Monday, August 10, 2009

நீங்கள் தொழிற்சங்க பற்று கொண்டிருக்கலாம் உங்கள் மீது சங்கம் பற்று வைத்திருக்கிறதா என்பதே முக்கியம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோப்பித் தோட்டத் தொழிலுக்காக வரவழைக்கப்பட்டு 200 வருடங்கள் கடந்த நிலையிலும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் இன்றுவரையும் அடிப்படை பிரச்சினைகள் கூட முழுமையாகத் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மலையகப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளை பின்வருமாறு சுட்டிக்காட்டலாம். அடிப்படைச் சம்பளப் பிரச்சினை, சொந்த நிலம் இல்லாமை, லயத்து வாழ்க்கை முறை, அடிப்படைச் சுகாதாரப் பிரச்சினை, உட்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை, போசாக்குப் பிரச்சினை, சிறுவர் துஷ்பிரயோகம், வேலையில்லாப் பிரச்சினை, அறிவு வறுமை, அரசியல் ரீதியான விழிப்புணர்வு இன்மை, மாணவர்களின் இடை விலகல்கள், பாடசாலையின் பௌதீக வளங்கள் போதாமை, தொழில் பிரச்சினை, கசிப்பு பாவனை அதிகரிப்பு, அடிப்படை உரிமை, மீறல்கள், நிவாரணங்கள் கிடைக்காமை, தேயிலைத் தோட்டங்கள் குறைவடைதல், தொழில் பாதுகாப்பு இன்மை, போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளோடு இச்சமூகம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
மேற்கூறிய பிரச்சினைகளுக்கு எல்லாம் அடிப்படை மூல காரணம் ஒன்றுதான். இம்மக்களுக்கு கல்வி அறிவு போதாமையினால் இம்மக்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்வை பெற்றுக் கொள்ளாத நிலையே ஒரு முக்கிய காரணம் ஆகும்.
இம்மக்களுக்கு தேவையான விடயங்களை அரசாங்கத்திடம் இருந்தும், தோட்டக் கம்பனிகளிடம் இருந்தும் எவ்வாறு பெற்றுக் கொள்வது என்ற வழிகாட்டல் ஆலோசனை இவர்களுக்கு போதியளவு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மக்கள் ஒரு அடிமைச் சமூகமாக தொடர்ந்து நோக்கப்பட்டு வந்ததும், இவர்களுக்கு சலுகைகள், கல்வி வாய்ப்புகள் என்பவற்றைப் பெற்றுக் கொடுத்தால் மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு, பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற ஐயப்பாட்டாலும் அநேக விடயங்களில் காலம் காலமாக இம்மக்களின் பிரச்சினைகளை ஒரு சமூகப் பிரச்சினையாக யாரும் முன்னெடுக்க முயற்சிக்க வில்லை. அவ்வாறு சிலர் முயற்சி செய்த போதும் அதனை பல்வேறு வடிவில் மழுங்கடிக்கச் செய்த வரலாறும் உண்டு.
பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும், சிந்திக்க வேண்டும் 4 பரம்பரையாக 10கீ8 பரப்பு லயக் காம்பிராவில் எவ்வித விமோசனமும் இன்றி வாழும் இவர்களுக்கு அரசியல் ரீதியான வழிகாட்டல் ஆலோசனை செய்வது யார்? தனக்கு கிடைத்த வாக்குரிமையை சரிவர பயன்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என தீர்மானிப்பது வாக்குரிமையை பெற்ற மக்களே என்பது இவர்களுக்கு புரிந்தும் புரியாதுள்ளார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
எமது சமூகம் என்றைக்கு அரசியல் ரீதியாக தூர நோக்கோடு சிந்திக்கிறோமோ அன்றுதான் எமக்கு விமோசனம் கிடைக்கும். அரசியல் மூலமே மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
இந்த மிலேனியம் யுகத்திலும் சராயத்திற்கும், சோற்று பார்சலுக்கும், அற்ப சொற்ப சலுகைகளுக்கும், பணத்திற்கும் விலை போகக் கூடாது. அப்படி விலை போனால் இச்சமுகம் இன்னும் படுபாதாளத்திற்குச் செல்லம் என்பது போகப் போகத் தெரியும்.
நாம் எந்த தொழிற்சங்கத்தில் இருக்கின்றோம் என்பது முக்கியமல்ல. அந்த தொழிற்சங்கத்தின் மூலம் எமது சமுகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றி சிந்திக்க வேண்டும். தொழிற் சங்கங்கள் கூறும் அனைத்து விடயங்களும் சரியாக இருக்கும் என்று கூறமுடியாது. அதே வேளை பிழையாகவும் இருக்காது. அதனால் சிரியான விடயங்களை தெளிவாகப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

