Friday, June 26, 2015

தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கான தீர்வு கிட்டியுள்ளது – இ.தொ.கா

பொகவந்தலாவ தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட நோர்வூட் ருக்கூட்ஸ் தோட்டத் தொழிலாளர்கள்அண்மையில் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பிற்கான தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர்  காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினை தொடர்பில் தோட்டக் கம்பனியின் அதிகாரிகளுடன்

கலந்துரையாடியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளதாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து நோர்வூட் ருக்கூட்ஸ் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 4 ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதி வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட 18 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, ஓரிரு தினங்களில் இதற்கான தீர்வு வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் உறுதியளித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் சீர்திருத்தத்;தில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

தேர்தல் சீர்திருத்தம் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் அதில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னயியின் செயலாளர் நாயகமும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளருமாகிய ஏ. லோரன்ஸ் 20வது திருத்தம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் 35 வருடங்களின் பின்னர் தேர்தல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. மீண்டும் அவ்வாறு இடம்பெறுவதற்கு பல வருட காலம் எடுக்கலாம். தேர்தல் சீர்திருத்தம் கட்டாயம் தேவையான ஒன்றாகும். அதில் சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றார். 

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான 20வது திருத்தம் நிறைவேற்றப்படலாம். ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க உட்பட அனைத்துக் கட்சிகளும் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சீர்திருத்தம் தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இத் திருத்தம் நாட்டுக்கும், மலையக மக்களுக்கும் அவசியமானதொன்றாகும். 
மலையக மக்களின் பிரஜாவுரிமை 1948ம் ஆண்டு பறிக்கப்பட்டு அவர்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது. அப்போது வாக்காளர் தொகை குறைவாக இருந்த காரணத்தினால் தேர்தல் திருத்தம் அவசியம் இல்லாமல் இருந்தது. இன்று மலையகத்தில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகல் தேர்தல் திருத்தம் அவசியமாகிறது. 

இன்று விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் 20வது திருத்தம் வெறுமனே தேர்தல் திருத்தமாக பார்க்கப்படக்கூடாது. மலையக மக்களுக்கு தேர்தல் தொகுதி மூலமும், மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளின் மூலமும் உறுப்பினர்களை அதிகரித்துக்கொள்ள கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமேயாகும். இதனை மலையக மக்கள் புத்திசாதுரியமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேர்தல் திருத்தம் தொடர்பாக இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், உட்பட அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாகவும், கூட்டாகவும் முதன்முறையாக தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன. பெரும்பாலான விடயங்களில் ஒருமித்த கருத்தே காணப்படுகிறது. மலையக அமைப்புக்கள் தமது கட்சி கண்ணேட்டத்தில் கவனத்தில் கொள்ளாமல் அவற்றை நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

இலங்கையின் தேர்தல் சீர்திருத்தம் இந்த நாட்டில் உள்ள நான்கு பிரதான தேசிய இனங்களின் விகிதாசாரத்துக்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவத்தையும் தொகுதிகளையும் ஏற்படுத்திக் கொள்வதை தவிர சகலரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேறுவழியேதும் கிடையாது. இதில் சிங்கள மக்களுக்கு 74 வீதமும், வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு 11 வீதமாக காணப்பட்டாலும்  இணக்கம் காணப்பட்டுள்ள 9 வீதமும், முஸ்லிம்களுக்கு 8 வீதமும், மலையக மக்களுக்கு 7 வீதமும் கிடைக்கவுள்ளன. சிறு கட்சிகள் பல கொள்கை ரீதியாக தனித்தனியாக இயங்கி வருகின்றன. அவைகளும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும். மேலும் இத்திருத்தம் ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க ஆகிய கட்சிகளின் நலன் சார்ந்ததாகவும் அமையாமல் அனைவரது அபிலாசைகளுக்கும் இடமளிப்பதாக அமைய வேண்டும் என்றார். 

