Wednesday, April 8, 2009

தொழிலாளர்களின் பங்கு அட்டைகளை ஏமாற்றி பெற்றுக்கொள்ளும் நிர்வாகங்கள்
பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு கைமாறியதையடுத்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் புறந்தள்ளி விடக்கூடாது என்பதற்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு பங்கு அட்டைகள் வழங்கப்பட்டன. இப் பங்கு அட்டைகளை பெற்றுக் கொண்டதன் மூலம் தொழிலார்களும், தோட்டக் கம்பனியினருடன் இணைந்து தோட்டத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். இதன் மூலம் கம்பனிகளுக்கு வருடா வருடம் கிடைக்கும் இலாபப் பணத்தில் குறித்த சதவீதம் தொழிலாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. தோட்ட நிர்வாகங்களோ அல்லது கம்பனியினரோ தொழிலாளர்களிடத்தில் எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் நிலைக்கு பங்கு அட்டை முறைமை முற்றுப்புள்ளி வைத்தது.
அந்த பங்கு அட்டைகளை தொழிலாளர்களிடமிருந்து ஒரு பங்கு அட்டையை 1,500 – 2,000 ரூபாவுக்கு இடைப்பட்ட தொகைக்கு ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் பெற்றுக்கொள்வதாக தெரியவருகிறது. எதிர்காலத்தில் பங்கு அட்டைகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தொழிலாளர்கள் பங்கு அட்டைகளை நிர்வாகங்களிடம் விற்பதால் வருடா வருடம் கிடைக்கும் இலாப பங்கு பணம் வழங்கப்பட மாட்டாது. தோட்ட நிர்வாகங்களின் எதேச்சதிகார நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தொழிற்சங்கங்கள் கலந்தாலோசித்து கூட்டு ஒப்பந்தத்தை வலுவாக்க வேண்டும்
வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டுமானால் முதலில் தோட்டங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இன்றைய நிலையில் இது சாத்தியமற்றதாகும் ஆதலால் கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு சரத்தாக வாழ்க்கை செலவுக்கேற்ப சம்பளத்தை அந்தந்த காலத்தில் உரிய வகையில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் செய்து கொள்ளப்பட வேண்டும்.
2006ம் ஆண்டுடன் முடிவடைந்த பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தை மாதிரியாக வைத்துக் கொண்டு இதுகாலம் வரை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது.
இந்த நிர்ணயம் 2009ம் ஆண்டு மார்ச் மாதத்துடள் முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி தொழிற்சங்கங்கள் தீர்மானிக்க வேண்டியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தேயிலை விலை வீழ்;ந்துள்ளது எனக் கூறியும் வரட்சி காலங்களில் வேலையை குறைத்தும் தொழிலாளர்கள் வருமானமின்றி அவலநிலையில் இருப்பதைப்பற்றி எந்த ஒரு நிர்வாகமும் பொருட்படுத்தவில்லை.
ஏப்ரல் மாதத்தைத் தொடர்ந்து இனிவரும் மாதங்களில் கொழுந்து அதிகரிக்கும் அதேநேரம் தொழிலாளர்களின் வேதனத்தை கூட்டு ஒப்பந்தத்தால் மாத்திரமே அதிகரிக்க முடியும்.
தொழிற் சங்கங்கள் பயனற்ற விவாதங்களில் ஈடுபடாமல் ஒருங்கிணைந்து சம்பள உயர்வுக்கு ஒரே முகமாக செயல்படுவதன் மூலமே தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த முடியும்.
அரசு நேரடியாக தோட்டங்களில் ஈடுபட முடியாமலேயே தோட்டங்களின் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வரவு செலவுத திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்த முடியாத நிலை உள்ளது.
விலகி நின்று விமர்சிப்பவர்கள் இதை உணர்ந்து தொழிற்சங்க பலத்தை ஒருமுகப்படுத்தி தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும் வகையில் செயல்பட முன்வர வேண்டும்
தொழிற்சங்கங்கள் சர்ச்சைகளில் ஈடுபடுவதை விட சம்பளத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என உடனடியாக கலந்தாலோசித்து கூட்டு ஒப்பந்தத்தை வலுவாக்க வேண்டும் சர்ச்சைகளில் ஈடுபடுவதின் மூலம் பெருந்தோட்டக் கம்பனிகளே இலாபமடையும்.
எஸ். ஜோதிவேல்
ஐ.தொ.கா. நிர்வாகச் செயலாளர்.
தொழிலாளர்களுக்கு நன்மையளிப்பதாக கூறப்படும் கூட்டு ஒப்பந்தம் துரோகமானது.

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் பிரதான தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் நன்மையடைந்து வருகின்றனர் எனக் கூறுவது ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கு எதிரான துரோகச் செயலாகும் ம.ம.மு வலப்பனை பிரிவு பொறுப்பாளர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிடுகையில் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்ட சக்தியைச் சரியாக பயன்படுத்தி அவர்களின் தொழில் உரிமை, பாதுகாப்பு, வாழ்க்கை செலவின் உயர்விற்கேற்ற சம்பள உயர்வு மற்றும் அவர்களின் வாழ்வியல் ரீதியான தேவைகளுக்கு போதிய உத்தரவாதம் என்பவற்றைப் பெற்றுக்கொடுக்க தவறிய கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் அதனை நியாயப்படுத்துவது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் செயலுக்கு ஒப்பாகும்.

இவ் ஒப்பந்தத்தால் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டு வறுமையின் அகோரப் பிடியில் அகப்பட்டு "திணறுவதையும்' கம்பனி நிர்வாகங்களின் சர்வாதிகார செயல்பாடுகளினால் தொழிலாளர் உரிமை நசுக்கப்படுவதையும் நன்கு அறிந்துள்ள தலைமைகள் சில இவ்வொப்பந்தம் பல நன்மைகள் பெற்றுக்கொடுத்துள்ளன எனக் கூறுவது வேடிக்கையாகும். இது தொழிலாளர் மீது பலவந்தமாக புதிய ஒப்பந்தத்தை செய்ய முற்படும் செயலாகும்.

மீண்டும் ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்யும் முன்பு கடந்தகால அனுபவங்கள், யதார்த்தபூர்வமான நடைமுறை சிக்கல்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தப் போகும் பல்வேறு விடயங்களையும் சட்ட வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகள், பொருளியல் நிபுணர்கள் ஆகிய தரப்பினருடன் கலந்துரையாட வேண்டும்.

வாழ்வியல் ரீதியில் தொழிலாளர்கள் வறுமையிலிருந்து விடுபட்டு, தொழில் ரீதியிலும் உரிமைகளுக்கும் உத்தரவாதம் கிடைக்கும் வகையில் தொழிலாளர்கள் விமோசனம் பெற்று உரிமைகள், சலுகைகள், சுதந்திரம் போன்றவற்றை அனுபவிக்கும் வகையில் இவ் ஒப்பந்தம் செய்யப்பட சம்பந்தப்பட்ட தொழிற்சங்க தரப்புகள் முன்வருவது காலத்தின் கட்டாய தேவையாகும்.

சர்வதேச தொழிற்சங்கங்களின் மரபு ரீதியான செயற்பாடுகளுக்கு எதிராகவும் சர்வாதிகார முறையில் பலவந்தமாகவும் ஒரு நிர்ப்பந்தம் மூலம் தொழிலாளர்களுக்கு எதிராக திணிக்கப்படும் கூட்டு ஒப்பந்தத்தை செய்து வருகிறது. அவ்வொப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் நன்மையடைந்து வருகின்றனர் என்று கூறுவது ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களுக்கு எதிரான துரோகச் செயலாகும்.

இக்கூட்டு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் யாவும் பல்வேறு வகையில் தொழிலாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை பல்வேறு துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், 95 சதவீதம் தொழிலாளர்கள் வெளிப்படையாக தமது எதிர்ப்பினை காட்டியுள்ளனர்.
மேலும், கூட்டு ஒப்பந்தம் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பலவற்றை தோட்ட நிர்வாகங்கள் அமுல்படுத்திய சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கப் போராட்டம் மூலம் அவற்றை எதிர்த்து வந்துள்ளதையும் எவரும் மறுக்க முடியாது. இது கடந்தகால நிகழ்வுகளின் உண்மையாகும்.

எனவே, தொழிலாளர்களுக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் நன்மை பெறக்கூடிய கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இதனை நிராகரித்து கூட்டு ஒப்பந்தம் செய்யப்படுமாயின் கூட்டு ஒப்பந்தம் செய்யும் தொழிற்சங்கங்கள் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.
பெருந்தோட்டப் பகுதிகளில் மாற்றத்தினை உருவாக்க பெண் தொழிலாளர்களே முன்வரவேண்டும்

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் மது என்ற அரக்கன் ஆக்கிரமித்திருக்கும் வரை அப் பகுதிகளில் முன்னேற்றகரமான மாற்றத்தினை என்றுமே எதிர்பார்க்கமுடியாது. இம் மாற்றத்தினை இலகுவில் ஏற்படுத்தக்கூடியவர்கள் பெண் தொழிலாளர்களே எனஇவ்வாறு, முன்னாள் பதுளை மாவட்ட பா.உ, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணித் தலைவருமான டி.வி. சென்னன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல் தொழிற்சங்கவாதிகள் மது போத்தல்களை தொழிலாளார்களுக்கு வழங்கிவந்தனர் ஆனால் அந்நிலை தற்போது தோட்டங்களில் தொழிற்சங்கங்களுக்கு அங்கத்துவங்களை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுபோன்ற சூழல் மலையகப்பகுதிகளில் அதிகரித்து காணப்படுவதனால் சமூகச் சீரழிவுகள் பெருமளவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெண்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகளினால் மட்டும், மலையகத்தில் மதுவினை முற்றாக ஒழிக்க முடியும். அந்நிலை ஏற்பட்டுவிட்டால் மலையகத்தின் பெரும் தோட்டப் பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டும் என்றார்.
டிக்கோயா லெதண்டி பகுதியில் காற்றுடன் கடும்மழை; வீடுகள் சேதம்

டிக்கோயா லெதண்டி கிராம சேவகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-04-2009) பிற்பகல் பெய்த பலத்த காற்றுடன் கூடிய அடைமழையினால் 22 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் இவற்றுள் எட்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த வீடுகளில் வாழ்ந்த 45 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

டிக்கோயா பிரதேசத்தின் டங்கல்ட் சமரவில், காபெக்ஸ், காசல்ரீ, ஒஸ்போன் ஆகிய தோட்டப்பகுதிகளில் மழையுடன் சுமார் 15 நிமிடங்கள் வீசிய மினிசூறாவளியினால் மேற்படி தோட்டப்பகுதிகளிலுள்ள கூரைத்தகரங்கள் பல காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளன. மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளதுடன் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால், பிரதேசத்தில் சில மணிநேரம் மின்சாரத் தடை ஏற்பட்டதோடு அட்டன் நோட்டன் பிரதான பாதையில் போக்குவரத்துகளும் தடைப்பட்டன.

இச் சம்பவத்தில் டங்கல்ட் தோட்டத்தில் 4 வீடுகளும் சமர்வில் தோட்டத்தில் 2 வீடுகளும் காபெக்ஸ் கொலனியில் 2 வீடுகளும் முழுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் 14 வீடுகள் சிறிய அளவிலான சேதத்துக்கு உள்ளாகியதாகவும் சேதவிபரங்கள் குறித்து கினிகத்தேனை பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் லெதண்டி பிரதேசத்துக்கான கிராம உத்தியோகஸ்தரான எஸ். டார்வின் தெரிவித்தார்.