Tuesday, May 19, 2009

தொழிலாளர்களின் சம்பள விடயம் அரசியலாக்கப்பட்டு இழுத்தடிக்கப்படுகிறது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் ஒரு இணக்கப்பாட்டுக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தை அரசியலாக்கி தமது தொழிற்சங்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு சில மலையக அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதை அவர்களுடைய செயல்பாட்டிலிருந்து காணக்கூடியதாகவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் ரி.வி. சென்னன் பசறை பணிமனையில் நடைபெற்ற சம்பள அதிகரிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடலில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் கூட்டொப்பந்தம் செய்யப்பட்டு அதற்கேற்ப சம்பளம் வழங்குகின்றமையால் தொழிலாளர்கள் சகல வழிகளிலும் பாதிப்படைந்து வருகின்றனர். கடந்த மாதம் கூட்டொப்பந்தம் முடிவுற்ற போதும் இதுவரையிலும் ஒரு இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இம்முறை பிரித்து பிரித்து சம்பளம் வழங்கப்படாமல் அடிப்படைச் சம்பளமாகவே கூட்டொப்பந்தத்தின்போது தீர்மானிக்கப்பட வேண்டுமென்பதை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் ஏகமனதான கோரிக்கையாக இருந்து வருகிறது. அதைவிட கூட்டொப்பந்தம் ஒரு வருடத்திற்கு ஒருமுறை செய்யப்படவேண்டும். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை செய்யப்படுவதால் தொழிலாளர்கள் சகல வழிகளிலும் பாதிப்படைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கடந்த வருடம் செய்யப்பட்ட கூட்டொப்பந்தத்தினால் தொழிலாளர்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளதா, அதற்கு மேலாக வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பினால் தொழிலாளர்களுக்குக் கிடைத்த நன்மைகளை ஆராய்ந்த பின்னரே மறுபடியும் ஒப்பந்தம் செய்யப்படவேண்டும். ஒப்பந்தம் செய்யும் முன்னதாகத் தொழிலாளர்களிடத்திலிருந்து கருத்துக்களைப் பெற்று அதன் பின்னர் அனைத்து தொழிற்சங்கங்களுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திய பின்பு ஒரு பொதுவான தொகையை முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையில் முன்வைக்கவேண்டும். இதன்மூலம் தொழிலாளர்களுடைய ஒற்றுமை தொழிற்சங்கங்களின் ஒற்றுமை கூட்டுக்கமிட்டிக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு ஒரு சக்தியையும் ஊக்கத்தையும் அளிக்கும். தொழிற்சங்கத்திற்கும் பேரம் பேசும் சக்தியும் வலிமையும் அதிகரிக்கும்.

No comments: