Tuesday, May 19, 2009

கல்வித்துறை வளர்ச்சியில் தங்கியுள்ள மலையக சமூகத்தின் விடிவு

மலையகச் சமூகத்திலிருந்து ஒட்டு மொத்தமாக இதுவரைக்கும் இலங்கையில் காணப்படுகின்ற பல தொழில் துறைகளுக்கும் இம்மக்கள் பூரணமாக உள்வாங்கப்படவில்லை எனலாம். அரசாங்க ஊழியர்களாக ஆசிரிய தொழிலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களில் பெருந்தொகையானோர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். பல்வேறு தொழில் துறைகளுக்கும், தொழில் சார்ந்தவர்களை உருவாக்க முடியாமைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
பாடசாலைகளில் உள்ள வளப்பற்றாக்குறை, உயர்கல்வி வசதியின்மை, பாட ஆசிரியர் பற்றாக்குறை மனிதவள, பௌதீகவளப் பற்றாக்குறை, மற்றும் சிறந்த முகாமைத்துவம் இன்மை, மாணவர்களின் வறுமை, போன்ற பல்வேறு விடயங்களை முன்வைக்கலாம்.
கடந்தகால வரலாற்றுத் தவறுகளையும், பிழைகளையும் சுட்டிக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. இனிவரும் தசாப்தங்களில் மலையகச் சமூகத்தின் இடப் பெயர்வுக்கு கல்வியே ஒரு மூல காரணியாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். எந்த ஒரு சமூகமும் தமது இருப்பை உயர்த்திக் கொள்வதற்கு கல்வியை ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். இதனை எவ்வாறு பயன்படுத்துவது யார் பயன்படுத்துவது? எப்படி பயன்படுத்துவது போன்ற பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டியுள்ளது. சிலர் மேல் பழியைப் போட்டுவிட்டு சிலர் தப்பித்துக் கொள்ளவும் கூடாது.
கல்வியை ஒரு சமூகத்திற்கு வழங்குவது யாருடைய பொறுப்பு. ஏன் ஒரு சமூகத்திற்கு கல்வி அவசியம். எவ்வாறான கல்வியை வழங்க வேண்டும் என பல கேள்விகள் எழுகின்றன.
இந்நிலையில் பூனைக்கு மணிகட்டுவது யார்? என பாத்துக் கொண்டிருப்பதற்கான காலம் இதுவல்ல. யார் யார் இத்துறைக்கு பொறுப்பாக இருக்கின்றார்களோ அவர்களூடாக எதிர்வரும் தசாப்தங்களுக்கு ஏற்றவாறு தூரநோக்கோடு செயற்பட வேண்டியது பலரின் கடமையும், சமூக பொறுப்புமாகும்.
இச்சமூக பொறுப்பை ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், புத்திஜீவிகள், நலன் விரும்பிகள், அரசியல்வாதிகள், சமூக நிறுவனங்கள், பெற்றோர்கள், மலையகச் சமூகத்தால் கல்வியை முன்னேற்றக் கூடிய துறைசார்ந்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலமாகும்.
மலையகச் சமூகத்தின் விடிவு கல்வித்துறையின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது. எனவே இந்த வளர்ச்சியின் முழுப்பங்கையும் கொண்டிருக்கின்ற ஆசிரியர்கள் முதலில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முழு அக்கறைக் கொண்டு ஒரு தியாகச் சிந்தனையோடும், இலட்சிய வெறியோடும் கற்பிக்க வேண்டியது அவசியமாகும். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பல பாடசாலைகள் இன்று ஒரு மாணவனைக் கூட சித்தியடையச் செய்வதற்கு தவறி விடுகின்றன. இவ்வாறான விடயங்களுக்கு தொடர்ந்து மாணவர்களையும், பெற்றோர்களையும் பரீட்சை வினாத்தாள்கள் கடினம் எனக் கூறி இனியும் சமாளிக்க முடியாது.
எது எப்படி இருப்பினும் தேசிய மட்டத்தில் நடைபெறும் போட்டிப் பரீட்சைகளுக்கு தேசிய மட்டத்துடன் போட்டி போடக் கூடிய வகையில் மாணவர்களுக்கு புதிய விடயங்களை கொடுப்பது ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். இனிமேலும் சில விடயங்களை முன்மாதிரியாகக் கொண்டு சேவை செய்வது பெருந்தோட்ட ஆசிரிய சமூகத்தின் கடமையாகும். 2008ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சில பின்தங்கிய பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை வரவேற்கத்தக்கது.
ஒவ்வொரு ஆசிரியரும் தனது வகுப்பு மாணவர்களின் நன்மைகருதி கற்பிக்க வேண்டும். இது ஒரு சமூகப் பொறுப்பும் கடமையும் ஆகும். பல சவால்களுக்கு மத்தியிலும் மாணவர்களுக்கு கற்பித்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை சமூகம் உற்சாகப்படுத்த வேண்டும். இவர்களை பாராட்டி கௌரவிக்க வேண்டும். இதன் போதே நல்ல ஆசிரியர்களை இனம் காண முடியும்.
