Wednesday, June 29, 2016

தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண போராட்டத்திற்கு அழைப்பு

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான 2500ரூபா இடைக்கால கொடுப்பனவை தோட்ட கம்பனிகள் வழங்காமல், மாற்று திட்டத்தை முன்வைக்க முயல்வதாக குற்றஞ்சாட்டிய முன்னணி சோசலிஷ சட்சியின் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் அமைப்பாளரும் செயலாளருமாகிய துமிந்த நாகமுவ தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளில் பாராளுமன்றம் சென்றுள்ளவர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதில்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க மாத்திரமே விரும்புகின்றனர் என்றார்.

29-06-2016 அன்று ஹட்டனில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உடன்படிக்கை 2015.03.31ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், உடன்படிக்கை பேச்சுவார்தை இழுபறி நிலையில் இருந்தது. 

இந் நிலையில் பொருளாதார நெருக்கடியில் உள்ள தொழிலாளர்களுக்கு இடைக்கால தொகையாக 2500ரூபாவை வழங்க அரசாங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றபட்டது. எனினும் தோட்ட கம்பனிகள் தட்டி கழிக்கும் நோக்கில் ஈடுபட்டுள்ளதுடன், மாற்று திட்டத்தை முன்வைக்க முனைகின்றனர். நாம் அதனை எதிர்கின்றோம். 

தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளில் பாராளுமன்றம் சென்றுள்ள திகாம்பரம், தொண்டமான் போன்றோர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதில்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க மாத்திரமே விரும்புகின்றனர். 

தேயிலை மலையில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் கால்களில் அட்டை கடித்து இரத்தம் உறிஞ்சுவது போலவே மலையக அரசியல்வாதிகளும் தொழிலாளர்களின் பிரச்சினையில் குளிர் காய்கின்றனர்.

200 வருட காலமாக இலங்கையில் வாழும் தோட்ட தொழிலாளர்களும் ஏனைய சமூகத்தை போல, சகல உரிமைகளும் உடையவர்களாக வாழவேண்டும். நாட் சாம்பளமாக 1000 ரூபாவும் காணி மற்றும் வீட்டுரிமையும் வழங்கபட வேண்டுமென தெரிவித்தார். 

எமது போரட்டமானது தமிழ் சிங்கள் முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தே ஆரம்பிக்க உள்ளோம். ஆகவே இப் போராட்டத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் சமுக அமைப்புகளும் தோட்ட தொழிலாளர்களும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். 

கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கவும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்டக்கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களுக்கான சம்பளப்பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவர் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களோடு இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடாத்தி தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்தி தர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கான திகதி இதுவரை எமக்கு அறிவிக்கப்படவில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். 

தொழிலாளர்களது சம்பள உயர்வு தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நேரடியாக தோட்டக் கம்பனிகளுடனும் தொழில் அமைச்சு ஊடாகவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டபோதும் தோட்டக் கம்பனிகள் என்றுமில்லாதவாறு பிடிவாதமாக இருந்து வருகின்றனது என்பது தாங்கள் அறிந்ததே.

தொழிலாளகளுக்கான சம்பள உயர்வு வழங்கப்படாமையினால் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதை நாம் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. இப்பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டு வருவதால் தொழிலாளர்கள் அதிருப்தியும், விரக்தியும் அடைந்த நிலையில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். 

இராமநாதன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதிகள் தொழில் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனிவிரத்ன, முதலாளிமார் சம்மேளனம் செயலாளர் நாயகம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.