Thursday, October 2, 2008
இந் நாட்டில் ஏற்பட்டுள்ள இன நெருக்கடி, யுத்தம், விலைவாசி உயர்வு என்பன தோட்டத் தொழிலாளர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்துள்ளன. நாட்டின் துன்பகரமான வாழ்க்கையை வாழ்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களே சமூக அபிவிருத்தி சமுதாய அநீதி ஒழிப்பு அமைச்சர் சந்திரசேகரன் கொட்டக்கலை பொரஸ்கீப் தோட்டத்தில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் அரசியல் ரீதியாக மலையக மக்களை பலவீனப்படுத்த பல சூழ்ச்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இம் மக்களை தோல்வியுறச் செய்வதன் மூலம் அவர்கள் சார்ந்த கட்சிகளை பலமிழக்கச் செய்ய நினைக்கிறது. சதா காலமும் சம்பள பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அதற்கப்பால் மலைய மக்களின் இருப்பை நிலைநாட்டுகவதற்கு அரசியல் ரீதியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களுக்கு சக்தியையும் தைரியத்தையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
Wednesday, October 1, 2008
இரத்தினபுரி மாவட்டம் காவத்தை ஒபாத்த இல-02 கீழ்பிரிவைச் சேர்ந்த கே. சூரியகுமார் என்ற மாணவன் காவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவனான இவர் பல்கலைகழகத்துக்கு தகுதி பெற்றிருந்தார். பல்கலைகழக அனுமதிக்காக மானிய ஆணைக்குழுவிற்கும் விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பங்களை ஏற்று ஆணைக்குழு உரிய ஆவணங்களை அனுப்பி வைத்திருந்தபோதிலும் மாணவனுக்கு கடிதம் கிடைக்காததால் பதில் கடிதமும் அனுப்பிய போதிலும் காலம் கடந்து விட்டது. கடிதம் கிடைக்கவில்லை. கடிதம் கிடைக்காததால் தோட்டக் காரியாலயத்துக்கு பல முறை தேடி அலைந்திருந்திருக்கிறார். கடிதம் ஒரு மாதத்திற்கு மேலாக தேங்கிக் கிடந்துள்ளமை தெரிய வந்துள்ளது. எனினும் மாணவனுக்கு பல்கலைகழக அனுமதி வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்பிரதேச மக்கள் நடந்த உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி மாணவன் சூரியக்குமாருக்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tuesday, September 30, 2008
தேயிலை விலை உயர்வுக்கேற்ற முறையில் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தவும் தோழர் கொல்வின் ஆர்.டி.சில்வா சட்ட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். அதாவது 100 ஏக்கருக்கு குறையாத தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் நாட்களுக்கு கீழ் கண்ட முறையில் சம்பள உயர்வு வழங்கப்பட்டது.
01. உலக சந்தையில் ஒரு இறாத்தல் தேயிலை ரூ.2.50 சதத்திற்கும், ரூ 2.75 சதத்திற்கும் விற்கப்பட்டிருந்தால் நாளொன்றுக்கு ஒரு தொழிலாளிக்கு 10 சதம் சம்பள உயர்வு
02. அதே அடிப்படையில் ரூ.2.75 சதத்திற்கும் ரூ.2.99 சதத்திற்குமிடையில் விற்கப்பட்டிருந்தால் நாளொன்றுக்கு 20 சதம் உயர்வு.03. ரூ. 3.00 க்கு மேல் தேயிலை விற்கப்பட்டிருந்தால் நாளொன்றுக்கு 30 சதம் உயர்வு.
இந்த அடிப்படையில் தொழிலாளர்களுடைய சம்பளத்தை உயர்த்தினார். மேற்கூறப்பட்ட சம்பள உயர்வை விட தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தவும் தோழர் கொல்வின் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதற்கமைய 1972 ம் ஆண்டு நவம்பர் மாதம் அன்று அமுலில் இருந்த அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தி ஆண் தொழிலாளருக்கு நாளொன்றுக்கு 18 சதமும் பெண் தொழிலாளர்களுக்கு 12 சதமும் வழங்கப்பட்டது. ஆண், பெண், தொழிலாளர்களின் சம்பளத்தைச் சம சம்பளமாகக் கொண்டுவர ஆலோசி;த்து வந்த தோழர் கொல்வின் தனது அமைச்சின் மூலம் 1973 ம் ஆண்டு நவம்பர் மாதம், 1974 ஏப்ரல், 1975 மார்ச் மாதங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தைக் கீழ் காணும் அடிப்படையில் உயர்த்தினார்.
