Thursday, June 30, 2016

இலங்கை தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்தின் யோசனையை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுப்பு

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய யோசனையை ஏற்கப்போவதில்லை என தொழிற்சங்கங்கள்  தெரிவித்துள்ளன.
தற்போது தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற 620 ரூபாய் ஒரு நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றன.
இதன் காரணமாக, தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்களுக்கும் இடையிலான கூட்டு ஓப்பந்தம் காலாவதியாகி 15 மாதங்களாகி விட்ட போதிலும், அதனை புதுப்பிக்க முடியாமல் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.
சம்மேளனத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள யோசனையில், 12 நாட்களுக்கு மட்டும் 720 ரூபாய் நாள் சம்பளம் வழங்கப்படும் . ஏனைய நாட்களில், பறிக்கப்படும் தேயிலை கொழுந்தின் நிறைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் துனைத் தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம், இந்த யோசனை சாத்தியமற்றது என்று கூறியுள்ளார்.
12 நாட்களை தவிர்த்து, ஏனைய நாட்களில் சம்பளம் கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவித்துள்ள அவர் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடையும் காலங்களில் தொழிலாளர்களுக்கு இது பாதிப்பாக அமையும் என்று தெரிவித்தார்.
மற்றுமோர் தொழிற்சங்கமான லங்கா பெருந்தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரான எஸ். இராமநாதன், தொழிலாளர்களுக்கு 12 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் திட்டத்திற்கான முயற்சி இது என்று தெரிவித்தார்.
மலையக தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 620 ரூபாய் நாள் என்பது 2013-ஆம் ஆண்டு உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்களுக்குமிடையிலான கூட்டு ஓப்பந்தத்தின் போது நிர்ணயம் செய்யப்பட்டது.
இரு வருடங்களுக்கு ஒரு தடவை செய்யப்படும் கூட்டு ஒப்பந்தம், கடந்த வருடம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கள் முன் வைத்துள்ள கோரிக்கை காரணமாக 15 மாதங்கள் கடந்தும், அந்த ஓப்பந்தம் தொடர்பாக இழுபறி நிலையே காணப்படுகிறது.
-நன்றி- பி.பி.சி -