Sunday, June 17, 2018

இரத்தினபுரியில் மண்சரிவு அபாயத்தில் கலபட தமிழ் வித்தியாலயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழையின் காரணமாக கலபட தமிழ் வித்தியாலம் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் தினேஸ் தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி கலபட பிரதான வீதியில் இருந்து 300 மீற்றர்  உயரத்தில்  அமைந்துள்ள  கலபட தமிழ் வித்தியாலய சுவர்கள் வெடிப்பு ஏற்பட்டுள்ளதோடு பாடசாலைக்கருகில் இருக்கும் மண் திட்டுக்கள் தொடர்ந்து இடிந்து வருவதாகவும் தெரிவித்தார். 

மேற்படி பாடசாலையில் முதலாம்; வகுப்பு தொடக்கம் ஒன்பதாம் வகுப்புவரை 162 பாடசாலை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு அதிபர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

மேற்படி பாடசாலையில்  எந்த நேரத்திலும் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மழை காலங்களில் பாடசாலையை நடாத்த முடியாத சூழ்நிலையால் மழை காலங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையும் தவிர்த்து வருகின்றார்கள்.

சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் பாடசாலை அமைப்பதற்கு பாதுகாப்பான இடத்தில் காணி கிடைக்காத காரணத்தால் மேற்படி பாடசாலையை அமைப்பதற்கு அப்புகஸ்த்தன்ன தோட்ட கம்பனிக்கு சொந்தமான கலபட தோட்டப் பிரிவில் தோட்ட கம்பனி காணி வழங்கப்பட்டிருந்தது. எனினும் M.B.R.O பரிசோதனையில் அந்த காணியில் பாடசாலை அமைப்பதற்கு தகுதியற்றது என தெரிவிக்கப்படுகிறது.

எனவே மேற்படி பாடசாலை அமைப்பதற்கு தேவையான காணியை பெற்றுதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிபர் மேலும்  தெரிவித்தார்.

Wednesday, June 13, 2018

தொழிலாளர் குடியிருப்பு தீயில் எரிந்தது

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் இன்று (13) காலை 09.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 (லயன் தொகுதியில்)தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்த வீடுகளில் குடியிருந்த 12 குடும்பங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 

எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீயில் சிக்காமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது. 

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. 

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Tuesday, June 12, 2018

சீரற்ற வானிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

மலையகத்தில் மீண்டும் நிலவும் சீரற்ற வானிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய பலத்த காற்று, அதன் விளைவாக ஏற்படும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில், மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், அப்பகுதியிலுள்ள மின் கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் (09) இரவு முதல், அப்பகுதிக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிப்பின் காரணமாக அக்கரப்பத்தனை, டயகம, மன்றாசி, ஹோல்புறுக், நாகசேனை, லிந்துலை, மெராயா ஆகிய பகுதி மக்கள், பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதோடு, வர்த்தக நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த ஊட்டுவள்ளி தோட்டப்பகுதியில் வீசிய கடும் காற்றால், வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.


இதேவேளை, நுவரெலியா கந்தப்பளையை அண்மித்த, ஹைபொரஸ்ட், பிரம்லி, லொரிஸ்டன், அல்மா கிரேமன், சீட்டன், குருந்தோயா உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட தோட்டப்பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக வீசிய கடும் காற்றால், மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
இதனால் கடந்த 4ஆம் திகதி முதல், அந்தப் பிரதேசங்களில் மின்விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளதென, பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டிக்கோயா பகுதியில் விசிய கடும் காற்றின் காரணமாக, ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா பகுதியில், பாரிய மரம் ஒன்று நேற்று (10) முறிந்து விழுந்ததில் போக்குவரத்துத் தடைப்பட்டிருந்ததென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
அத்துடன், மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்துள்ளமையால், டிக்கோயா பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளதென அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால், சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை, தொடர்ந்து அமுலிலிருப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில், இந்த அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருப்பதாக, நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதேவேளை, மலையகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால், சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும், லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகளும், கேன்னியோன் நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் நேற்றுத் திறக்கப்பட்டன. இதேவேளை, நோட்டன் பிரிஜ் விமல சுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் நேற்று திறக்கப்பட்டன. காசல்ரீ மற்றும் மௌசாகலை நீர்த்தேக்கமும், வழிந்தோடும் நிலையை எட்டியுள்ளதெனத் தெரிவிக்கப்படட்டுள்ளது.
கடும் மழை காரணமாக ஹட்டன், வட்டவல பகுதியில் தாழ் நிலப் பிரதேசங்களில் அமைந்துள்ள வீடுகள் பல, வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை ஹட்டன் டன்பார் பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், அந்த வீடு முழுமையாகப் பாதிப்படைந்துள்ளது.
நன்றி- தமிழ் மிரர்

