Tuesday, November 3, 2015

சிறு தோட்ட தேயிலை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தெனி்யாய நகரில் சிறுத்தோட்ட தேயிலை உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடு்த்திருந்தனர்.

தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கும் கொழுந்திற்கு நியாயமான விலையை பெற்றுத் தருமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தெனியாய வைத்தியசாலையிலிருந்து பேரணியாக வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தெனியாய பஸ் தரிப்பிடம் வரை சென்று தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்கள் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை தொடர்ந்துள்ளதுடன், இதில் 300க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்

இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில்,  கொழும்பில் எதிர்வரும் 6ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

நிலைமை எப்போது மாறும்

நுவரெலியா மாவட்டத்தில் இறம்பொடை கெமினிதன் தோட்டத்தில் இருந்து இறம்பொடை இந்துக் கல்லூரிக்கு 05 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது.

கெமினிதன் தோட்டத்திற்கும் பாடசாலைக்கும் இடையில் போக்குவரத்து செய்வதற்கான வசதிகள் இல்லாததால் மாணவர்கள் நடந்தே பாடசாலைக்கு செல்ல வேண்டும்.

அண்மையில் வெதமுல்லையில் ஏற்பட்ட மண்சரிவின் போது இந்த தோட்டத்திற்கு செல்லும் பாதையும் சேதமாகியுள்ள நிலையில், மாணவர்கள் மட்டுமல்லாமல் பிரதேச மக்களும் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் 05 கிலோ மீற்றர் தூரம் நடந்து நாளாந்தம் பாடசாலைக்கு செல்கின்றனர்.

இவ்வாறு பாடசாலைக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் இடையில் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்றினை மறித்து ஏறிச் சென்ற காட்சி எமது செய்தியாளரின் கெமராவில் பதிவாகியுள்ளது.
பல கனவுகளை சுமந்து கொண்டு நாளாந்தம் பாடசாலை செல்லும் இம்மாணவர்கள் பாடசாலை முடிந்த பின்னும் 5 கிலோ மீற்றர் தூரம் நடந்து வர வேண்டியுள்ளது. மலையக்தில் நாளாந்தம் இவ்வாறு பாடசாலை மாணவர்கள் பல கஸ்டங்களை எதிநோக்கி வருகின்றனர்.

இந்த நிலமை இவ்வாறு தொடராத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் அண்மையில் தேயிலை தொழிற்சாலையிலிருந்து கழிவு தூள்களுடன் நல்ல தேயிலைதூள்களையும் தனியார் வர்த்தகர் ஒருவர் இரவு  வேளையில் கொண்டு செல்ல முற்படுகையில் அத் தோட்டத்தொழிலாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக திம்புள பத்தனை பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட வர்த்தகர் அத்தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இம்முறைப்பாட்டில் பொதுமக்கள் சிலர் தம்மை தாக்கியதாகவும் கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தோட்ட நிர்வாகமும் பொலிஸ் நிலையமும் பொதுமக்களின் முறைப்பாட்டிற்கு சரியான தீர்வினை எடுக்காத பட்சத்தில் இதுவரை 13 தொழிலாளர்கள் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைஆட்சேபித்து மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் இன்று குறித்த தோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எமது தோட்டத்தில் தோட்ட நிர்வாகம் ஒழுங்கற்ற ரீதியில் வர்த்தகருக்கு தேயிலை தூளை வழங்கியமை அச்சத்தை தருவதாக நாம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகமும் பொலிஸாரும் நடவடிக்கை எடுப்பது வேடிக்கையான விடயமாகும் என போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.