1970,மே, 1973, 1974, 1975 விகிதாசாரம் மே, நவம்பர், ஏப்ரல், மார்ச், முறையேஆண்- 3.07, 4.17, 4.70, 5.43, 76 வீதம், பெண்:- 2.45, 3.15, 3.53, 4.07, 67 வீதம், பிள்ளை:- 2.13, 2.81, 3.17, 3.65, 71 வீதம்,
ரப்பர் தோட்டத் தொழிலாளி
1970, 1973, 1974, 1975 விகிதாசாரம் மே, நவம்பர், ஏப்ரல், மார்ச், முறையே ஆண்:- 3.12, 4.22, 4.75, 5.50, 76 வீதம், பெண்:- 2.60, 3.32, 3.72, 4.26, 64 வீதம், பிள்ளை:- 2.28, 2.97, 3.34, 3.85, 69 வீதம்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களின்படி 1970 முதல் 1975 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 70 சத வீதமாக உயர்ந்துள்ளது என்பதனை நாம் உணர வேண்டும். இந்தக் காலப் பகுதியிலேயே தோட்டத் தொழிற் துறை தொழிலாளர்கள் கூடுதலான சம்பள உயர்வைப் பெற்றனர்.
தோட்டத் தொழிலாளர்களும் லங்கா சமசமாஜக் கட்சியும் - எஸ். இராமநாதன்
பெருந்தோட்டத்துறையில் பல மில்லியன் தொகையில் இலாபம் கிடைக்கும் போது மொத்த இலாபத்தில் ஐந்து சத வீதத்தினையே தொழிலாளர்களுக்கு இலாபமாக பகிர்ந்தளிக்கும் தோட்ட முகாமைத்துவத்தின் செயற்பாடானது அப்பட்டமான மோசடியாகும் என உவா மாமகாண சபை உறுப்பினர் அரவிந்குமார் தெரிவித்தார். தோட்ட முகாமைத்துவங்களால் வெளியிடப்படும் வருடாந்த நிதி அறி;க்கையை பயன்படுத்தியும் ஊடக செய்திகளை பயன்படுத்தியும் வங்கிகள் மூலம் பெருந்தொகை பணத்தை கடனாக பெற்று தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். மேலும் பங்குச் சந்தையிலும் பெருந் தோட்டங்களின் நிலை மேலோங்கியுள்ளது மூலம் முகாமையாளர்கள் பெரும் நன்மையை பெறுகின்றனர். இந் நாட்டில் ஆகக் கூடிய வேலையை செய்து கடினமாக உழைத்து அதி குறைந்த சம்பளத்தை பெற்று கொண்டிருப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களே. பெரும் அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுப்பவர்களும் இவர்கடேள. எனவே தொழிலாளர்கள் தகுந்த பாடம் அவர்களுக்கு புகட்ட வேண்டும் என்றார்.
Monday, September 29, 2008
பிரித்தானிய குடியேற்ற ஆட்சியின் போது இலங்கை மக்கள் எப்படி நடத்தப்பட்டார்களோ அது வேறு விடயம். ஆனால் இலங்கை சுதந்திரமடைந்தபின் இலங்கையிலிருந்த அனைத்து சமூகத் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணம் எழுந்த பிறகு, இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் மலையக தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் முதல் பாராளுமன்றத்திலேயே கிட்டத்தட்ட ஆறு லட்சம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை. 20ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் அநீதியும் மிக மோசமான மனித உரிமை மீறலுமாகும்.
1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதி சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமை சாசனத்தின் 15வது உறுப்புரை (1) ஒரு தேசிய இனத்தவராக இருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. (2) எவரதும் தேசிய இனத்துவம் மனம் போக்கான வகையில் பறிக்கப்படவோ, தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுவதோ ஆகாது என வலியுறுத்துகின்றது. சர்வதேச மனித உரிமை பிரகடனம் பிரகடனப்படுத்தப்பட்ட அதே ஆண்டிலேயே எமது பிரஜா உரிமையும் பறிக்கப்பட்டது. ஆகவே இதனைவிட உரிமை மீறல் இருக்குமா என்பது சந்தேகமே.
