Sunday, December 7, 2008

தொழிலாளர்களும் - 2009ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டமும்

இந் நாட்டின் வருமானத்திற்கு வளம் சேர்க்கின்ற தேயிலையின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி பெருந் தோட்டங்களை நிர்வகிக்கின்ற கம்பனிகள் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தொழிலாளர்களின் சம்பள உயர்வு வழங்கப்படாததால் எதிர்வரும் 08-12-2008 பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.க இன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு, மற்றும் அரசு சார்பான ஏனைய தொழிற்சங்கங்கள் இதுபற்றி அக்கறை கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. கம்பனிகளுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள தொழிற்சங்கங்களும், இவற்றுக்கு சார்பான தொழிற்சங்களும் தொழிலாளர் நலன் சார்ந்த நியாயமான இறுக்கமான கொள்கையை கடைபிடிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.
தேயிலையின் மூலம் வருமானம்
2007ம் ஆண்டு தேயிலையில் கிடைத்த வருமானம் 1.02 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
2008ம் ஆண்டில் ஜனவரியில் இருந்து ஜூலை வரையான காலப்பகுதியில் தேயிலையின் வருமானம் 786 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2007ம் ஆண்டு இதே காலப்பகுதியில் பெற்ற வருமானத்தை விட ஏறத்தாழ 42 வீதம் அதிகமாகும். 2006ம் ஆண்டில் பெறப்பட்ட மொத்த வருமானமே 836 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இலங்கை தேயிலை சபையின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சியின் கூற்றுப்படி 2008 ம் ஆண்டு வருமானம் 1.4 – 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தற்காலிக விலை தளம்பல் பாதிப்பு ஏற்பட்டாலும் வருமானம் 1.2-1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்க்கலாம்.
2006ம் ஆண்டில் 310.8 மில்லியன் கி.கி தேயிலையின் உற்பத்தி 2007ம் ஆண்டு 304.6 மில்லியன் கி.கி குறைவடைந்தது. 2008ம் ஆண்டு உற்பத்தி 315-320 மில்லியன் கி.கி வரை எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று எமது நாட்டில் வாழ்க்கைச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளன. உலக சந்தையில் எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறான நிலைமை இருந்த போதிலும் அரசு அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து அக்கறை கொண்ட போதும் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பள உயர்வு குறித்து பாராளுமன்றத்திலும், கொள்கை வகுக்கும் இடங்களிலும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கைத்தரும் வகையில் முன் வைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.