Sunday, June 3, 2018

மண்சரிவு அபாயத்திலுள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை தற்போது ஆரம்பித்துவிட்டது. இலங்கையில் இயற்கை அனர்த்தமென்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது மலையகமாகவே இருக்கும். குறிப்பாக மே, ஜுன், ஜுலை, ஓகஸ்ட், டிசம்பர் மாதங்களில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்கொள்ளுகிறது மலையகம். இக்காலங்களில்தான் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மலையக மக்களுக்கு ஏற்படுகிறது.

எனவே பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அனர்த்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நூற்றுக்கு எழுபத்தைந்து சதவீதமான பெருந்தோட்டக் குடியிருப்புகள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதால் மலையகம் இவ்விடயம் குறித்துப் பெரிதும் அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களே பெரிதும் அச்சுறுத்தலுக்குட்பட்டுள்ளன.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட லயன் காம்பிராக்கள் ஒன்று மலையுச்சியில் அமைந்திருக்கும். அல்லது மலையடிவாரத்தில் அமைந்திருக்கும். இவ்வாறான மலைப் பாங்கு பகுதிகளிலும் சரிவான பகுதிகளிலும் தான் தற்போது மண்சரிவு ஏற்படுகிறது. மண்ணரிப்பு, முறையான நீர் வழிந்தோடக்கூடிய கான் வசதிகள் இன்மை, மரங்கள் தரிப்பு என இயற்கையும் செயற்கையும் கலந்ததான பௌதீகவியல் குளறுபடிகளினால் சிறு மழையென்றாலே உரு கொண்டு ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர் வெகு சுலபமாகவே இடப்பெயர்ச்சி செய்கிறது.

இதனால் இப்பகுதிகளில் வாழ்விடங்களைக் கொண்டிருக்கும் மலையக மக்கள் பயத்தோடும் பீதியோடும் எந்த நேரமும் லயக்காம்பிராவை விட்டு வெளியேறத் தயாராயிருப்பது வழமையான ஒன்று. இம்மக்கள் ஏறக்குறைய 200 வருடங்களாக குடியிருந்துவரும் லயக் காம்பிராக்கள் மனித வாழ்வுக்கு அருகதையற்ற நிலைக்குப் போய்விட்டது. கூரைகள், சுவர்கள் பலவீனமடைந்துபோய் காணப்படுகின்றன. நிலத்தடி நீர் கசிவினால் அடித்தளமே ஆட்டம் கண்டு போயுள்ளது. நிலச்சரிவு என்றாலும் மின்சார ஒழுக்கு என்றாலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியாத அளவுக்கு அமைவிடம் சிதிலமடைந்து போய்விட்டது. இதனைச் சீர்செய்வதென்பது பயனற்ற முயற்சி. இதனாலேயே இவர்களுக்குத் தனித்தனி வீடுகள் தேவை என்ற கோஷம் எழுப்பப்பட்டு வருகின்றது.

ஆனால் இதற்கான நடவடிக்கைகள் மந்த கதியிலேயே இடம் பெறுகின்றன. பல இடங்களில் வீடமைப்புக்காக நாட்டப்பட்ட அடிக்கற்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டிருக்கின்றன. இன்னும் சில இடங்களில் கட்டப்பட்ட வீடுகள் கையளிக்கப்படாமல் காடு மண்டிக்கிடக்கின்றன. வேறு சில பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கையை எதிர்நோக்கியிருக்கும் (தற்போது லயன் காம்பராக்கள் அமைந்துள்ள பகுதி) பிரதேசங்களுக்கு அருகிலேயே புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். உண்மையில் தோட்ட மக்களின் வீடமைப்புக்காக பாதுக்காப்பான காணிகளை வழங்குவதில் தோட்ட நிர்வாகங்கள் பொறுப்பற்ற நிலையிலேயே நடந்து கொள்கின்றன. அவை ஒதுக்கும் இடங்கள் குறித்து அவதானிகள் மத்தியில் திருப்தியில்லை.

