Monday, January 21, 2013

நுவரெலியாவில் தமிழரின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வு: சிங்களவரின் சனத்தொகையில் வீழ்ச்சி





நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வடைந்துள்ளதோடு சிங்கள இனத்தவரின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இலங்கை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தினால், 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் மூலம் மேற்படி தகவல் தெரியவந்துள்ளது.
2007ம் ஆண்டில் சிங்கள் மக்களின் சனத்தொகை 46.2 வீதமாகவும், தமிழ் மக்களின் சனத்தொகை 46.6 ஆகக் காணப்பட்டது.
ஆனால் தற்போது சிங்கள் மக்களின் சனத்தொகை 39.59 வீதமாக காணப்படுவதாகவும், தமிழ் மக்களின் சனத்தொகை 57.69 காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கள மக்கள் சனத்தொகையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும்,
காணிப் பிரச்சினை, தொழில் பிரச்சினை, அரசியல் கலாசார ரீதியில் உதாசீனமான நிலைமை போன்ற காரணிகளினாலே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி- வீரகேசரி இணையம்

தேயிலை ஏற்றுமதி நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பு


ITPF என்ற பெயரில் சர்வதேச தேயிலை உற்பத்தி நாடுகளின் அமைப்பொன்று இன்று திங்கட்கிழமை இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. கறுப்புத் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் இலங்கை, இந்தியா, கென்யா ஆகிய முன்னணி நாடுகளும் இந்தோனேஷியா, மலாவி மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளும் இந்த சர்வதேச அமைப்பில் பங்கெடுத்துள்ளன.

சீனாவும் இரானும் அதன் தூதுவர்களை இன்றைய தொடக்கவிழாவுக்கு அனுப்பிவைத்திருந்ததாக இந்த சர்வதேச சங்கத்தை உருவாக்குவதில் முன்னின்ற இலங்கைத் தேயிலைச் சபையின் வர்த்தக ஊக்குவிப்புத்துறை இயக்குநர் ஹசித்த டி அல்விஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

1933 முதல் இப்படியான அமைப்பொன்றை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் 1979 இல் இறுதியாக உருவாக்கப்பட்ட ஐடிபிஏ என்ற அமைப்பு 5 ஆண்டுகளில் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.
பின்னர் 2006-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முயற்சியே 2013-ம் ஆண்டில் செயல்வடிவம் அடைந்திருப்பதாகவும் ஹசித்த டி அல்விஸ் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையை நிர்ணயிப்பது, தேயிலை நுகர்வு நாடுகளுடன் தரக்கட்டுப்பாடுகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் உற்பத்திச் செலவைக் குறைப்பது போன்ற நோக்கங்களுக்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம்

இதேவேளை, இலங்கையில் தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை மிகமோசமாக இருப்பதாக எழுப்பப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் பற்றி வினவியபோது, அந்தக் குற்றச்சாட்டை ஏற்கமுடியாது என்று இலங்கைத் தேயிலைச் சபையின் வர்த்தக ஊக்குவிப்புத்துறை இயக்குநர் ஹசித்த டி அல்விஸ் கூறினார்.
தேயிலைத் தொழிலாளர்களின் அடிப்படை மருத்துவ, சுகாதார, போக்குவரத்து, வீட்டு வசதிகள் மற்றும் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட வசதிகள் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது முன்னேறிய நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இலங்கை தேயிலை சபையின் கருத்துக்கள் தவறானது என்று மூத்த தொழிற்சங்கத் தலைவரும் செங்கொடிச் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ஓ.ஏ.ராமையா பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார். நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து பணவீக்கமும் அதிகரித்துவருகின்ற சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தொகை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது என்று அவர் விபரித்தார்.
இந்தியாவைப் போல தோட்டத் தொழிலாளர்களுக்கு மானியவிலையில் அடிப்படை உணவுப் பொருட்கள் இலங்கையில் வழங்கப்படுவது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல இலங்கையில் இன்று உருவாகியுள்ள தேயிலை ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் மூலம் சாதாரண தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

சர்வதேச வர்த்தகர்களுக்கும், உள்நாட்டு இடைத்தரகர்களுக்கும் விற்பனையாளர்களுக்குமே அதன்மூலம் வருமானம் ஈட்டமுடியும் என்றும் அவர்களும் கூடுதல் வருமானம் ஈட்டும்போது அரசாங்கத்துக்கு செலுத்தும் வரியும் அதிகரிக்கும் என்றும் அதனால் தொழிலாளர்களின் நலன்களுக்கு ஏதும் நன்மை ஏற்படாது என்றும் ஓ.ஏ.ராமையா சுட்டிக்காட்டினார்.
நன்றி- பி.பி.சி தமிழ்