Thursday, March 3, 2016

இளைய தலைமுறையினர் பெருந்தோட்டத்துறையில் வேலை செய்வதற்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை

சமீபத்தில் உலக வங்கியினால் மேற்கொண்ட ஒரு ஆய்வு தெரிவிப்பது, நளவயவந றழசமநசளஸ்ரீலங்காவின் தோட்டப் பகுதிகளில் வேலை செய்யும் தமிழ் சிறுபான்மையினர் வேலை வாய்ப்பினை தேடும் முகமாக பெருந் தோட்டத்துறைப் பகுதிகளை விட்டு அதற்கு வெளியே மிகவும் நகர்ப்புறமாக உள்ள இடங்களை நோக்கி நகர்கிறார்கள் என்று. உலக வங்கியின் ஆய்வு பரிந்துரைப்பது, தோட்டப் பகுதி தமிழர்களின் இளைய தலைமுறையினர் பெருந்தோட்டத்துறையில் வேலை செய்வதற்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்தே.

நகர்மயமான பகுதிகளில் வேலைகளைத் தேடுவதில் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும்கூட, 2003 முதல் 2012 வரையான காலப்பகுதியில் 15 – 24 வயதினைக் கொண்ட குழுவினர்களைப் பொறுத்தமட்டில் தோட்டப் பகுதிகளை விட்டு வெளியேற விரும்புபவர்களின் எண்ணிக்கையில் சாதனை ஏற்படுத்துமளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் 15 – 19 வயதுடைய குழுவினர்களின் வருடாந்த சராசரி மாற்றம் அல்லது வளர்ச்சி சுமார் 4 விகிதமாகும் மற்றும் 20 – 24 வயதுடைய குழவினருடைய வளர்ச்சி சுமார் 1 விகிதமாகும்.

அதேவேளை தோட்டத்துறையை விட்டு கொழும்பை நோக்கி நகரும் இளைஞர்களிடம் உரிய கல்வித் தரம் இருப்பதில்லை, அவர்கள் தொழிலுக்கு அவசியமான தேவைகளைக் கொண்டிருக்காததால் தொழில் வழங்குவோர் அவர்களுக்கு நல்ல வேலைகளை வழங்கத் தவறிவிடுகின்றனர். அதனால் அவர்கள் சாரதிகள், தொழிற்சாலை தொழிலாளர்கள், கடை உதவியாளர்கள் அல்லது கட்டிடத் தொழிலாளிகள் போன்ற வேலைகளிலேயே ஈடுபடுத்தப் படுகிறார்கள், தோட்டத் தொழில்துறையை விட அவை சிறந்த சம்பளத்தை அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது.

அவர்களில் ஒரு சிலருக்கு சாரதிகள் அல்லது இயந்திரவினைஞர்கள் போன்ற அரை நிபுணத்துவ தொழில்களையும் தேடிக்கொள்ள இயலுமாக உள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த, நல்ல ஊதியம் வழங்கும் தொழில்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இலகுவில் கிடைப்பதில்லை, ஏனெனில் அத்தகைய தொழில்களைக் கையாளுவதற்கு வேண்டிய அவசியமான கல்வித் திறமைகள் அவர்களிடம் இல்லை.

இருப்பினும் உலக வங்கியின் ஆய்வு மேலும் தெரிவிப்பது,15 – 20 வயதுக்கு இடைப்பட்ட குழுவில் உள்ள இளைஞர்களில் 50 விகிதமானவர்கள் ஆரம்பக் கல்வியை மட்டுமே கற்றுள்ள போதிலும் இளைஞர்களில் ஒரு பகுதியினர் உயர் கல்வியை கற்றுள்ளார்கள் என்று. அந்த எண்ணிக்கைகள் மேலும் வெளிப்படுத்துவது, நாட்டின் சராசரி கல்வியறிவு பெற்றவர்களின் விகிதம் மலைநாட்டில் 49 ஆகவுள்ள அதேசமயம் 66 விகிதமான குழந்தைகள் உரிய கல்வியை பெறத் தவறியுள்ளார்கள் என்பதை.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் (சி.டபிள்யு.சி) தலைவர் முத்து சிவலிங்கம் ‘த சண்டே லீடரிடம்’ பேசுகையில் சொன்னது “தோட்டத் தொழிற்துறையைத் தவிர சில்லறை கடைகள் மற்றும் தொடர்பாடல் மையங்கள் போன்ற சேவைத் துறைகளிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பங்கள் உள்ளன” என்று. “அவர்களுடைய இந்திய தமிழர் என்கிற இனத்தின் காரணமாகவும் மற்றும் தோட்டத் தொழிலாளி என்கிற அடையாளத்தின் காரணமாகவும் அவர்கள் மேலும் பாரபட்சத்துக்கு உள்ளாவதுடன் அவர்களின் நற்பெயருக்கு களங்கமும் உண்டாகிறது, மேற்கூறிய இரண்டும் தோட்டத் தொழில்துறையைச் சாராத வாய்ப்புக்களை அவர்கள் தேடிச்செல்வதற்கு தடைக்கல்லாக இருக்கின்றன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

15 – 30 வயதுக்கு இடைப்பட்ட குழுவில் உள்ள சுமார் 60,000 இளைஞர்கள் தற்சமயம் தோட்டத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ளார்கள் மற்றும் இந்த எண்ணிக்கை பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறும் நடவடிக்கை விரைவாக இடம்பெற்று வருவதால் எதிர்வரும் வருடங்களில் குறைவடையக் கூடும். தோட்டத் தொழில்துறையில் உள்ள குடும்பங்களில் சில தங்கள் குடும்பத்தில் உள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக அவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பத் தவறிவிடுவதாகச் சொல்லப்படுகிறது, இதன் காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டப்பகுதி இந்தியத் தமிழர்கள் ஆரம்பக் கல்வியை பின்பற்றுவதற்கான உதவிகளைச் செய்வதற்கான பணியில் தற்சமயம் ஈடுபட்டு வருகிறது.

எனினும் தொழிற்சங்கம், பெருந்தோட்டத் தொழில்துறையில் உள்ள பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் கல்வி ஏற்படுத்தும் பங்களிப்பு என்பனவற்றின் முக்கியத்தை பற்றி எடுத்துக்காட்டுவதற்காக பல விழிப்புணர்வு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. எனினும் அவர்களில் சிலர் தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி பெறுவதற்கு அனுப்பவேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ள அதேவேளை மற்றும் சிலர் தங்கள் பிள்ளைகள் தோட்டத் தொழில் துறையில் வேலை செய்வதையே விரும்புகிறார்கள். தோட்டப் பகுதி தமிழர்களின் இளைய தலைமுறையினர் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு உதவி செய்யும் சேவை மையங்களும் உள்ளன. இந்த மையங்கள் இளைஞர்களுக்கு தையல் போன்ற பல துறைகளிலும் பயிற்சிகளை வழங்கி வருகின்றன. ஆயினும்கூட பெண்கள் தொகையினரின் கல்வி நிலையையும் மற்றும் ஆண்கள் தொகையினரின் கல்வி நிலையையும் ஒப்பிடும் போது, பெண்கள் மிகவும் திறமையாக செயற்படுகிறார்கள் மற்றும் தோட்ட அலுவலகங்கள் மற்றும் நிருவாகத் திணைக்களங்களிலும் அவர்கள் வேலை செய்து வருகிறார்கள், அத்துடன் தொழிலாளர்களாய் வேலை செய்வது அரிதாகியும் வருகிறது. மலைநாட்டில் உள்ள பாடசாலைகளில் வசதிகளுக்கு குறைவில்லை, அவைகளும் நாட்டின் ஒரு பகுதியானபடியால் அங்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது மற்றும் ஒரு அரசாங்கம் வழங்கக்கூடியளவு வசதிகளும் வழங்கப்படுகின்றன, ஆனால் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பெற்றோர்களுக்கு போதிக்க வேண்டியுள்ளது என்று சிவலிங்கம் தொடர்ந்து கூறினார்.

கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் வேலை செய்துவரும் தோட்டப் பகுதி தமிழ் தொழிலாளர்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உதவிகளைச் செய்து வருகிறது. சில தொழில் தருனர்கள் இந்த தொழிலாளர்களின் ஊதியத்தை செலுத்த தவறிய வேளைகளில்  அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என்றும் சிவலிங்கம் தெரிவித்தார்.

