Monday, February 1, 2010


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலையகத்தில் பெருவெற்றி பெற்றுள்ளார் - ஆறுமுகன் தொண்டமான்


இலங்கை வாழ் ஒட்டுமொத்த தமிழர்களும், வடகிழக்கு மக்களும் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவினை ஆதரிக்க மலையகத்தின் பலம் பெரும் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டும் குறிப்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் வெற்றி பெறுவார் என உறுதியாக கூறிவந்தார்.

இந்நிலையில் இவரது கூற்றினை ஏற்றுக் கொள்ளாத அக்கட்சி உறுப்பினர்கள் சிலர் அக்கட்சியை விட்டு விலகி சென்ற போதிலும், அமைச்சர் தொண்டமான் அந்த உறுதியுடன் செயற்பட்டார். இவரது ஆதரவுடன் ஏற்கனவே இவர் கூறியது போல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 18 இலட்சம் மேலதிக வாக்குளால் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் நேர்காணல்



கேள்வி: நீங்கள் ஏற்கனவே கூறியதுபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டாரே?

பதில்: உண்மைதான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலையக மக்களுக்குமட்டுமல்ல நாட்டிலுள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அதனால் அவரது வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இது தெரியாத அரசியல் ஞானமற்றவர்கள்தான்,

ஜனாதிபதி தோல்வி அடைவார் என கூறி, அவருக்கெதிராக செயற்பட்டு தங்களையும் இழந்து வருகின்றனர். ஜனாதிபதியின் வெற்றிக்கு மலையக மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.


கேள்வி: நுவரெலியா மாவட்டம் எதிரணி வசமானதே?

பதில்: நுவரெலியா மாவட்டத்தை மட்டும் கவனத்தின் கொள்ளக் கூடாது. மலையக மக்கள் பரந்து வாழும் பகுதிகளிலும் ஜனாதிபதி அமோக வெற்றி பெற்றுள்ளார். மலையக மக்களின் ஆதரவு இல்லாமல் அவரால் அமோக வெற்றி பெற்றிருக் முடியாது.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், இ.தொ.கா. எதிர்க்கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவினை ஆதரித்தது. இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மிடையிலான வாக்கு வித்தியாசம் ஒரு இலட்சத்திற்கு மேலதிகமாக காணப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் குறைந்த எண்ணிக்கையான வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். ஆனால் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ஒரு இலட்சத்து 51 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளதுடன், எதிரணி வேட்பாளருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 29 ஆயிரமாகும். இதனை ஒப்பிடுகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி அமோக வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறவேண்டும்.

அதுமட்டுமல்ல மலையக மக்கள் உள்ள சகல மாவட்டங்களிலும் இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளார். இதற்கு இ.தொ.கா பெரும் பங்களிப்புச் செய்துள்ளது.


கேள்வி: அனைத்து தமிழ் பிரிவினரும், எதிரணி வேட்பாளரை ஆதரிக்க நீங்கள் மட்டும் எவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை ஆதரித்தீர்கள்?

பதில்: என்ன சொல்கியர்கள்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலையக மக்களை ஏனைய சமூகங்களுடன் சமமாக மதித்து அவர்களுக்கு கடந்த 4 வருடங்களாக பல்வேறு அபிவிருத்திப் பணிகள் அரச மற்றும் ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளார். இதற்கு நன்றி செலுத்தப்படவேண்டும் என்பதற்காகவே நாம் அவருக்கு ஆதரவு அளித்தோம். எமது வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மலையக மக்கள் நன்றியுணர்வுடன் வாக்களித்துள்ளனர். அத்துடன் அவர்களின் பாதுகாப்பினையும் கடந்த காலங்களில் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளதுடன் விசாரணையின்றி சிறையில் வாடிய மலையக இளைஞர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் இதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா?


கேள்வி: இ.தொ.கா தேசிய அமைப்பாளர் ஆர். யோகராஜன் உள்ளிட்ட பலர் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டனரே? அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வீர்களா?

பதில்: 3 பேர் கட்சியிலிருந்து விலகிவிட்டதற்காக எமது கட்சி பலமிழக்கவில்லை. பலம் கூடியுள்ளது. அவர்கள் தனிப்பட்ட சுயலாபத்திற்காக சென்றுள்ளனர் அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள நாம் விரும்பவில்லை. அதனை எமது தொண்டர்களும் விரும்பவில்லை. அரசியல் ஞான மற்றவர்களால் எமது சமூகத்திற்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை.


கேள்வி: கட்சியைவிட்டு விலகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரி. வி. சென்னன், ஏ. எம். டி. இராஜன் போன்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்துகொண்டுள்ளனரே?

பதில்: இவர்கள் ஐயா (அமரர் தொண்டமான்) காலத்திலிருந்து கட்சியை கட்டி காத்ததுடன், கட்சிக்காக பாடுபட்டவர்கள். தற்போது விலகியவர்கள் கட்சியினை பயன்படுத்தி தம்மை வளப்படுத்திக் கொண்டவர்கள். இவர்களால் மலையக சமூகத்திற்கு எவ்வித நன்மையும் ஏற்பட போவதில்லை.

இந்த விமர்சனங்களினால் அவர்களே அவர்களுக்கு குழிதோண்டிக் கொள்கின்றனர் என்பதனை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.


கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியின் பின்னர் அவரை போய் சந்தித்தீர்களா? மலையகத்தின் எதிர்கால திட்டம் குறித்து அவருடன் கலந்துரையாடினீர்களா?

பதில்: சந்தித்தேன், வாழ்த்துக் கூறினேன். மலையக மக்களின் அபிவிருத்திற்கு நாம் 10 ஆண்டு திட்டம் +றிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அவர் ஏற்கனவே ஏற்றுக்கொண்டு, பல பதவிகளையும் நிதிகளையும் வழங்கினார். இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதியளித்துள்ளார்.

இதன் காரணமாகவே தான் நாம் நிபந்தனையற்ற ஆதரவினை இத்தேர்தலில் ஜனாதிபதிக்கு வழங்கினோம். மலையக சமூகத்திற்கு என்னென்ன தேவை என்பதனை நாம் திட்டமிட்டு காலத்திற்கு ஏற்றால் போல் செயற்படுவோம். எங்களை விமர்சனம் செய்பவர்களுக்கும் நாம் உதவி செய்துள்ளோம். அத்துடன், மலையக மக்கள் இரண்டாந்தர பிரஜையல்ல என்பதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு ஏனைய சமூகத்துடன் சமமான முறையில் அவர்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றார்.

அத்துடன் இ.தொ.கா. தனிப்பட்ட எவருக்கும் எதனையும் செய்ய விழையாது. மலையக சமூகத்திற்கு தான் செய்யும் இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது உண்மையாகும்.


கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவீர்களா? அல்லது வேறு கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவீர்களா?

பதில்: பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானவுடன், இது குறித்து எமது கட்சி கூடி தீர்மானம் மேற்கொள்ளும்.


கேள்வி: சபரகமுவ மாகாண தமிழ் கல்விப் பணிப்பாளர்கள் பலர் பல்வேறு காரணங்களினால் பதவி இழந்துள்ளனர். இந்நிலையில் இம்மாகாண தமிழ் கல்வி அபிவிருத்தி கேள்விக்குறியாகும் நிலை காணப்படுகின்றது? இது குறித்து,

பதில்: இவ்வாறானதொரு நிலை முதற்தடவையாக எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ணுர்கள், அங்குள்ள மக்கள் தமது தேவைகுறித்து என்னிடம், தொடர்பு கொள்ளும் பொருட்டு இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

எமது சேவை மலையக மக்களுக்கு எப்போதும் கிடைக்கும்.


கேள்வி: இறுதியாக மலையக மக்களுக்கு என்ன கூற விரும்புகியர்கள்?

பதில்: மலையக மக்கள் ஒற்றுமையாக எம்முடன் இணைந்து தமது தேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை பெற்றுக் கொள்ள முடியும். வீண், விமர்சனங்கள் செய்து மக்களையும் ஏமாற்றாமல், தம்மையும் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். விமர்சனம் செய்வதனால் இ.தொ.கா.விற்கோ அதன் தலைமைக்கோ எவ்வித பாதிப்புமில்லை. விமர்சனம் செய்பவர்களுக்கு தான் என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும்.

நேர்கண்டவர்: எஸ். ஆர். இரவீந்திரன்

நன்றி – தினகரன் வாரமஞ்சரி