவித்திருந்தனர்.
தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைக்குப் போதுமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாக இருந்தால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கவேண்டிய தேவை தொழிலாளர்களுக்கு இருக்காது. இச்சந்தர்ப்பத்தில் இதனை கவனத்தில் கொண்டு தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கும் நிலையிலும் முதலாளிமார் அதனை தள்ளிப்போட்டு வருகின்றனர். தேயிலை வர்த்தகச் சந்தையைப் பொறுத்தவரையில் பெருந்தோட்டத்துறை நல்ல நிலையிலேயே உள்ளது. தேயிலை ஒரு கிலோ 450 ரூபாவாகவும் இறப்பர் ஒரு கிலோ 250ரூபாவாகவும் உயர்ந்த விலையில் இருப்பதனால் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எதுவித தடையும் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்நிலையில், தோட்டத்தொழிலாளர்களை நம்பிக்கை இழக்கச்செய்யாது சுமார் நான்கு இலட்சம் தோட்டத்தொழிலாளிகளுக்கு வாழ்க்கைக்குப்போதுமானளவு சம்பளத்தை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அதிகரிக்கும்படி முதலாளிமார் சம்மேளனத்தை அரசாங்கம் வலியுறுத்த வேண்டும். இதற்காக அரசாங்க பிரதிநிதி என்ற வகையிலும் தொழில் தொடர்பு மற்றும் மனிதவள அமைச்சர் என்ற வகையிலும் நீங்கள் துரித தலையீடொன்று செய்ய வேண்டியுள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றி வைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். – நன்றி – தினக்குரல்

Monday, June 29, 2009

பசறை பிரதேச அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபா

பசறை பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, புதிய பஸ்தரிப்பு நிலையம், இரு வழிப்பாதை, குடிநீர் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். கமநெகும, மகநெகுமபோன்ற திட்டங்கள் ஊடாக பசறை மடூல்சீமை லுணுகலை பிரதேசத்தில் பல பாதைகள் பல படிக்கட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பசறையில் பஸ்தரிப்பு நிலையம், அமைக்கப்பட்டு பூர்த்திசெய்யப்படாமல் இருக்கிறது. இந்த பஸ்நிலையம் மிக விரைவில் திறக்கப்படும். அதற்கான அனைத்து வேலைகளும் போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பசறை நகரம் குறுகிய இடவசதிக்குள் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக இருவழிப்பாதை மிக விரைவில் அமைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மற்றும் மில்லபெத்த பகுதியிலிருந்து பசறை நகரம் வரைக்கும் நீர்;திட்டம் ஒன்று ஆரம்பிப்பதற்கான திட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் சிந்தித்து செயற்படாவிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகும்

பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க தவறினால் தமிழர் பிரதிநிதிதித்துவம் பறிபோகக்கூடிய அபாயம் உள்ளதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி..வி. சென்னன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சபையில் ஏற்கெனவே ஐந்து தமிழ் உறுப்பினர்கள் இருந்தனர். நடைபெறவுள்ள தேர்தலில் அதிகமாக தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். இருக்கும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்துவிடக்கூடாது. பதுளை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு ஒருபோதும் துணைபோய்விடக்கூடாது. இதனை கருத்தில்கொண்டு அனைவரும் சிந்தித்து செயல்பட்டால் மாத்திரமே தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க முடியும்