இதே நேரம் தனிவீட்டுத் திட்டம் ஆமைவேககத்தில் நடைபெற்று வருவதால் இன்னும் பல வருடங்களுக்கு இம்மக்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியே வாழ வேண்டிய துர்ப்பாக்கியம். இவ்வாறான காரணங்களினால் லயக்காம்பிராக்கள் முற்று முழுதாகவே மக்கள் வாழக்கூடிய அந்தஸ்தை இழந்துவிட்டன. ஆனால் இதிலிருந்து மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
தனி வீட்டுதிட்டங்களில் மண்சரிவு அனர்த்தங்களை எதிர்நோக்கியவர்களுக்கும் மின் கசிவு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை என்கிறார் அமைச்சர் திகாம்பரம். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் இவ்வாறு பாதிக்கப்பட்ட மலையக மக்களில் பலர் இன்னும் தற்காலிக கூடாரங்களிலும் கைவிடப்பட்ட தொழிற்சாலைகளிலும் அவஸ்தைபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அண்மைய மழையால் தற்காலிக கூடாரங்களிலும் கூட நீர் பாய்ந்து சேதமுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிவாரணப் பொருட்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படுவது பற்றி அவதானமேதும் செலுத்தப்படவில்லை என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் மனக்குறையாக இருக்கிறது. மீரியபெத்தை மண்சரிவு அனர்த்தத்தின் பின் மலையக அரசியல்வாதிகளின் செயற்பாடு குறித்து விமர்சனங்கள் எழவே செய்தன. நுவரெலியா மாவட்டத்தில் உயிரிழப்புகள் இல்லாவிட்டாலும் பாதிப்புகள் ஏற்படவே செய்தன. தவிர, வருடாவருடம் நிகழும் இவ்வாறான காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகள் எதுவுமே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவில்லை.

ஒவ்வொரு வருடமும் இயற்கை அனர்த்த அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டிய அபாய நிலையில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் மாற்று குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டியது முக்கியமான பிரச்சினையாக உள்ளது. அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் தற்காலிக உதவிகளேயாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடைய முடியாது. அரசின் நிவாரணங்களே அவசியமானவை. இந்நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் நியாயமாக கிடைக்க வேண்டியவை. ஆனால் அந்த நிவாரணங்கள் மலையக மக்களை சென்றடைவதில் உரிய அக்கறை காட்டத்தான் யாருமே இல்லை.

அனர்த்தம் பற்றிய விபரங்களை ஆளுக்காள் சேகரித்தாலும் அதற்கான நிவாரணங்கள் வழங்கப்படுவதில் நியாயமாக நடந்து கொள்வதைத்தான் காணமுடியவில்லை. எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று பொதுவாக கூறிவிட்டு நழுவிக்கொள்ளும் நிலையிலேயே அரச அதிகாரிகளின் போக்கு காணப்படுகின்றது. காலி, களுத்துறை, மாத்தறை, பதுளை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி போன்ற மாவட்டங்கள் வருடாவருடம் இயற்கை அனர்தங்களுக்குட்படும் நிலையில் இதனால் அதிக இழப்புகளை மலையக மக்களே சந்திக்க வேண்டி நேரிடுகிறது. இவர்களின் வாழ்விடம் அமைந்துள்ள பகுதிகள் மேட்டு நிலங்களாகவும் சரிவுகளாகவும் இருப்பதால் மண்சரிவு, மரம் சரிந்து முறிந்து விழல், இடி, மின்னல் தாக்கம் போன்றவற்றின் தாக்கங்களால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றன. இதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியாதபடி பெருந்தோட்டக் கட்டமைப்பு முகாமைத்துவம் உள்ளது.