மலையக மக்களின் இன விகிதாசாரத்துக்கேற்ப உத்தேச கலப்பு முறை தேர்தல் தொகுதிவாரியாகவும், மாவட்ட விகிதாசார அடிப்படையிலும், தேசிய விகிதாசார அடிப்படையிலும் 18 உறுப்பினர்களுக்குக் குறையாத பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் 10 பேர் தேர்தல் தொகுதி அடிப்படையிலும், பல் அங்கத்தவர் தொகுதி அடிப்படையிலும், 08 பேர் மாவட்ட விகிதாசார அடிப்படையிலும் தெரிவாக வேண்டும்..

தறபோதுள்ள தேர்தல் தொகுதிமுறையில் மறாற்றம் செய்யப்பட்டு கட்டாயம் 160 இற்கும் மேல் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக 125 ஆக அல்லது 145 ஆக குறைப்பதறன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடும்  தற்போதுள்ள 225 இலிருந்து 255ம் ஆக அதிகரித்தால் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவத்தை ஓரளவாவது பேணிக்கொள்ளலாம். 

மலையக மக்களுக்கு முதலில் தொகுதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். அடுத்ததாக பல் அங்கத்தவர் தொகுதி அடிப்படையிலும், மாவட்ட விகிதாசாரத்திலும் தேசிய விகிதாசாரத்திலும், இரட்டை வாக்கு முறை ஊடாகவும் மேலும் தேர்தல் விகிதாசாரத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

தேர்தல் திருத்தம் இன்று நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், புதிய பாராளுமன்றம் உருவாகும்போது நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். இவை அனைத்துக்கும் கட்டாயம் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். எல்லை மீள் நிர்ணயம் செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். இந்த விடயத்தில் மலையகக் கட்சிகள் விழிப்பாக இருந்து தமது இன விகிதாசாரத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகும். என்றார்.

கிளங்கன் வைத்தியசாலையின் புதிய கட்டிடம் திறக்க முடிவு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை கட்டிடத்தை கட்டங்கட்டமாக திறப்பதற்கு  சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பழைய கட்டடத்தில் உள்ள வெளிநோயாளர் பிரிவையும் கிளினிக் பிரிவையும் ஆகஸ்ட் மாதம் முதல் கிழமையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டடத்துக்கு மாற்றம் செய்து திறக்கவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர்.அன்வர் ஹம்தானி தெரிவித்தார். 

இந்தியா அரசாங்கத்தின் 500 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் 150 கட்டில்கள் உட்பட 6 சத்திர சிகிச்சை நிலையங்கள், 3 அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். அன்வர் ஹம்தானி கருத்து தெரிவிக்கையில், 'தற்போது புதிய கட்டடத்தில் சகல வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த வைத்தியசாலைக்கு இந்திய அரசாங்கத்தினால் புதிய இயந்திரங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் முதல் கிழமையில் முதல் கட்டமாக வெளிநோயாளர் பிரிவும் கிளினிக் பிரிவும் திறந்து வைக்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார். இக்கட்டடத்தை திறக்குமாறு கோரி பல தடவைகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.


Wednesday, June 24, 2015

20 பேர்சஸ் காணி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு அமைப்பு மற்றும் தேசிய சமாதான பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக சமூகத்தினருக்கு 20 பேர்சஸ் காணியுடன் சொந்த வீடு வேண்டும் என கோரி நோர்வூட்டில் ஞாயிற்றுக்கிழமை (21); ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலையக மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு 20 பேர்சஸ்; காணியும் காணி உரித்துடன் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த போராட்டம் இடம்பெற்றதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர். இந்த ஆரப்பாட்ட பேரணி நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கபட்டு நோர்வூட் நகரம் வரை சென்று; நோர்வூட் மண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

பொருளாதார நெருக்கடி பல்கலைகழக மாணவர்களின் இடை விலகலுக்கு காரணம்

மலையத்திலிருந்து அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பவேண்டும் என்பதே எம்முடைய முயற்சியாக காணப்பட்டாலும் மாணவர்களுடைய பொருளாதார நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் இடைநடுவே வெளியேறும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார். 'வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பல்கலைக்கழகங்களில் மலையத்திலிருந்து வரும் மாணவர்களும் கல்வி கற்று வருகின்றனர். அவர்களுக்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன'. 'பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி செல்லும் மாணவர்கள், அவர்களது குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலை காரணமாக இடைவிலகி வேறு தொழில்களுக்கு சென்று விடுகின்றனர். இந்த நிலைமையை உடனடியாக மாற்றவேண்டும்'. எனவே, மலையகத்திலிருந்து யாழ். பல்கழைக்கழகத்துக்கு தெரிவாகும்  மாணவர்களுக்காக தங்குமிட விடுதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது. மிக விரைவில் கிழக்கு பல்கழைக்கழகத்தில் கல்வி பயிலும் எமது மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் பெற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

பெருந்தோட்ட இளைஞர்கள் இடைநிறுத்தம்- பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம்

கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந் தோட்டயாக்க நிர்வாகத்தின் கீழ் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்களை இடைநிறுத்தி விட்டு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள பணியில் ஈடுப்படுத்துவதை தான் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் அருள்சாமி தெரிவித்தார். 

மேலும், இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானுக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். கண்டி மாவட்ட பெருந்தோட்டங்களில் தற்போது பரவலாக நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டபோது அருள்சாமி, இதனை கூறினார். 'கடந்த 50, 60 வருடங்களாக பெருந்தோட்டங்களில் கடமையாற்றிய தோட்ட சேவையாளர்களை அதிரடியாக இடைநிறுத்திவிட்டு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கமர்த்துவது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல.

இது பெருந்தோட்டங்களில் கடமையாற்றும் சேவையாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்'. பெருந்தோட்டங்களில் கடமையாற்றும் 60 வயதை பூர்த்தி செய்த தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர்கள், ஜூன் மாதம் 15ஆம் திகதியுடன் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று, கண்டி மாவட்டத்திலுள்ள தோட்டங்களின் தலைவர்களால் கடந்த 8ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது' என்றும் அருள்சாமி கூறினார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அமைச்சரால் கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டத்துக்கு, வெளிமாவட்டங்களிலுள்ள தோட்ட சேவையாளர்கள் கடமைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களானது, பெருந்தோட்டங்களில் வெளிக்கள உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றும் இளைஞர், யுவதிகளுக்கு ஆப்பு வைக்கும் விடயமாக காணப்படுகின்றது என்றும் அருள்சாமி குறிப்பிட்டார்.

Tuesday, June 23, 2015

தொழிலாளர்களுக்கான புதிய சம்பள முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது

தோட்டத்தொழிலாளர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கிடையில் நேற்று (22-06-2015) ராஜகிரியவில் அமைந்துள்ள சம்மேளத்தின் தலைமை அலுவலகத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. 

இப் பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன்  பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பா.உ, தலைவர் முத்துசிவலிங்கம் பா.உ, இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே. வேலாயுதம், பா.உ, சட்டத்தரணி பி.இராஜதுரை பா.உ பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எஸ் இராமநாதன், பிரதி தவிசாளர் சி.ஜி.சந்திரசேன ஆகியோரும் முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் ரவி பீரிஸ் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வகையில் முதலாளிமார் சம்மேளனம் எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. மாறாக ஆயிரம் ரூபா கோரிக்கையை நிராகரிக்கும் வகையிலான கருத்துக்களையும் காரணங்களையே தெரிவித்தது. 

முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் புதிய சம்பள முறை பற்றி தெரிவித்தனர். அதாவது தற்போது வழங்கப்பட்டு வருகின்ற சம்பள முறைமைக்கு பதிலாக அதாவது மாதமொன்றுக்கு 22நாட்கள் வேலை செய்தால் முழுமையான சம்பளம் என்பதற்குப் பதிலாக வாரத்தில் மூன்று நாள் வேலைக்கு 550 ரூபா அடிப்படை சம்பளம் என்றும் அதற்காக ஒரு தொழிலாளி 15 கிலோ கிராம் தேயிலை கொழுந்து பறிக்க வேண்டியது கட்டாயம் என்றும் அதற்கு மேலதிகமாக பறிக்கப்படும் தேயிலை கொழுந்துக்கு கிலோ ஒன்றுக்கு 40 ரூபா வீதம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற திட்டத்தை முன்வைத்தது

மேலும் வாரத்தில் மேற்குறிப்பிட்ட மூன்று நாட்களை தவிர்ந்த ஏனைய நாட்களில் பறிக்கப்படும் தேயிலைக்கு மாத்திரம் கிலோ ஒன்றுக்கு 40 ரூபா என்ற ரீதியில் கொடுப்பனவு வழங்க முடியுமே தவிர அந்த நாட்களினல் அடிப்படை சம்பளம் என்று ஒன்று இல்லாதிருக்கும் என்று தெரிவித்தது.