மாணவர்கள் இல்லாவிட்டால் கல்வி அமைச்சு தொடக்கம் பாடசாலை சிற்றூழியர்கள் வரை வேலையற்ற ஒன்றாகிவிடும். எனவே பாடசாலை ஒன்று சிறப்பாக தொடர்ந்து இருக்க வேண்டுமானால் அங்கு உயிரோட்டமுள்ள விடயங்கள் நடைபெற வேண்டும். பாடசாலை என்பது ஒரு வைத்தியசாலையைப் போன்றது. அங்கு சில நோயுள்ளவர்கள் வேலைகளால் படிக்காத மெல்ல கற்கும், கற்புல செவிப்புல குறைபாடுடையவர்கள், ஊனமுற்றவர்கள், பின்தங்கிய சமூகச் சூழலில் உள்ளவர்கள் வறுமை நிலையிலுள்ள மாணவர்கள், போசாக்கற்ற மாணவர்கள், வீட்டுப் பிரச்சினைகள் உள்ள மாணவர்கள், போக்குவரத்து பிரச்சினைகள் (வீட்டில் சிறந்த வழிகாட்டல் இல்லாத மாணவர்கள், தாய் அல்லது தந்தை வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகள், உறவினர், விடுதிகளில் தங்கி படிக்கும் பிள்ளைகள், மனநிலை பாதிக்கப்பட்ட இயல்பாகவே கூச்ச சுபாவம் உள்ள மாணவர்கள் கெட்ட பழக்கவழக்கங்கள் கெட்ட நண்பர்களும் உடைய மாணவர்கள், பாடசாலைக்கு சென்றும் படிக்க விரும்பாத மாணவர்கள் சில வசதியான குடும்பத்தில் வளரும் மாணவர்கள், ஆசிரியர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் மாணவர்கள், சில ஆசிரியர்களை விரும்பாத மாணவர்கள், டியூசனில் மட்டும் படித்தால் போதும் என நினைக்கும் மாணவர்கள், அடிக்கடி பாடசாலைக்கு வராத மாணவர்கள், பெற்றோர்கள், அக்கறையில்லாத பல பெருந்தோட்ட மாணவர்கள், போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குப் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் இருக்கின்றனர். எனவே இவை யாவற்றையும் கருத்தில் கொண்டு ஒரு ஆசிரியர் கற்பிக்க முன்வரும் போதே பரீட்சையில் வெற்றி பெறலாம் என்பது மட்டும் உண்மை.
எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய பல வேலைத் திட்டங்களை இன்றைய பெருந்தோட்ட மாணவர்களில் சிலர் ஓரளவு வசதியாக இருக்கின்றார்கள் என்பது உண்மை. இவர்களுக்கு அறிவு வறுமையே காணப்படுகின்றது.
இம்மாணவர்களுக்கு கல்வியின் பயன், முக்கியத்துவம், எதிர்கால வேலைவாய்ப்புக்கள், உயர் கல்வி வாய்ப்புக்கள் சமூக இடப் பெயர்வுகள், ஏனைய சமூகத்தோடு சேர்ந்து வாழ்வதற்கு, எமது சமூகத்தின் பழிச் சொல்லில் இருந்து விடுபடுவதற்கு, உலக மயமாக்கலின் விளைவுகள் போட்டியான உலகத்தோடு வாழ்வதற்கு வாழ்க்கைத்தரம் சமூக அந்தஸ்து உயர்வதற்கு, எமது சமூகத்தில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் சகல துறைகளிலும் உருவாகுவதற்கு பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
பாடசாலைகளில் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டங்களும் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி கருத்தரங்குகளும் செயலமர்வுகளும், மணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல்களும் இனிவரும் காலங்களில் மலையகம் தோறும் ஏற்பாடு செய்ய வேண்டும். கல்வி வளர்ச்சி என்பது நீண்டகால வேளாண்மையாகும். அறுவடை செய்வதற்கு நீண்டகாலம் எடுக்கும். எனவே மலையகத்தின் எதிர்கால கல்விச் செயற்பாடுகளுக்கு ஒரு கூட்டு முயற்சியே தேவைப்படுகின்றது.
எனவே மலையகத்தின் எதிர்காலம் இன்றைய காலத்தில் படிக்கின்ற மாணவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இம்மாணவர்களின் பெறுபேற்று அடைவுகளை உயர்த்தக் கூடியவாறு, கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் போன்ற அனைவரும் ஒரே நோக்கத்தில் செயல்பட வேண்டும். எமக்கு தேவை கல்வி என்ற வாசகத்திற்கு ஏற்ப நல்ல பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இலங்கையின் பிரதி கல்வி அமைச்சர் மலையகச் சமூகத்தைச் சார்ந்தவர். அதே போல் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சரும் மலையகச் சமூகத்தைச் சார்ந்தவர். எனவே இவர்கள் இருவரும் மலையகத்தின் எதிர்கால கல்வித் திட்டங்களை தூரநோக்கோடு கல்வி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு க.பொ.த. சாதாரன தரப் பெறுபேறு, உயர் தர பெறுபேறு, கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞான பிரிவுகளில் பல பாடசாலைகளில் வீழ்ச்சி போக்கை காட்டுகின்றன. (கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம்) இந்த குறைபாட்டை சம்பந்தப்பட்டவர்கள் முன்வந்து இதற்கான பரிகாரங்களைத் தேட வேண்டும். இன்றும் சில பிரபல பாடசாலைகளில் 140 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதில் 100 மாணவர்கள் கணிதப் பாடத்தில் சித்தியடைய தவறி விட்டார்கள். இம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு யார் பொறுப்பு?
நன்றி-தினகரன்

No comments: