Wednesday, August 12, 2015

மலையக கட்சிகளின் பதில் என்ன?

இலங்கை அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி யுள்ளது. ரணில் தலைமை யிலான ஐக்கிய தேசிய முன்ன ணிக்கும் மஹிந்த தலைமை யிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையே பலமான போட்டி நிலவுகிறது. மலையகத்தில் போட்டியிடுகின்ற திகாம்பரம், ராதாகிருஷ்ணன் சார்ந்துள்ள கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதோடு, ரங்காவின் கட்சியும் ஆறுமுகம் தொண்டமானின் காங்கிரஸ் கட்சியும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கி புதிய ஆட்சியைக் கைப்பற்ற முழு மூச்சுடன் களத்தில் நிற்கின்றன.
மலையகம் சார்ந்த தமிழ் கட்சிகளில் ரங்காவின் கட்சியைத் தவிர திகாம்பரம், ராதாகிருஷ்ணன், ஆறுமுகம் தொண்டமான் சார்ந்த கட்சிகள் பதுளை, நுவரெலியா பிரதேசங்களில் ஆசனங்களைப் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மலையகத்தின் ஏனைய பிரதேசங்களில் தமிழ் வாக்குகளை யானைக்கும் வெற்றிலைக்கும் பெற்றுக்கொடுப்பதில் மலையகக் கட்சிகள் ஆர்வத்தோடு செயற்படுகின்றன. தமது அணிக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்து நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்ளத் துடிக்கும் மலையக அரசியல்வாதிகள் தமது அணிசார்ந்து பெருந்தோட்டத்துறை வாழ் மக்களுக்கும் பொதுவாக மலையகத்துக்கும் பெற்றுக்கொடுக்கப் போவது என்ன? மக்களைக் கவரும் மேடைப் பேச்சுக்களோ, துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்படுபவை போன்றன என்றும் ஏட்டுச்சுரக்காய்தான்.
முன்னைய மஹிந்தரின் ஆட்சியிலும், இவ்வருடம் ஜனவரியில் பதவியேற்ற ரணில் தலைமையிலான அரசும் தொழிலாளர்களுக்கு 7 பர்ச்சஸ் காணி என்பதையே உறுதிப்படுத்திவிட்டன. இரண்டாவது, சம்பள ஒப்பந்த விடயம். தேர்தல் முடிந்ததும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதனை விட வேறு விடயங்கள் உள்ளனவா?
பெருந்தோட்டங்களை உள்ளடக்கி மலையக வாழ் தமிழர்களின் தனித்துவமிக்க அடையாளங்களை பேணிப்பாதுகாக்கவும் சமூக, கலை, கலாச்சார, பாதுகாப்பு விடயமாகவும் மண்சார்ந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் என்ன?
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 1911இல் 13 வீதமாக இருந்த மலையகத் தமிழர்கள் 2011இல் 4.8 வீதமாக குறைந்திருப்பதற்கான சமூக அரசியல் பின்னணி என்னவென ஆராய வழிவகுக்கப்படுமா? இதன் பாதிப்புகள் வெளிக்கொணரப் படுமா? (பெருந்தோட்ட ஆரம்பப் பாடசாலை கள் பிள்ளைகளின் வரவின்றி தொடர்ச்சியாக மூடப்படுகின்றன).
அரசு பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றுக் கொண்டதும் JEDB, SLSPC, எல்கடுவ பிளான்டேஷன் கம்பனி ஆகியவற்றிடமும் பெருந்தோட்டங்கள் நிறுவைக்குக் கொடுக்கப்பட்டன. இத்தோட்டங்களில் தொழில்புரிந்தோரின் EPF, ETF பணமான ரூபா 1888 மில்லியனுக்கும் அதிகமான தொகை மிக நீண்டகாலமாக மத்திய வங்கியில் வைப்பிலிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இப்பணத்தின் உரிமையாளர்களான தொழிலாளர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு உத்தரவாதம் என்ன?
பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை 1904இல் – 1320, 1980இல் – 668, 1992இல் – 506, 2013இல் – 427 என தோட்டங்கள் குறைந்துகொண்டு வருகின்றன. இதனால், இத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் சமூக பாதிப்புகள் பற்றி ஆராயப்படுமா?
தொழிலாளர்களாக 1981இல் – 497,995 பேர், 1992இல் – 376,498 பேர், 2013இல் – 193,412 பேர் எனக் குறைந்துள்ளதோடு, தொழிலாளர்கள் சுயமாகவே பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறுவதற்கான பின்புலங்கள் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றமைக்கான அரசியல் பொருளாதார காரணிகள் கண்டறியப்படவும், இவர்கள் தமது வாழ்விடங்களில் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட திட்டங்கள் உள்ளனவா?
மேலும், 1995இல் 82,000 ஹெக்டேயராக இருந்த சிறு தோட்டங்க ள் 2012இல் 120,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளதோடு, தேயிலை உற்பத்தியில் 70 வீதத்தினை இவர்களே மேற்கொள்கின்றனர். இன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் சிறுதோட்ட உரிமையாளர்களாக உள்ளனர். இந்நிலைக்கு 200 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் உயர்த்தப்படுவார்களா?
மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள மற்றும் நல விடயமாக 2 வருடத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்படுகிறது. அதற்காக போலிப் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை விடுவித்து நிலத்தோடு ஒட்டிய சுயபொருளாதாரத்தில் அபிவிருத்தியடைய வகுத்துள்ள திட்டம் என்ன?
பெருந்தோட்ட தொழிலாளர்களில் 32 வீதமானோர் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்றும், 11.4 வீதமானோர் தேசிய வறுமைக் கோட்டுக்குக் கீழ் நிலையில் வாழ்கின்றனர் என்றும் கடந்தகால புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்நிலை போக்க எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கைகள் ஏதும் உண்டா?
பெருந்தோட்டங்கள் தோறும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் பாலர் பாடசாலைகளும் உருவாக்கப்படுகின்றன; வரவேற்றகத் தக்கது. இது தொழில் காரணங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. இதை யாவரும் அறிவர். இந்நிலையில், வாழ்வின் இறுதிவரை உழைத்து வயதுமுதிர்ந்த நிலையில் ஆதரவற்று இருப்போருக்காக வயோதிப இல்லங்கள் உருவாக்கப்பட திட்டங்கள் உள்ளனவா?
பெருந்தோட்டக் கம்பனிகள் தமது பயன்பாட்டிலிருந்து வருடாந்தம் ஒதுக்கப்படும் காணிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அதாவது, 2005 – 2011 காலப்பகுதியில் வருடாந்தம் 1,650 ஹெக்டேயர் காணிகள் பாவனையிலிருந்து நீக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. பெருந் தோட்டங்கள் தொடர்ச்சியாக நட்டமடைவதாகக் கூறுகின்ற இக்காலக்கட்டத்தில் காணி சட்டத்தின் கீழ் மீண்டும் அரசு பெருந்தோட்ட காணிகளைப் பொறுப்பேற்று பிரதேச செயலர்கள் ஊடாக மலையக மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படுமா?
இறுதியாக மலையக மக்களும் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனம் என்பதற்கான அனைத்து அடையாளங்களும், உரிமைகளும் கொண்டிருப்பவர்களாக விளங்குகின்றனர். இலங்கை வாழ் மலையக மக்கள் எனும் கௌரவ நிலையை அரசியல் சாசனம் ஊடாக உறுதிப்படுத்த முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
மலையக அரசியல்வாதிகளே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கான சலுகைகளையும் பாதுகாப்பையும் அதிகரித்துக் கொள்வீர்கள். பாதுகாப்புப் படைகளோடு உலாவருவீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்கள் இந்நாட்டின் கௌரவ பிரஜைகளாக வாழ அரசியல், பொருளாதார, சமூக பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்கத் தீட்டப்படும் திட்டங்கள் மூலமே உங்களுடைய எதிர்காலம் நிலையானதாக அமையும் என்பதை கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பது சமூக அக்கறை கொண்ட அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
அருட்தந்தை மா. சத்திவேல்
நன்றி: மாற்றம்