Tuesday, December 1, 2009

அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்கள்
வேதனை தரும் மலையகத்தின் நிலை


மலையகப் பாடசாலைகளில் மாணவர் தொகை வெகுவாக வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்னும் பத்தாண்டு காலப்பகுதியில் மாணவர் தொகை 40,000 ஆல் வீழ்ச்சியடையும் எனும் அதிர்ச்சித் தகவலை கல்வித் திணைக்களங்களின் மூலமாக அறிய முடிகின்றது.


மலையகம் கல்வியில் வீறுகொண்டு எழப் புறப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் மாணவர்கள் தொகை இவ்வாறு வீழ்ச்சியடைவதற்கான காரணம் என்ன? என ஆராய்ந்து பார்த்தபோது கிடைத்தத் தகவல்கள் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகவுள்ளன.

பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள துரித சரிவுகள், மாணவர்களின் இடைவிலகல் என்பன இதற்கான காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன. மலையகம் என்னதான் கல்வியில் கரிசனையோடு புறப்பட்டாலும் மறுபுறம் வறுமை எனும் கொடூரப்பிடி அவர்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

அதன் விளைவு மலையக பெருந்தோட்டப்புற பகுதிகளிலுள்ள சிறுவர்கள் கொழும்பு மற்றும் வெளியிடங்களில் வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றது.

பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களில் பெருந்தொகையானோர் தோட்டப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருக்கின்றனர்.

தோட்டப்புறங்களில் கல்விக்கான வளங்கள் இல்லாமை, பொருளாதார நெருக்கடி, பெற்றோரின் அறியாமை என்பன மலையக சிறுவர்களின் கல்விக்கு முட்டுக்கமடடையிடுவதுடன் சிறுவர் தொழிலுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது.

இதனால் மலையக கல்வி மாத்திரமல்லாது பெருமளவான பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த மோசமான நிலையிலிருந்து மலையகத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் அவசியமும் மலையகத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் உண்டு.

முதலில் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து உணர்வது அவசியமாகிறது. பதினான்கு வயதுக்குக் குறைவான எவரையும் வேலைக்கு அமர்த்துவது குற்றம் என்ற சட்டம் நடைமுறையில் இருக்கின்றது. இவ்வாறு இருந்த போதிலும் பெருந்தோட்டப் புறங்களிலிருந்து 10,12 வயது சிறுவர்களையே வேலைக்கு வெளியிடங்களுக்கு அனுப்பும் கொடுமைகளை காணமுடிகிறது.

அது மாத்திரமல்லாது அவ்வாறு வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள் பல்வேறு வழிகளிலும் துன்புறுத்தப்படுகின்றனர்.

பிள்ளைகள் கல்வி கற்கும் வயதில் அவர்களது கல்வி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை படிக்க வைக்க வேண்டும். கல்வியறிவு மூலம் பிள்ளைகள் உலகத்தை அறிந்து கொள்வதுன் நற்பிரஜைகளாகவும் உருவாகின்றனர்.

அத்துடன் கல்வித் தரத்தை அடைவதன் மூலம் வேலை வாய்ப்பும் கிடைக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் தொழிலாளியாக வேலை செய்யும் நிலைமையும் இதனால் மாற்றம் ஏற்படுகின்றது.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவதானத்துடனும் அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.

உங்களது பிள்ளைகள் தொழில் செய்யும் இடங்களில் அவர்களுக்கு வயதுக்கு மீறிய வேலை வழங்கப்படுகின்றது. போதிய ஓய்வு கொடுப்பதில்லை. சில இடங்களில் முறையாக உணவு வழங்கப்படுவதில்லை. அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமும் கொடுக்கப்படுவதில்லை. அதிலும் ஒரு பகுதியை தரகர்களே பெற்றுக் கொள்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகளால் சிறுவர்களின் உடலும், உளமும் பாதிப்புக்குள்ளாகிறது. ஆத்துடன் எதிர்காலத்தில் அவர்களும் வன்முறையாளர்களாகவோ தவறான நடத்தையுடையவர்களாகவோ மாறிவிடும் அபாயம் உண்டு.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிச் சிந்தித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். ஏனைய இனத்தவர்கள் போல உங்கள் வாழ்வில் உயர்வு ஏற்பட வேண்டுமாயின் கல்வியில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.

இதேவேளை மதுபாவனையை மட்டுப்படுத்தி பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கூடியளவு அக்கறை செலுத்த வேண்டும்.

மலையகத்தில் அவதானிக்கக்கூடிய வேதனை தரும் விடயமொன்றையும் இங்கு சுட்டிக்கர்ட வேண்டியுள்ளது. அதாவது சட்ட விரோத கசிப்பு காய்ச்சல் நடவடிக்கைகளிலும் சில சிறுவர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதாகும்.

பாடசாலை செல்லும் மாணவர்கள் சட்ட விரோத போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர் என்பது கசப்பான உண்மை. இவ்வாறு சிறுவர்களின் எதிர்காலம் பாழடைவதற்கு பெற்றோர்களும் உடந்தையாக இருக்கின்றனர். இதனால் இது தொடர்பாக எம்மால் எவ்வித நவடிக்கைகளையும் எடுக்க முடியாதுள்ளது என சமூக முக்கியஸ்தர்கள் கையை விரிக்கின்றனர்.

பெற்றோர்கள் தரப்பிலும் நியாயமில்லாமல் இல்லை. அவர்களின் அறியாமையும் வறுமை நிலையும் இந்த நிலைமைக்கு காரணம் என்று கூற முடியும். எது எப்படியோ மலையகத்தின் நிலை உயர இவ்வாறான முட்டுக் கட்டைகளை களைய அனைவரும் முன்வர வேண்டியது அவசியம்

சிவா ஸ்ரீதரராவ்
இறக்குவானை

மலையக சமூக முன்னேற்றத்துக்காக போதை அரக்கனை ஒழிப்போம்!


மனிதனது இயல்பான நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய போதைவஸ்துக்களாக மதுபானம், கசிப்பு, கள், புகையிலை, பீடா, பாபுல், மயக்கமூட்டும் பாக்கு வகை, தூள் வகைகள், மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய வில்லை வகைகள், திரவங்கள், நாட்டு வைத்திய முறைகளில் தயாரிக்கப்படுகின்ற மாத்திரை வகைகள் என்பன உள்ளன. அதனைவிட தீவிரம் கூடிய போதைவஸ்து வகைகளான ‘கஞ்சா, ஹெரோயின், அபின், மர்ஜுவானா போன்றன உள்ளன.

இவ்வாறான போதையூட்டும் பொருட்கள், தீவிரத்தன்மையான போதைவஸ்துக்கள் என்பன இலங்கையிலும் பாவனையில் உள்ளன. இவற்றைப் பாவிப்போர் நாடெங்கிலும் பரந்து வாழ்கின்றனர். இவ்வாறு போதைக்கு அடிமையான நபர்களால் அவருக்கும் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நாட்டுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்ச்சி, சமூக முரண்பாடுகள், வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினைகள் என்பவற்றுக்கும் போதைப் பொருட்கள் காரணமாக அமைகின்றன.

இவற்றின் பாரதூர விளைவுகளை அறிந்தே ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக ‘மதுவுக்கு முற்றுப்புள்ளி’ என்ற செயற்றிட்டமும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் வளர்ந்தோர்களை விட இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனைப் பழக்கம் அதிகம் உள்ளது. பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் போதைவஸ்துப் பழக்கம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகரப் பிரதேசங்களில் மாத்திரமன்றி கிராமங்களிலும், பெருந்தோட்டப் பிரதேசங்களிலும் இந்நிலை காணப்படுவதாக அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன. இதனை விரைவாகத் தடுக்காதுவிடின் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெருந்தீங்குகளை யாராலும் தடுக்கமுடியாது

எனவே இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை சகலரும் மேற்கொள்ள வேண்டும்.
மதுப் பாவனையினால் மலையகத் தோட்டங்களில் சமூகப் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. அங்கு மது அரக்கன் ஒழிக்கப்படுவது அவசியம். மலையகத்தை மதுவை ஒழிக்கும் முயற்சிகளாக பொலிஸ்நிலைய அதிகாரங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில் தெளிவூட்டல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆகவே மாணவர்களும் இவற்றின் பாதக விளைவுகளை அறிந்து கல்வியில் கூடிய கவனத்தை செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தனது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு பிரயோசனமற்ற பிரஜையாக வாழ்வதில் எவ்வித பயனும் தனக்கோ பிறருக்கோ ஏற்படப் போவதில்லை.

த. குவேனி


நன்றி- தினகரன் வாரமஞ்சரி