ஆகவே மலையகத் தமிழ் மக்களின் இந்த பிரஜா உரிமை பறிப்பு சமகால அரசியலில் ஒரு மனித உரிமைக் கண்ணோட்டத்தில் கூடப் பார்த்து நிவர்த்திக்கப்படாமல் இன்னும் பிரஜாவுரிமை எமது இலங்கையின் நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றப்படாமலிருப்பது மனித நாகரீகத்திற்கே வெட்கக் கேடான செயலாகும். எனவே மiலையக மக்களின் பிரச்சினையை இன்னும் பிரஜாவுரிமை பிரச்சினையாக மாத்திரம் மட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் மலையக தலைவர்களும் தேசிய கட்சியை சார்ந்த தலைவர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு விடயமாகும்.
- சமகால அரசியல்- அரசியல் தீர்வு- அ. லோறன்ஸ்
பெருந்தோட்டக் குடியிருப்பு தீ விபத்துக்கள் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு
பெருந்தோட்ட பகுதி குடியிருப்புக்களில் ஏற்படும் தீ விபத்து தொடர்பான காரணத்தை மின்சாரசபையினரும், அனர்த்த நிவாரண அமைச்சு அதிகாரிகளும் இணைந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும்படி நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் வீ. புத்திரசிகாமணி கேட்டுக்கொண்டுள்ளார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திச் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்ட கூட்டத்தில் கல்நடை அபிவிருத்தி அமைச்சர், சீ.பி ரத்நாயக்க, பிரதியமைச்சர் மு.சிவலிங்கம், ஆகியோர் உட்பட மத்திய மாகாணசபை அமைச்சர்கள், நுவரெலியா மாவட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தின்படி இன்னும் ஒரு வருடம் தமது சம்பள உயர்வுக்காக காத்திருக்க முடியாது. கூட்டு ஒப்பந்தம் என்ற இந்த நடைமுறை கிழித்தெறியப்பட வேண்டும் என அமைச்சர் பெ. சந்திரசேகரன் நானுஓயா பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வினை கம்பனிகளும், சில தொழிற்சங்கங்களும் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கம் எதிர்பார்ப்பதை நாம் ஏற்க முடியாது சம்பள உயர்வை பற்றி அரசாங்கத்துடன் பேசினால் கம்பனிகளுடன் பேசுங்கள் என்று தட்டிகழித்து விடுகின்றனர். அரசு தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கம்பனிகளையும் தொழிற்சங்கங்களையும் சுட்டிக்காட்டி தப்பி விடவும் முடியாது.
Sunday, September 28, 2008
பெருந்தோட்டத்தைச் சேர்ந்த பல்கலைகழக மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டமொன்றை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. பல்கலைகழகங்களில் பயிலும் அல்லது அனுமதி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமது பட்டப்படிப்பை தொடர்வதற்கு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் அவர்களுக்கு அரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது. எனவே பல்கலைகழங்களில் பயிலும் அல்லது அனுமதி பெற்ற மாணவர்கள் சகலரும் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் 30-09-2008 முன்னர் சௌமியமூர்த்தி தொண்டமான ஞாபகார்த்த மன்றம், இல.15ஏ, பிளவர் ரெரஸ். கொழும்பு-03 என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ள முடியும்
இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழிவழியாக தோட்டத் தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் எட்டடி நீளமுள்ள அறைகளிலேயே புகைக் கூண்டுகளில் வாழ்வதைப் போல் வாழ்ந்து வருகின்றனர். இந்த துர்ப்பாக்கிய நிலையிலிருந்து தாங்கள் வாழும் அறைகளை விஸ்தீரணமாக ஓரளவேனும் நல்ல நிலையில் அமைக்க வேண்டும் என்ற உந்துதலில் நாகரீகமாக வாழும் ஆசையுடன் சிறிது சிறிதாக சேமித்து வைத்துள்ள சேமலாப நிதியைக் கொண்டு கட்டியுள்ளனர். ஏனையோர் பொருளாதார வசதி குறைவாகல் அதே எட்டடி அறைகளுக்குள் வாழ்க்கையை முடக்கி விடுகின்றனர்.
இப்படி வாழ்நாளில் பெரும் பங்கிளை கழித்து இறுதி காலத்தில் ஓய்வாக உணவுக்கு வழி செய்து கொண்டு வாழ வேண்டிய பணத்தை இந்த லயன் வீடுகளுக்கு செலவழிப்பதன் மூலம் ஏதும் பலன் உண்டா என்பதை தெரிந்து கொள்கிறார்கள் இல்லை. தோட்ட நிர்வாகங்களின் கீழ் இருக்கும் வீடுகள், உடைமைகள் அனைத்துக்கும் கம்பனிகளே கம்பனிகளே சொந்தக்காரர்கள் ஆவர் . அரச உடைமைகள் எனில் மக்களுக்கான உரிமைகளைப் பற்றி வாதிட முடியும். கம்பனிகளுக்கு சொந்தமானவைகளை நாம் செலவழிப்பதன் மூலம் நாளை ஒரு பிரச்சினை ஏற்பட்டு சிக்கலில் வீழ்ந்து விட்டால் சாதுரியமாகவும், சட்டரீதியாகவும் கம்பனிக்கே சொந்தமாகி விடும் என்பதை புரியாமல் இருப்பது கவலையைத் தருவதாகும்.
இந் நிலையில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைமைகள் அரசியல் பிரதிநிதிகள் எடுத்த ஓரளவு முயற்சியினால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டத்தினால் தனி வீடுகளாகவும் பின்பு மாடி வீடுகளாகவும் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இவ் வீடமைப்புக்கான செலவுத் தொகையை குடியிருக்கும் தொழிலாளர்கள் சம்பளத்திலிருந்தே அறவிடப்படுகின்றது. தனி வீடுகளுக்கு மாதாந்தம் 350 ரூபாவும் மாடி வீடுகளுக்கு 600 ரூபாயுமாக பதினைந்து வருடகால மாதத் தவணையில் அறவிடப்படுகின்றது. இத் திட்டத்தின் கீட் வழங்கப்படும் வீடுகள் சம்பந்தப்பட்டவர்களின் ஊழியர் சேமலாப நிதியை பிணையாகக் கொண்டே வீடுகள் வழங்கப்படுகின்றன.
இந் நிலையில் சம்பந்தப்பட்ட தொழிலாளி சேவையிலிருந்து ஓய்வு பெறுவாராயின் அவருடைய சேவைக்கால பணத்தில் முழுத் தொகையுமே அறவிடப்படுகின்றது. சேவைக்கால பணம் குறைவாகவோ அல்லது இல்லாமலிருப்பின் சம்பந்தப்பட்டவர் மேலும் பணம் செலுத்தியாக வேண்டும்.
அரசியல் வாதிகளும், தொழிற்சங்க வாதிகளும் மேற்படி வீடுகள் அவர்களுக்கே சொந்தம் என்கின்றனர். தொழிலாளர்களும் இந்த பசப்பு வார்த்தைகளை நம்பி சொந்த வீடுதானே என வங்கிகளில் கடனை பெற்று வீடுகளை சிறப்பாக அமைத்துள்ளனர். ஆனால் இந்த வீடுகளை விற்கவோ, வேறு நபர்களுக்கு மாற்றியோ கொடுக்க முடியாது. இதுதான் ஒப்பந்தத்தின் சாரம்சம்.
ஊண்மையில் உழைப்பவனின் ஊதியத்தில் அறவிடப்படும் பணம் அந்த உழைப்பாளியின் வாழ்க்கைக்கு பலன் தர வேண்டும். ஆனால் அந்த பலன் கிடைக்காவிட்டாலும் உரிமையும் இல்லாது போய்விடும் அபாயம் தான் தெரிகிறது.
-தொடரும்-
சிதம்பரம் ஜோதி
இலங்கையில் உள்ள பெருந்தோட்டங்களை கடந்த காலங்களில் SLBC மற்றும் JEDB ஆகியன நிர்வகித்து வந்தன. தற்போது 23 கம்பனிகள் நிர்வகித்து வருகின்றன.
1991 இல் அரசாங்கம் தோட்டங்களை தனியார் மயமாக்கும் நோக்கில் கம்பனிகளுக்கு கையளிக்க நடவடிக்கை எடுத்தமையை இடதுசாரி தொழிற்சங்கங்கள் எதிர்த்திருந்தன. எனினும் அரசாங்கத்துடன் இணைந்திருந்த காரணத்தால் இ.தொ.கா வும் இ.தே.தோ.தொ சங்கமும் ஆதரித்திருந்தன.
