இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
நாட்டின் பல பகுதிகளின் இன்னும் வறட்சியான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அனுமானித்து அறிவித்துள்ளது.
சப்ரகமுவ, வடமேல், வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், ஊவா உள்ளிட்ட பல மாகாணங்கள் இந்த வறட்சியான வானிலையை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, அதிக வெப்பமுடைய காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முடியம் வரை நிலவுகின்ற சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமார் தெரிவிக்கின்றார்.
அதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை அடுத்து, நீர்மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் நீர்மின் உற்பத்தி 90 சதவீதம் குறைந்துள்ளதால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது 10 சதவீதமான நீர்மின் உற்பத்தியே செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் நாள்தோறும் சூழற்சி முறையில் மின்சாரத்தை நிறுத்துவதற்கு மின்வலு, எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாளாந்தம் சுழற்சி முறையில் மின்சார தடை இருந்து வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினால், நாட்டிலுள்ள மின்சார தேவைக்கு ஏற்ற மின்சாரத்தை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர்மின் உற்பத்தி இயல்புக்கு திரும்பும் வரை, மின்சார சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதால் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சேமித்துக் கொள்ளும் சாத்தியம் உள்ளதாகவும் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த மூன்று மாத காலத்திற்கு நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் இரண்டு மின்குமிழ்களை அணைக்கும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், அரச நிறுவனங்கள், மத ஸ்தானங்கள் மற்றம் வணிக நிறுவனங்களில் மின்சார தேவையை 10 சதவீதம் குறைப்பதற்கும், தேவையேற்படின் மின்குமிழ்களை அணைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வீதி விளக்குகளை வழக்கமாக அணைக்கும் நேரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே அவற்றை அணைத்து விடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நன்றி- பி.பி.சி தமிழ்