சிவமணம்...
அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு மலையக மக்கள் பூரண ஆணை- வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளுக்கு மலையகம் வாழ் பெருந்தோட்ட மக்கள், ஊவா மாகாண சபைத் தேர்தலில் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் என்று சுகாதார பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றையெல்லாம் அங்கீகரித்து மலையகத் தோட்டப்புற மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்துள்ளார்கள் என்றார்.
தோட்டப்புற வைத்தியசாலைகள் புனரமைப்பு, தாதியர் நியமனம் உள்ளிட்ட பணிகளை மேம்படுத்த 225 மில்லியன் ரூபா நிதியினைப் பெற்றுக் கொடுத்து மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி உதவி புரிந்தார். எனவே, இந்தத் தேர்தலில் ஊவா மாகாண தோட்டப் பகுதி மக்கள் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த ஒன்றிணைந்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டார்

Thursday, August 6, 2009

தொழிலாளர்களை வெளியேற உத்தரவு

மாத்தளை வேவல்மட, காலேகொலுவ, மவுசாகல ஆகிய தோட்டப் பிரிவுகளில் வசித்து வரும் தொழிலாளர்களை இம் மாதம் 11ம் திகதிக்கு முன்னர் அவர்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேறுமாறு தோட்ட உரிமையாளர்களால் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் வேவல்மட தோட்டத்துக்கு மட்டும் நோட்டீஸ் மூலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேற்படி மூன்று தோட்டங்களும் 1985ம் ஆண்டு தனியாருக்கு விற்கப்பட்டது. இதில் வேவல்மட தோட்டத்தில் இருந்த தேயிலை தொழிற்சாலையும் கடந்த வருடம் உடைக்கப்பட்டு விட்டது. மவுசாகல தோட்டத்தில் இருந்த தொழிற்சலை கடந்த 20 வருடங்களுக்கு முன்பே உடைக்கப்பட்டு விட்டது. இம் மூன்று தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் பலவந்தமாக தனியார் காணிகளில் குடியேறியுள்ளதாகவும் தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறும் தோட்ட நிர்வாகத்தால் கேட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இத் தோட்டக் காணியில் குடியிருப்புக்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். தனியாருக்கு விற்கப்பட்டதால் இத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி எந்தவொரு அரசியல் கட்சியோ, தொழிற்சங்கமோ அக்கறை கொள்ளவில்லை. ஆரம்பத்தில் இத் தோட்டப்பிரிவு தொழிலாளர்கள் ஐ.தே.க, மற்றும் இ.தொ.கா ஆகிய கட்சிகளின் அங்கத்தினராக இருந்துள்ளனர். இத் தொழிலாளர்களின் நிலை குறித்து எவரும் அக்கறை கொள்ளாத நிலையில் இவர்களின் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரஜா உரிமை சான்றிதழ் அவசியம்