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின் இறுதியில் ஒரு சமரசத் திட்டத்தை அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் ஏற்றுக் கொண்டன. அதில் ஒன்றுதான் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களையும், சுற்றியுள்ள மரக்கறி தோட்டங்களையும் அவர்களுக்கு உரித்தாக்குவது அடுத்ததாக தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் கம்பனிகளுக்கு கிடைக்கும் இலாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு தரப்பட வேண்டும் . அத்தோடு தனியார் கம்பனிகளின் பங்குகளில் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
மேற்படி ஆலோசனைகள் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி நீண்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தது. இறுதியில் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய தொழிற்சங்கங்களின் அழுத்தம் காரணமாக 10சத வீத பங்குகளை தொழிலாளர்களுக்கும், தோட்ட சேவையாளர்களுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. இந்தப் பங்குகளை நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கும் வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
பங்குகள் விநியோகம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பங்குகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இ.தொ.கா, இ.தே.தோ.தொ சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன ஒன்றிணைந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சகல பங்குகளையும் நிர்வகிப்பதற்காக தனியான ‘நிதியம்’ ஒன்றை அமைக்க வேண்டுமென்று கோரி சம்பந்தப்பட்ட அமைச்சோடு பேச்சுவார்த்தை நடத்தின.
ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே இத் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில் கம்பனிகளும் அரசாங்கத்தின் சில சக்திகளும் சேர்ந்து திடீரென பங்கு பத்திரங்களை தோட்ட நிர்வாகங்களினூடாக வழங்கி அவற்றை வங்கிகளிலோ, வர்த்தகர்களிடமோ கொடுத்து காசாக்கிக் கொள்ளலாம் என்ற பிரச்சாரத்தை முடுக்கி விட்டதால் பங்கு பத்திரம் கிடைத்தவுடன் இதன் முக்கியத்துவத்தை உணராமல் வங்கிகளிலும் வர்த்தகர்களிடமும் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்வதில் அக்கறையாக இருந்தார்கள்.
மேலும் இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் பலத்தை எதிர்ப்பை காட்டியதால் வங்கிகளும் வர்த்தகர்களும் பங்கு பத்திரங்களை விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்த்துக் கொண்டார்கள்.
மீண்டும் பங்குகள் விற்பனை
இவ்வாறு விற்கப்படாமலிருந்த பங்குகளை இப்போது மீண்டும் இரகசியமான முறையில் சில வர்த்தகர்கள் விலை கொடுத்து வாங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இறந்துபோன தொழிலாளர்களின் பங்குகளையும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அல்லது வேலை நிறுத்தம் செய்யப்பட்டவர்களின் பங்குகள் செல்லுபடியாகாது என்று கூறி மிகவும் குறைந்த விலைக்கு வர்த்தகர்கள் வாங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறந்தவர்களின் பங்குகளை மாற்ற முடியும்.
பங்குகளை பெற்றுள்ள தொழிலாளர்கள் யாராவது இறந்து போயிருந்தால் அவர்களின் பங்குகள் செல்லுபடியாகாது என்பதில் எந்தவித உண்மையும் இல்லை அந்த பங்குகளை உயிரோடிருக்கும் உறவினர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
பங்குகளினால் கிடைக்கும் பயன்கள்.
தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள பங்குகள் மிகவும் பெறுமதி மிக்கவையாகும். ஏனெனில் பங்குகளை வைத்திருப்பதன் மூலம் தொழிலாளர்கள் கம்பனிகளுக்கு உரித்துடையவர்கள் ஆகின்றார்கள். தோட்டங்களில் வசிப்பதற்கு அவர்களுக்கு உரிமை கிடைக்கின்றது.
எதிர்கால சந்ததிகளுக்கு இத்தகைய பங்குகள் சிறந்த முதலீடாக அமைகின்றது. மேலும் 10 ரூபா பெறுமதியான ஒரு பங்கு இப்போது 50 ரூபாய்க்கு மேல் பெறுமதியுள்ளதாக காணப்படுகின்றது.
எனவே தொழிலாளர்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு பெற்றுக் கொடுத்துள்ள பங்குகளுக்கான உரிமையை சதிகாரர்களின் வகைக்குள் வீழ்ந்து தொழிலாளர்கள் இழந்து விடாது அவற்றை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பானா தங்கம் - வீரகேசரி