மறுபுறத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அவர்களது செயல்திறனின் அடிப்படையில் வருடாந்தம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் இந்த வருடம் ஸ்ரீலங்கா தேயிலைக்கான சந்தை அரசியல் செற்பாடுகள் காரணமாக குறைவடைந்துள்ளதாக கூறப்படும் காரணத்தால் அவர்களுக்கு ஊதிய உயர்வுகள் வழங்கப்படவில்லை. இதற்கிடையில் தோட்டத் தொழில் துறையில் இளையோரின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைவதற்கு முரணாக 60 வயதும் அதற்கு மேற்பட்டதுமான மூத்த பிரஜைகளின் எண்ணிக்கை வருடாந்தம் சராசரி 8 விகிதத்தால் அதிகரித்துள்ளது. இளைய தலைமுறையினரால் அதைவிட்டு வெளியேற முடியும் ஆனால் மூத்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான மாற்றீடான வாய்ப்புகள் கிடையாது, ஆதலால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்தவதற்காக ஓய்வு பெறும் வரை தோட்டங்களிலேயே வேலை செய்ய முனைகிறார்கள்.

எனினும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜே.சிறிரங்கா ‘த சண்டே லீடரிடம்’ தெரிவித்தது. இந்தப் பிரச்சினை மாகாண கல்வி திணைக்களங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கம் என்பனவற்றாலேயே தீர்க்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினர் தொழில் திறனுள்ள வேலைகளை நோக்கி நகர்வதை ஊக்கப்படுத்த வேண்டும், இதனால் அவர்கள் உயர்கல்வியை தொடரவேண்டியதில்லை. சமீபத்தைய கடந்த காலங்களில் தோட்டப்பகுதி தமிழர்களான பல அங்கத்தவர்கள் கல்வி ராஜாங்க அமைச்சர்களாக அமைச்சரவையில் பதவிகளை பெற்றுக்கொண்ட போதிலும், அவர்கள் வாக்குகளில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள் ஆனால் அவர்களது சமூத்து மக்களைப்பற்றி அக்கறை காட்டுவதில்லை, இதன் காரணமாக இந்தப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதுடன் மற்றும் ஒரு நிலையான தீர்வுக்கும் வரவேண்டி உள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.

“அரசாங்கம் இந்தப் விடயத்தை ஒரு தேசிய பிரச்சினையாகப் பார்க்கவேண்டுமே தவிர, மலையக மக்களின் வாழ்க்கைப் பாணியை அபிவிருத்தி செய்யும் ஒரு உள்ளுர் பிரச்சினையாக அல்ல. தெற்காசியாவில் உள்ள நாடுகள் மத்தியில் கல்வியில் முதலிடம் பெற்றிருப்பது ஸ்ரீலங்காவே என்று பல ஆய்வுக் கற்கைகள் தெரிவித்துள்ளன, ஆனால் நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தமட்டில் சிறிய தொகையினரான இளைய தலைமுறையினர் வெறுமே ஆரம்பக் கல்வியை மட்டுமே பின்தொடர்வதால் அந்த மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

தோட்டப்பகுதி மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் சென்ற பொறுப்புள்ளவர்கள் இந்தப் பிரச்சினையை கவனத்தில் கொள்ளவேண்டும், மற்றும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு நிலையான தீர்வையும் வழங்கவேண்டும் அத்துடன் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பெருந்தோட்ட தொழில்துறை இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம் கிடைப்பதை உறுதிப் படுத்தவும் வேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு எஸ்.குமார்

நன்றி- தேனீ இணையம்

கூட்டு ஒப்பந்த மூலம் கிடைக்கும் சம்பள உயர்வே நிரந்தரம்

பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே இடம்பெறும் கூட்டு ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் சம்பள உயர்வே நிரந்தரமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டி.வி.சென்னன்  தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அரசு சார்பு தொழிற்சங்கங்கள் கூறுவதைப்போல் 2,500 மூபா சம்பள உயர்வு என்பது தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையாக கிடைக்கப் போவதில்லை. வேளைநாட்களுக்கு அமையவே அது வழங்கப்படும் என்றார்.

பெருந்தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் இல்லா விட்டால் தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் இருக்கவே முடியாது. பெருந்தோட்டங்களும் பெண் தொழிலாளர்களை மையப்படுத்தியே இருந்து வருகின்றன. இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் இப் பெண் தொழிலாளர்கள் குறித்து பேசப்பட்டு வரும் நிலைமையினை அவதானிக்க முடிகிறது என்றார். பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டதுடன் பலியான சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன. 

பெருந்தோட்ட பெண்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஊடாக அரசியலில் பிரவேசிக்க வேண்டும். அதன் மூலம் அப்பெண்கள் வெற்றி பெற்று பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்களாகவே குரல் எழுப்ப வேண்டும். அதனடிப்படையில் பெண்களுக்கான ஆரோக்கிய சூழல் ஏற்படும்.