இவர்களை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் இடங்களிலிருந்து அகற்றி பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற எந்தத்திட்டமும் தோட்டக் கம்பனிகளிடம் இல்லை. அரசாங்கம் வீடமைப்பு திட்டங்களை ஏற்படுத்த முன்வந்தாலும் தேவையான, பாதுகாப்பான இடங்களை ஒதுக்கித் தருவதில் தோட்டக் கம்பனிகள் போதுமான ஒத்துழைப்பு வழங்குவதில்லை. மீரியபெத்தை மக்களுக்கு பாதுகாப்பான இட ஒதுக்கீடு செய்வதில் தோட்ட நிர்வாகம் காட்டியிருந்த அலட்சியம் பற்றி அரசு அதிகாரிகள் கூட விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவேதான் அனர்த்தம் என்று வந்துவிட்டால் அனைத்தையும் இழந்து அம்போவாகி விடுவோமோ என்று மக்கள் அச்சப்படும் நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையைப் போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படுவதோடு மீண்டும் இவ்வாறன அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்காதபடி பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புகளை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள 4000 வீடுகள், வழங்க உறுதியளித்துள்ள 10,000 வீடுகள் இந்த அரசாங்கத்தின் 25,000 தனித்தனி வீட்டுத் திட்டங்கள் மலையகத்துக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதற்கான முன்னகர்வுகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான வீட்டுத் திட்டங்களில் அனர்த்த அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்போர், ஆளாகலாமென எச்சரிக்கப்பட்டிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படுவது அவசியமே. ஏனெனில் அதிக மழை வீழ்ச்சி ஆரம்பமானதும் குடியிருப்புகளை விட்டு வெறியேற அறிவுறுத்துவதும் மழை குறைந்ததும் மீண்டும் பழைய இடங்களுக்கே திருப்ப பணிக்கப்படுவதுமே வழமையாக நடக்கும் விடயமாக இருக்கிறது. இடைக்கால தங்குமிடங்களாக பாடசாலை, கோவில், சனசமூக நிலையங்களே பயன்படுத்தப்படுகின்றன.
அதிகாரிகள் மட்டத்தில் எச்சரிக்கை விடுவதோடு அவர்கள் பணி முடிந்துபோய் விடுகின்றது. ஆனால் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுப்பவர்களுக்கு நிரந்தரமான மாற்று ஏற்பாடுகள் பற்றி எவருமே கவனமெடுப்பதில்லை. இதனால் மக்கள் மழை ஆரம்பித்துவிட்டால் பயத்துடனும் பதட்டத்துடனும் நாட்களை கழிக்க வேண்டியேற்படுகின்றது. இது குறித்து நியாயமாகவும் நேர்மையாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

அனர்த்த அபாயங்களை எதிர்நோக்கியிருக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் அமைத்துத் தரப்படும் என்று கூறப்படுகின்றது. இது துரிதப்படுத்தப்படுவது முக்கியம். கடந்த வாரம் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு தொகுதி வீடுகள் மண்சரிவு, மின்கசிவு விபத்துகளினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. எதிர்வரும் காலங்களில் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டங்களில் மண்சரிவு அபாயங்கள் நிலவும் பகுதிகளில் குடியிருப்புகளைக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே உசிதமானது. இல்லாவிடில் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் அகதி கோலம்பூண்டு அலைகழிப்புக்குள்ளாகும் அவலம் மட்டும் அகலப்போவதே இல்லை!

