Thursday, July 2, 2009

மவுசாகலை நீர்த்தேக்கம் திறக்கப்படும் நிலை

கடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கம் எந்தவேளையிலும் நிரம்பி வழியக் கூடிய கட்டத்தை அடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே. டி. ஏக்கநாயக்கா தெரிவித்தார். இதனால் இந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் எந்த வேளையும் திறந்து விடப்படலாம். அதனால் களனி கங்கைக்கு இரு மருங்கிலும் அமைந்திருக்கும் கித்துல்கல, யட்டியந்தொட்டை, அவிசாவளை, ஹங்வெல்ல போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என குறிப்பிட்டார்.
மலையகத்தில் 24 மணி நேர எச்சரிக்கை

மலையத்தில் இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய நான்கு நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார தெரிவித்தார். நேற்று இரண்டாவது நாளாகவும் 24 மணி நேர முன்னெச்சரிக்கையை விடுத்தது. இந்த நான்கு மாவட்டங்களிலும் 100மி.மீட்டருக்கும் மேலாகத் தொடராக மழை பெய்திருப்பதுடன் தொடர்ந்தும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கிறது. மணிசரிவு அச்சுறுத்தல்மிக்க இடங்களாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்கள் இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியகொட, கலவான, கஹவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, புளத்ஹோபிட்டிய, தெரணியாகல ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளிலும்,நுவரெலிய மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பகுதியிலும், கினிக்கத்தேன, நோட்டன் பிரிட்ஜ், கெனியன், லக்ஷபான, மஸ்கெலியா பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, அகலவத்த, மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் மிக்க பல இடங்கள் உள்ளன.அவை ஏற்கனவே மணிசரிவு அச்சுறுத்தல்மிக்க இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
லயன்கள் எரிந்து நாசம்

வலப்பனை ‘பெப் ஸ்பேல்’ தோட்டத்தின் தியனில்ல கீழ் பிரிவிலுள்ள பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் தியனில்ல கீழ் பிரிவிலுள்ள 17ம் இலக்க லயனில் ஏற்பட்ட தீ விபத்தினால் லயன் அறைகள் எரிந்து சாம்பராகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார். இச்சம்பவத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் நிர்க்கதியான நிலையில் அங்குள்ள விகாரையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும்,இச் சம்பவம் காரணமாக உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சமைத்த உணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இச் சம்பவத்திற்கு லயன் அறையொன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து தீ பரவியதே காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.