அதாவது சம்மேளத்தின் புதிய முறைமையானது உற்பத்திக்கு ஏற்ற கொடுப்பனவு என்ற ரீதியிலேயே அமைந்துள்ளது. இந்தச் உற்பத்திக்கு ஏற்ற முறைமையானது பெண் தொழிலாளர்களை மாத்திரமல்லாது ஆண் தொழிலாளர்களையும் பாதித்துள்ளதாக தெரிவித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் புதிய சம்பளத் திட்டத்துக்கு தமது கடுமையான எதிர்ப்பினை முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர். கடும் வாக்குவாத பிரதிவாதங்களிலும் பிரதிநிதிகள் ஈடுபட்டனர். இத்தகைய புதிய சம்பள முறைமை திட்டத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும் முதலாளிமார் சம்மேளனத்தால் தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளத்தொகை என்ன என்பதை தெரிவிக்குமாறு வலியுறுத்தினர். 

தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் பிடிவாதமான தீர்மானத்திலிருந்து விடுபட முடியாத சம்மேளன பிரதிநிதிகள் இது தொடர்பாக தமக்கு தனியான தீர்மானத்தை மேற்கொள்ள முடியாதென்றும் 22 கம்பனிகளின் நிர்வாக சபைகளுடன் கலந்து பேசி எதிர்வரும் 02-07-2015 முடிவினை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதன்படி சம்பள கூட்டு ஒப்பந்த் பேச்சுவார்த்தையின் நான்காம் கட்டம் எதிர்வரும் ஜூலை 02 2015 வரை நீடித்துள்ளது. 

எதிர்வரும் பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்க பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு தீர்க்கமான முடிவு அறிவிக்கப்படாவிட்டால் அல்லது அதிகரிப்பு தொடர்பான தொகையை குறிப்பிடாவிட்டால் எதிர்வரும் 2015 ஜூலை 3ம் திகதியின் பின்னர் முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையையும் பிரதிநிதிகள் தெரிவித்தனர். 

தோட்டத்; தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி விடயங்களைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் மார்ச் 31ம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. இதனை புதுப்பிப்பதற்காக நேற்று இடம்பெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 3ம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

Monday, June 22, 2015

'20" குறித்து இறுதி முடிவு!

பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சித்தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்றைய தினம் பாராளுன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. இதன்போது   சர்ச்சைகளுக்கு மத்தியில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமூலம் குறித்து ஆராயப்படவள்ளதாக தெரிய வருகின்றது. 

தற்போதுள்ள தேர்தல்கள் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில அரசியல் அமைப்பில 20ஆவது திருத்தச்சட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.  இதற்காக  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரர்ளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை 237ஆக  அதிகரிக்கும் வகையிலும் தொகுதி விகிதாசாரத்தின் அடிப்படையில் 145பேரும், மாவட்ட விகிதாரசாரத்தின் அடிப்படையில் 55பேரும் தேசிய விகிதாசாரத்தின் அடிப்படையில் 37பேரும் தெரிவு செய்யப்படும் வகையில் முன்மொழிவொன்றை செய்து அவ்வரைபை அமைச்சரவை அங்கீகாரத்துடன் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சி அதன் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப்பிரேரணைகளை உடன் நிறுத்த வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே இச்சட்ட மூலத்தை பாராளுமன்றில் விவாதிக்க அனுமதிப்போம்  எனஉறுதியாகவுள்ளதுடன் பாரர்ளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைய 225ஆக தொடர்ந்தும் பேணவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
மறுபுறத்தில் சிறுபான்மை இன, சிறு அரசியல் கட்சிகள் தொகுதிகளை மீள்நிர்ணயம் செய்வதை தற்காலிகமாக ஒத்திவைக்கவேண்டும் என்பதுடன் இரட்டை வாக்குசீட்டை அறிமுகப்படுத்தவேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படாவிடின் பல்கட்சி ஜனநாயகத்தை ஒழித்து பாராளுமன்றில் இரு கட்சி அரசியல் கலாசாரம் உருவாகி விடும் என தொடர்ச்சியாக கூறிவருவதுடன் தற்போதுள்ள முறைமையில் குறித்த சட்ட மூலம் பாரர்ளுமன்றுக்கு கொண்டுவரப்படுமாயின் அதனை எதிர்க்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீளப்பெறுமாறும் ஒன்றுபட்டு கோரியுள்ளன. 
இவ்வாறான நிலையிலேயே இன்றைய தினம் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இடம்பெறவிருக்கின்றன. இதன்போது குறிப்பாக இச்சட்ட மூலம் தொடர்பில் பரஸ்பர கருத்துக்கள் முன்வைக்கப்படும் என தெரியவருவதுடன் 20ஆவது திருத்தம் தொடர்பில் பொது இணக்கப்பாடு எட்டப்படடு இறுதி முடிவு  எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அரசதரப்பு முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