1988ம் ஆண்டில் 39ம் இலக்க சட்டத்தின் கீழ் இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டு வருகிறது. எனவே எமது மலையக மக்கள் எந்தளவுக்கு பிரஜாவுரிமைச் சான்றிதழை பெற்றுள்ளனர் என்பது தெரியாமலே உள்ளது. முழு மலையகத்திலும் குறிப்பிட்ட சிலர்தான் பிராஜாவுரிமைச் சான்றிதழ் வைத்துள்ளனர். அநேகமானோர் இந்தச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு எவ்விதமான அக்கறையும் கொள்வதில்லை என்பது தெரியவருகிறது. எமது மக்கள் வாக்களிக்கும் உரிமை இருந்தால் போதும் என்ற அசமந்த போக்கில் உள்ளனர். வாக்களிக்கும் உரிமை வேறு. பிரஜாவுரிமை என்பது வேறு என்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்வது அவசியமாகும். இந்த நாட்டில் நாமும் அங்கீகரிக்கப்பட்ட பிரஜையாக வாழ வேண்டுமாயின் நமது மக்கள் அனைவருமே பிரஜாவுரிமைச் சான்றிதழை பெற்றுக் கொள்வது அவசியமாகும். ஆத்தோடு இதன் சிறப்பையும் பெறுமதியையும் உணர்தல் முக்கியமானதாகும்.
எனவே தோட்டங்கள் தோறும் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக நடமாடும் சேவைகளை ஏற்படுத்த எமது மலையகத் தலைவர்கள் முன்வருவது காலத்தின் கட்டாயமாகும். எமது மக்களும் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள ஆர்வத்தோடு முன்வர வேண்டும். அதுபோல் அநேகமானோருக்கு பிரஜாவுரிமைச் சான்றிதழை பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பது தெரியாமல் இருக்கலாம். அப்படியெனில் ஒரு தொழிற்சங்கத்தினூடாகவோ அல்லது மலையக நலன்புரி அமைப்புக்களினூடாகவோ இவற்றைப் பெற்றுக்கொள்வது மாத்திரமின்றி தனிப்பட்ட முறையிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்திய வம்சாவளியினர் ஆட்களை பதிவு செய்யும் திணகை;களத் தோடு தொடர்பு கொண்டு இதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்று தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்வதன்; மூலம் பிரஜாவுரிமை சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே எமது மலையக மக்கள் ஏனோதானோ என்று தொடர்ந்தும் இருக்காமல் அடுத்து வரும் எமது பரம்பரையினரை உரிமையோடு வாழ்வதற்கான உருப்படியான ஒன்றையாவது செய்து வைக்க முன்வர வேண்டும். அப்படியில்லாமல் கிணற்றுத் தவளையைப் போல் வாழ்ந்து மடிந்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மையுடன் இருந்துவிடக் கூடாது. ஆகவே இன்றே ஆரம்பியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்

ஆர். ராமசுந்தரம்
காவத்தை

Wednesday, August 5, 2009

சேவையாற்றக் கூடியவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கப் பேதங்களை மறந்து தொழிலாளர்களுக்கு சேவையாற்றக் கூடியவர்களுக்கு வாக்களிப்பதன் மூலமே அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென இலங்கைத் தோட்டத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் எஸ்.சிவசுந்தரம் ரி.வி.சென்னனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். அரசுடன் இணைந்து தொழிலாளர்களிடம் வாக்கு கேட்கும் தொழிற்சங்கங்கள் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் கலந்துரையாடி தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுத்து விட்டு வாக்குக் கேட்டிருக்க வேண்டும். ஒப்பந்த காலம் காலாவதியாகிப் பல மாதங்கள் ஆகியும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் ஒன்றை நினைக்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை, சம்பளம் 13 வீதத்தால் உயர்கின்ற போது வாழ்க்கைச் செலவும் உயர்கின்றது. அன்று பருப்பு 45 ரூபாவாக இருந்தபோது இன்று விலை 220 ரூபாவாக உயர்ந்துள்ளது. 12 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி 70 ரூபாவாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. கூட்டு ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

Thursday, July 30, 2009

மலையக தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாதாரத்தின் பங்களிப்பும்

-எம். இராமச்சந்திரன்-
“மலையக சமூகத்தின் வளர்ச்சியின் வேகம் ஏனைய சமூகத்தைவிட மந்த கதியிலேயே நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஏனெனில் பொருளாதார வளத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் நமது மலையக சமூகம் காணப்படுவதே முக்கிய காரணமாகும். அவ்வாறாயின் பொருளாதார வளத்தை உயர்த்திக் கொள்வதற்கான வழிகளையும், பொருளாதார வளர்ச்சியின் தடைக்கற்கள் பற்றியும், மாற்று வழிகளை கையாளும் சந்தர்ப்பத்தில் தேயிலை உற்பத்தியில் பின்விளைவுகள் பற்றியும் ஓர் ஆய்வினை பார்ப்போம்.”
இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் தேயிலை உற்பத்தியின் பங்களிப்பு இன்றியமையாதது. எனினும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த வருமானம் அவர்களின் ஜீவனோபாயத்திற்குக் கூடப் போதியளவாக அமையவில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாட தேவைகளில், உணவு, உடை, உறையுள் ஆகியன மிக முக்கியமானவையே. ஆயினும் மூன்று வேளை முறையாகப் பசியாறக் கூட தனது வருமானம் போதாத நிலையில் வாழ்கின்றனர்.
இவ்வாறான நிலையில் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டுமாயின் அவர்களது வாழ்க்கையையே ஓர் போர் களமாக மாற்ற வேண்டியுள்ளது. மாதாந்த வேலை நாட்களில் ஒரு நாள் சுகயீனத்தாலோ அல்லது தனது சுய தேவையின் பொருட்டோ வேலைக்குச் செல்லத் தவறும் பட்சத்தில் தனது மாத நாட் சம்பளத்தில் நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் கழிவுத் தொகையுடனேயே சம்பளத்தைப் பெறுகின்றனர். இவ்வாறான தோட்டக் கம்பனிகளின் சட்ட திட்டங்களுக்குப் பயந்து உடல் நலமற்ற நிலையிலும் கட்டாயமாக வேலைக்குச் செல்ல வேண்டிய வேதனைக்குரிய நிலையிலேயே தனது வாழ்க்கையை நடத்துகின்றனர்.
ஏனைய மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கைச் சுகத்தை தோட்டத் தொழிலாளர்கள் கனவுலகிலேயே அனுபவிக்கின்றனர். பெருந் தோட்டப் புறங்களைப் பொறுத்தமட்டில் பெரும்பாலும் தேயிலைத் தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இல்லையெனில் நகர்ப்புறங்களில் இயங்கும் ஆடைத் தொழிற்சாலையையே இளைஞர் யுவதிகள் நாட வேண்டியுள்ளது. இந்நிலையில் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்களா அல்லது தொழிற் சங்கங்களுக்காக தொழிலாளர்களா என எண்ணத் தோன்றுகின்றது.
அரச நிர்வாகத்திற்கு கீழ் இயங்கிக் கொண்டிருந்த தேயிலைத் தோட்டங்கள் தனியார் துறையிடம் கையளிக்கப்பட்ட பின் தொழிலாளிகளின் இரத்தம் இன்று தேயிலைச் செடிகளுக்கு உரமாகிக் கொண்டிருக்கின்றது.
அரச நிர்வாகத்திடமிருந்து தனியார் துறைக்குக் கைமாறிய சந்தர்ப்பத்தில் தேயிலை தொழிலாளிகளுக்குக்கே குத்தகை அடிப்படையில் தேயிலை விளை நிலங்களைப் பெற்றுக் கொடுக்க முனைந்திருப்பார்களாயின் “கூலித் தொழிலாளி” என்ற அடிமை சாசனத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்த பெருமை தொழிற்சங்கங்களைச் சார்ந்திருக்கும். அத்தோடு பெருந்தோட்ட தேயிலை உற்பத்தியும் மேலும் தன்னிறைவு அடைவதோடு தொழிலாளிகளும் தன்னிறைவு அடையும் சூழல் ஏற்பட்டிருக்கும்.
தொழிற் சங்கங்கள் உருவாகி அறுபது வருடங்கள் கடந்துவிட்ட போதும் இன்னும் எத்தனையோ, தோட்டங்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் காணப்படுகின்றன. தொழிலாளிகளின் சம்பளத்தைக் கூட ஒப்பந்த அடிப்படையில் நிர்ணயிப்பது தொழிலாளர்களை அடகு வைப்பது போன்றே உணரத் தோன்றுகின்றது.
தொழிற் சங்கங்கள் மூலம் தனது பொருளாதாரத்தையும் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள எத்தனிப்பதை விட ஒவ்வொருவரும் தனது சுய தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்ளள பழகிக் கொள்ள வேண்டும்.
தொழிற்சங்கங்களின் வளர்ச்சியும் தொழிற்சங்கங்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் ஏறுவரிசையாக அமைந்தாலும், அத் தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்களாகிய தொழிலாளர்கள் நின்ற இடத்திலேயே ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே காணப்படுகின்றனர். வெறுமனே தேயிலைத் தொழிலைமட்டும் நம்பியிராமல் மாற்றுத் தொழிலையும் நாட வேண்டிய கட்டாயத்திலுள்ளனர்.
இன்று ஒவ்வொரு தொழிலாளியும் தன்னைப் போலத் தனது பிள்ளைகளைத் தொழிலாளியாக அன்றி வேறு உயர் நிலைத் தொழில்களுக்கு தயார்படுத்த எத்தனிக்கின்ற போதும் அவர்களது பொருளாதாரம் ஆட்டிப்படைக்கின்றது.
எனவே பொருளாதார வளத்தை உயர்த்த வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் தேயிலைத் தொழிலாளிகள் உள்ளனர். மாற்றுவழிகளைக் கையாள வேண்டுமாயின் சிறுகைத்தொழில்களில் தனது ஈடுபாட்டைச் செலுத்த வேண்டும்; தையல், விவசாயம், பண்ணை, கால்நடை வளர்ப்பு போன்றவற்றுடன் சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு அமைப்புகள் தமது சேவையை இன்றும் தோட்டப்புறங்களில் விரிவுபடுத்த வேண்டும்.
நகர்ப்புறங்களில் வியாபார ஸ்தாபனங்களை நிறுவியுள்ள மலையக தொழிலதிபர்கள் தமது சமூகத்தின் விடிவுக்காகத் தோட்டப்புறத்தில் மூடப்பட்டிருக்கும் தேயிலைத் தொழிற்சாலைகளைப் பெற்று உற்பத்திகளை மேற்கொள்ள முன் வருவார்களாயின் இப்பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகள் எற்படும்.
எனினும், பெருந்தோட்ட தொழிலாளிகளின் அன்றாட அத்தியாவசிய செலவீனங்களைக் கருத்திற்கொண்டு காலத்திற்கு ஏற்ப சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்வராத நிலையில், தேயிலைத் தொழிலாளிகளின் தொழில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதனவையே. காலப் போக்கில் தொழிலாளிகள் பற்றாக்குறையை சந்திக்க நேரிடலாம். அவ்வாறாயின் இறுதியில் தேயிலை உற்பத்தியின் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையை நோக்கி பயணிப்பதை தவிர்க்க முடியாது போய்விடும்.
நன்றி- தினகரன்
நியாயமான சம்பள உயர்வை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென அம்பகமுவ பிரதேச சமூக விழிப்புணர்ச்சி மன்ற செயலாளர் எம்.ஆறுமுகம் அம்பகமுவ பிரதேச சமூக விழிப்புணர்ச்சி மன்ற செயலகத்தில் வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பாக உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் பேசுகையில் மலையகப் பகுதியில் வாழும் இந்திய வம்சாவழியினர் இலங்கையில் சகல பிரிவிலும் தோட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
தொழிற்சங்கங்கள் தங்களுக்கென வருடத்தில் 2 தடவை ஜூன் 30 ஆம் திகதியும் டிசம்பர் 31 ஆம் திகதியும் தங்களுக்குத் தேவையான தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் இணைந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறான சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கங்கள் அனைத்தும் தங்களது அமைப்பின் ஊடாக தொழிலாளர்களை தங்களது சங்கங்களில் இணைந்து கொள்ள தங்களின் முழுமையான சக்தியையும் பயன்படுத்தி செயற்படுகின்றது. இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் தொழிலாளர்களிடமிருந்து மாதா மாதம் சந்தாவை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படுவதில்லை என தோட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த மார்ச் மாதம் முடிவுற்ற சம்பளப் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியான நிலையில் உள்ளது. அர சாங்க ஊழியர்களுக்கு மாத்திரம் ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டத்தின் போதும் சம்பள உயர்வு கிடைப்பது போல் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அரசாங்கமே முன்நின்று சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஒரு சில தோட்டங்களில் மின்சார வசதி இல்லாது மண்ணெண்ணெய் விளக்கையே பாவிக்கின்றனர், அதன் விலையும் உயர்ந்து கொண்டே போகின்றது. தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் 200 ரூபாவாகும். மேலதிகமாக 20 ரூபா மற்றும் 70 ரூபாவை பெற வேண்டுமாயின் தோட்டத்தில் 21 நாள் வேலை செய்தே ஆக வேண்டும். அவ்வாறு வேலை செய்யாவிடின் குறிப்பிட்ட மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இது தொழிலாளர்களுக்கு இரண்டு வருட ஒப்பந்தத்தில் இணைக்கப்படும் சாபக் கேடாகும்.
மேலும், ஒப்பந்தம் பற்றிய விளக்கத்தினை தோட்ட மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஒப்பந்தங்களில் அடங்கியுள்ள விடயங்கள் என்ன என்பதை தோட்ட மக்களுக்கு அறிவிக்க வேண்டும். இது இவ்வாறு இருக்க தோட்டத் தொழிலாளர்களைத் தங்களது தொழிற்சங்கங்களில் இணைத்துக் கொள்ள அக்கறையுடன் செயற்படுபவர்கள் தொழிலாளர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும். ஜூன் மாத காலப் பகுதியில் வழங்கப்படும் வாக்காளர் பட்டியலைப் பூர்த்தி செய்து கொடுக்கவும் வாக்காளராக இல்லாதோரை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான சகல வழிகளையும் செய்து கொடுக்க வேண்டும். எமது ஜனாதிபதி இந்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் இந் நாட்டு பிரஜைகள் எனக் கூறியும் இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்ய மறுக்கின்றனர்.
ஆகவே தொழிலாளர்களின் சந்தாவை மட்டும் எதிர்பார்க்காமல் அவர்களின் நலன் கருதி வாக்காளர்களாகப் பதிவு செய்ய ஏற்பாடு செய்து கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தோட்டக் குடியிருப்புகளுக்கு கிராம சேவையாளர்கள் நேரடியாகச் சென்று படிவங்களை வழங்குவதுடன் அவர்களின் குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோரை வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டியது கிராம சேவையாளரின் கடமையாகும்.
தொழிற்சங்கங்கள் தோட்டங்களில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு சில தோட்டங்களில் தோட்டத்தில் வேலை செய்ய ஆள் பற்றாக்குறை உள்ளதால் ஒரு தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு சம்பளம் வழங்குகின்றனர். ஒரு சில தோட்டங்களில் வேலைக்கு இளைஞர், யுவதிகள் இருந்தும் பெயர் பதிவதில்லை. அப்படியே பெயர் பதிந்தாலும் ஊழியர் சேமலாப நிதி,ஊழியர் நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படுவதில்லை.
மலையகத்தைச் சேர்ந்த அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து பலம்மிக்க ஒரு தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டும்.
மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணத் தேர்தலின் போது எமது உறுப்பினர்கள் என்றும் இல்லாதவாறு அங்கத்துவத்தை இழந்துள்ளனர். அதற்குக் காரணம் எமது தலைவர்கள். எல்லோரும் தலைவர்களாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதனாலாகும். பலமான தொழிற்சங்க அமைப்பை உருவாக்கி எமது மக்களையும் இணைத்துக் கொண்டு எதிர்காலத்தைச் சிறந்ததொரு காலமாக உருவாக்க வேண்டிய பாரிய கடமை தற்போதைய தலைவர்களின் கையில் உள்ளது. அதை அவர்கள் எதிர்வரும் பராளுமன்றத் தேர்லுக்கு முன் ஏற்படுத்த வேண்டும்.
தினக்குரல்