Wednesday, September 2, 2009

போராட்டங்களில் பங்கேற்கத் தயார்- மலையக தொழிற்சங்கங்கள்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வலியுறுத்தும் எந்தவொரு போராட்டத்தையும் ஆதரிக்க தாம் தயார் என மலையக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மலையக மக்கள் முன்னணி- தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தில் பங்கெடுக்க பின்நிற்காது. கட்டாயமாக இன்றைய வாழ்க்கையை ஓரளவாவது சமாளிக்க 600 நாட் சம்பளமாக வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கடந்த காலத்தில் நடந்து கொண்ட முறையிலிருந்து விடுபட்டு சமூக நலனில் அக்கறை காட்டும் வகையில் நடவடிக்கையெடுக்க வேண்டும். ஐ.தே.க இந்த விடயத்தில் ஒதுங்கியிருக்கக் கூடாது. உழைப்பவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க மறுப்பது மனிதாபிமான செயலாகாது. போராட்டம் நடத்தி சம்பள உயர்வு பெறுவதென்பது தொழிலாளர்களின் உரிமைகளுக்கு கடிவாளம் போடப்பட்டது போன்றதொரு நிலையாகும்.
தொழிலாளர் தேசிய சங்கம்:- தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 500 ரூபா பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டு இறுதி வரை செயற்பட வேண்டும்.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி:- தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் 500 ரூபாவுக்கும் குறையாத சம்பளம் இன்றியமையாததாகும். இதனை பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற்சஙகங்கள் இதய சுத்தியுடன் போராட்டங்களை முன்னெடுப்பது அவசியம். இந்த விடயத்தில் தொழிலாளர்களை ஏமாற்றும் வகையிலான எத்தகைய செயற்பாடுகள் இடம் பெற்றாலும் அவற்றுக்கு எதிராக தமது தொழிற்சங்கம் போராடும்.
தொழிலாளர் விடுதலை முன்னணி: சம்பள உயர்வுக்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்காமைக்கு தொழிற்சங்கங்களின் ஒற்றுமையின்மையே காரணம். கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் சரியானதொரு போராட்டத்திற்கு முன்வருவது மூலமாக அனைத்துத் தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி போராட வழி வகுக்க வேண்டும்.
கொழும்பில் தொழிற்சங்கங்களின் ஒன்றுகூடல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ள ஒத்துழையாமைப் போராட்டம் குறித்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத மலையக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று கூடி ஆராயவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி, மலையகத் தொழிலாளர் முன்னணி, அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பனவற்றின் முக்கிய பிரதிநிதிகளே ஆராயவுள்ளதாக சதாசிவம் தெரிவித்தார்