Sunday, June 21, 2015

மலையகத்தில் கடும் மழை இயல்புநிலை பாதிப்பு


மத்திய மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் மக்களின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியாவில் நேற்று வீசிய கடும் காற்றினால் இரண்டு மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் முற்றாக சேதமடைந்துவிட்டது. அப்பிரதேசமெங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் மண்சரிவு அபாயமும் காணப்படுவதாக அப்பிரதேச அனர்;த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை வாகன சாரதிகள் மற்றும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட செயலாளரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற பயணிகள் ரயில் ஹட்டன்- ரொசல்ல என்ற புகையிரத நிலையத்துக்கு இடையில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. குறிப்பாக ரயில் எஞ்சின் தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, நுவரெலியா நகருக்கு அருகிலுள்ள கலுகெல, பொனவிஸ்டா, கெலேகால, சாந்திபுரம், மீப்பிலிமான, சீத்தாஎலிய உட்பட்ட கிராமங்களில் வீசிய பலத்த காற்றினால் வீட்டுக் கூரைகள் பெரும் சேதமடைதுள்ளதுடன் பல இடங்களில் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.

இதனால் விவசாய உற்பத்திகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரக்கறி தோட்டங்களில் மழை நீர் நிரம்பி யுள்ளதாலும் மண்சரிவுகள் ஏற்பட்டதாலும் மரக்கறி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவில் தற்போது குளிரும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் மழை மற்றும் காற்று அதிகரித்து காணப்படுவது வழக்கமாகும். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளதாக சுற்றுலா துறையினர் தெரிவிக்கின்றனர்.

வீடமைப்புக்கான காணி வழங்கும் விடயத்தில் சமூகப்பொறுப்பு அவசியம்


புதிய அரசாங்கத்தின் 100 நான் வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புக்காக வழங்கும் 07 பேர்ச் காணி வழங்கும் திட்டத்தில் சகலரும் சமூகப்பொறுப்புடன் செயற்படுவது அவசியம் எனவும் தொழிற்சங்க அரசியல் பேதமின்றி இத்திட்டம் முன்னெடுக்கும்பட்சத்தில் இரண்டு இலட்சம் தனி வீடுகள் மலையக பகுதிகளில் அமைக்கப்படும் சாத்தியம் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் லபுக்கலை தோட்டப்பாடசாலைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான உபகரணங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் கடந்த 200 ஆண்டுகளாக அதிகார வர்க்கத்தினாலும், இனவாதிகளாலும் சின்னாப்பின்னப்படுத்தப்பட்ட தேசிய உழைப்பாளிகளான தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு அங்குலம் காணி சொந்தமாகக் கிடையாது. இந்த நாட்டை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றியவர்கள் இந்த இந்திய வம்சாவளி மக்கள் என்பதை மறுக்க முடியாது 
கடந்த காலத்தில் அமரர் அமைச்சர் சந்திரசேகரன் நிர்மாணித்து வழங்கிய 23,000 வீடுகளுக்கு உறுதிப்பத்திரத்தை வழங்கவில்லை. ஆனால் இத்தனை வருட காலமாக அமைச்சர்களாக இருந்தவர்களால் ஏன் செய்ய முடியாது போனது என்று கேள்வி எழுப்பினார்.