நன்றி- தினகரன் 

Thursday, May 24, 2018

மலையகத்தில் பாதிப்புகள்

கடந்த சில நாட்களாக, மலையத்தில் ​நிலவிவரும் சீரற்ற வானிலை, இன்றும் தொடர்ந்த நிலையில், மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார்.
கண்டி மாவட்டம்
கண்டி மாவட்டத்தில், இன்றுக் காலை வரை பெய்த கடும் மழையால், 278 குடும்பங்களைச் சேர்ந்த 1,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுள் 820 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டம்
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில், 337 குடும்பங்களைச் சேர்ந்த 1,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, நுவரெலியா மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.பி புஷ்பகுமார தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள், முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்வைக்கப்பட்டுள்ளனர் என்றும் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம், 68 வீடுகள் பகுதியளவிலும் 4 வீடுகளும் முற்றாகவும் சேதடைந்துள்ளன என்றும், இவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும், நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் 6,133 குடும்பங்களைச் சேர்ந்த 24,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, இரத்தினபுரி மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
மேற்படி மாவட்டத்தில் எலபாத்த, இரத்தினபுரி, கிரியெல்ல, அயகம, நிவித்திகல, களவான, எஹலியகொடை, குருவிட்ட, காவத்தை, ஓப்பநாயக்க, பெல்மதுளை, பலாங்கொடை, இம்புலபே, கொடக்கவெல ஆகிய 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 189 கிராம சேவர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால், இதுவரை 6 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளனவெனவும் 139 குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனவெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் 1,961 குடும்பங்களைச் சேர்ந்த 7,861 பேர் தத்தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும்   493 குடும்பங்களைச் சேர்ந்த 1,951 பேர், 38 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டம்
அத்தோடு, பதுளை மாவட்டத்தில், இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளன என்றும் 63 வீடுகள் தற்போது சேதமடைந்துள்ளன என்றும், பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார் தெரிவித்தார். அத்தோடு, 51 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர், இரண்டு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, பசறை, ஊவா பரணகம, ஹப்புத்தளை ஆகிய இடங்களில், மேலும் 60 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் மழை தொடர்ந்து பெய்யுமாயின், பதுளையில் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, மரங்கள், மின்தூண்கள், கற்பாறைகள் போன்றவை, வீதிகளில் விழுந்துள்ளமையால், மலையகத்தின் பல்வேறு வீதிகளுக்கான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன. பாரிய பாதை வெடிப்புக்கள், குடியிருப்பு வெடிப்புகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அத்தோடு, மழையுடன் சேர்ந்து, மலையத்தில் கடுமையான குளிரான வானிலை காணப்படுவதால். தொழிலாளர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸ்ஸாகலை, லக்ஷபான, கெனியன், விமலசுரேந்திர போன்ற நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையால், மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவொன்று, நேற்று (23) காலை முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெரீக்கிலோயர் தோட்டத்தில், மண்சரிவு அபாயம் காரணமாக, அங்கிருந்த 33 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள இரண்டு குடியிருப்புகள் சேதமடைந்த பின்னரே, குறித்த 33 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.
குறித்த தோட்டப் பகுதியில், குடியிருப்பொன்றுக்கு அடிப்பகுதியில் நீர் ஊற்றெடுத்துச் செல்வதாகவும் இது தொடர்பில், தேசிய மண் பரிசோதனை ஆய்வாளர்களால் அப்பகுதி ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Wednesday, May 16, 2018

மருந்தகங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை

பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படுகின்ற 'டிஸ்பென்சரி' எனப்படுகின்ற தோட்ட மருந்தகங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டு வரும் சுமார் 450 தோட்ட மருந்தகங்களை விருத்தி செய்வதன் ஊடாக தோட்டப்புற மக்களின் சுகாதார நிலைமையினை கட்டியெழுப்புவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், நாட்டின் எனைய பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற சுகாதார சேவையினை போன்று வசதிகளை தோட்டப்புற மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துளளது.
தோட்டப்புற சுகாதார பிரிவினை அரச சுகாதார பிரிவுடன் இணைப்பதற்கும், அதன் கீழ் தற்போது தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்ற தோட்ட சுகாதார நிலையங்களை கட்டம் கட்டமாக அரசாங்கத்துக்கு கையகப்படுத்திக் கொள்வதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Thursday, May 3, 2018

ஓய்வூதிய பணத்தை முறையாக பெற உதவ வேண்டும்

தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை, முறையாக பெற்றுக்கொள்ள முழுமனதுடன் தொழிலாளர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என, இலங்கையின்  மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீறல்களுக்கான, நுவரெலியா மாவட்ட செயலணி படையின் இணை செயலாளர் வி.யோகேஷ்வரன்  நுவரெலியா பொலிஸ் வீதியில் அமைந்துள்ள செயலணிபடை காரியாலயத்தில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயேதெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில், 55 தொடக்கம் 60 வயதை பூர்தியாக்கி, தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தொழில் விலக்கப்பட்ட தொழிலாளர்கள், அவர்கள் சேவைசெய்த காலப்பகுதியில் பிடிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதி (ஈ.பி.எப்) மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி (ஈ.டி.எப்) ஆகியவற்றைப் பெற்றுகொள்வதில், பல்வேறு சிறமங்களை அனுபவித்து வருகின்றனர்.
“இந்த நிலையில், தோட்டத்தில் தொழில் புரியும் வயதெல்லயை அடைந்த உடன், தொழில் நீக்கம் செய்ய, சட்ட ரீதியாக தோட்ட நிர்வாகங்களுக்கு முடியும் என்றால், தோட்ட நிர்வாகங்களின் நடவடிக்கைகளுடன் ஏன் தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை முறையாக பெற்றுக்கொள்ள தொழிலாளர்களுக்கு உதவ முடியாது” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்தும், “இந்த பிரச்சினை  நமது நாட்டிலுள்ள அனைத்து பெருந்தோட்டப் பகுதிகளிலும் காணப்படுவதுடன், நுவரெலியா மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
“இது தொடர்பாக, நுவரெலியா பிரதேச தோட்டப்பகுதிகள் பலவற்றில் இருந்து, எமது செயலணி படைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்விடயம் தொடர்பில், தோட்ட நிர்வாகங்களை ஆராய்ந்த பொழுது, தொழிலாளர்கள் ஓய்வூதிய பணத்தை தொழில் திணைக்களத்துடன், மத்திய வங்கியில் பெற்றுக்கொள்ள, உரிய ஆவணங்களை வழங்க, தோட்ட நிர்வாகங்கள் முறையாக செயற்படுவதில்லை என்பது, ஆரம்பக்கட்டத்தில் தெரியவந்தது.
“இதன் பின், தோட்ட நிர்வாகங்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் இயங்குவதால், தோட்ட காரியாலயங்களில் ஓய்வூதியம் தொடர்பில் செயலாற்ற உத்தியோகஸ்தர்களும், அதற்கான தனி பிரிவு ஒன்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
“இதை விட தொழில் திணைக்களத்திற்குச் சென்று, தொழிலாளி ஒருவர் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் விண்ணப்ப படிவத்தைப் பெற்று, பின் அதனை முறையாக நிரப்புவதற்கு, தோட்ட காரியாலயத்துக்குச் சென்றால், ‘இன்று போய் நாளை வா’ என்ற விநாயகர் வேதம் ஓதப்படுகின்றது.
“இவ்வாறாக அழைக்களிக்கப்படும் தொழிலாளர்கள், கடைசி காலத்தில் தம் உழைப்பால் சேமித்த பணத்தை, அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
“இந்நிலையில், தொழிலாளிகளான தனி மனிதர்களின் அடிப்படை மற்றும் மனித உரிமை மீறலில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுப்படுகின்றமை தெளிவாகியுள்ளது. இது தொடர்பாக தோட்ட அதிகாரிகளிடம் மனித உரிமைகள் மீறல் செயலணி படை செயலாளர் என்ற ரீதியில் கேட்டபொழுது, நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவிக்கின்ற போதிலும், நடவடிக்கை எடுப்பதற்கான முன்னேற்றங்கள் எதுவும் காணவில்லை.
“எனவே, கொழும்பிலுள்ள தலைமை தொழில் திணைக்களத்தின், நுவரெலியா மாவட்டத்துக்குப் பொறுப்பான, தொழில் ஆணையாளரிடம் நேரடியாகச் சென்று, தோட்டநிர்வாகங்களின் செயற்பாட்டை எடுத்துரைக்கப்பட்டது.
“தொழிலாளர்களின் ஓய்வூதிய விடயத்தில், தோட்ட நிர்வாகங்கள் முறையாக செயல்பட, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிராந்திய ரீதியான தொழில் திணைக்களத்துடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த உறுதி மொழி மீறும் பட்சத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பின், எமது செயலணிபடை, இலங்கை மனித உரிமைகள் அமைப்புடன் பாரிய நடவடிக்கை ஒன்றை எடுக்க தயாராகிவருகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தரகர்கள் ஊடாக, கூடுதலான பணத்தை செலவு செய்து, ஓய்வூதிய பணத்தை பெற தொழிலாளர்கள் முயற்சிக்க, தோட்ட நிர்வாகங்கள் இடம்வழங்காது, தொழிலாளர்களுக்கு இந்த விடயத்தில் உதவ முன்வரவேண்டும் எனவும், அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.