Monday, September 14, 2009

மலையக தொழிற்சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தினால் மலையக தொழிற்சங்கங்கள் இன்று ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளன. இதனால் மலையகத்தில் ஏட்டிக்குப் போட்டியான ஆர்பாட்டங்களும், போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. தொழிற்சங்கங்களின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்கள் உருவாகும் நிலையும் விரோத மனப்பான்மைகளும் தலைதூக்கியுள்ளன.
“ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்பதனை உணராத மலையக தொழிற்சங்கங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதுவது தோட்டத் தொழிலாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்பன மேற்கொண்ட ஒத்துழையாமை போராட்டத்திற்கு ஏனைய தொழிற்சங்கங்கள் அனைத்தும் உடனடியாகவே ஆதரவு வழங்கின.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல போராட்டத்துக்கான ஆதரவை ஏனைய ஏனைய தொழிற்சங்கங்கள் மாற்றிக் கொண்டன. ஒத்துழையாமை போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய மலையக மக்கள் முன்னணி பின்னர் தொழிலாளர் சம்பள வியடத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதேபோல் பிரதியமைச்சர் சுரேஷ் வடிவேல் தலையிலான பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரசும் ஜனாதிபதியின் தலையீட்மை கோரியிருந்தது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை 500 ரூபாவாக உயர்த்த வேண்டும். இல்லையேல் போராட போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளும் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் தோட்டத் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் சுட்டு ஒப்பந்தத்தில்; கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 405 ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 290 ரூபாவும் வேலை வரவுக்கான விசேட கொடுப்பனவாக 85 ருபாவும், திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 30 ரூபாவும் வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
ஆனால் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தையில் 405 ரூபா சம்பளம் வழங்குவது குறித்து பேசப்பட்டதே தவிர இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இணக்கம் எதுவும் காணப்படவில்லை என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஓ.ஏ. இராமையா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களுக்கிடையே சம்பள உயர்வு அதிகரிப்பு அறிவிப்பு தொடர்பில் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளது.
405 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கியுள்ளது என இ.தொ.கா வும், இல்லை முடிவே எடுக்கவில்லையென ஏனைய தொழிற்சங்கள் மறுப்பு தெரிவிப்பதும் தோட்டத் தொழிலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கிடையே முரண்பாடு ஏற்படுவதற்கு காரணம் என்ன? முரண்பாட்டினை தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஏற்படுத்தியதா, என்ற கேள்விகள் தோட்ட தொழிலாளர்களின் மனங்களில் உருவாகியுள்ளன.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் இன்று குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கதையாக மாறியுள்ளது.
500 ரூபா சம்பள உயர்வு கோரி நடத்தப்பட்ட ஒத்துழையாமைப் போராட்டத்தையும் கைவிடுமாறு இ.தொ.கா அறிவித்துள்ளது.
தொழிலாளர்களை போராட்டத்துக்கு தூண்டுவதும் பின்னர் உரிய இலக்கை அடையாமலேயே போரட்டத்தை கைவிடுமாறு அறிவிப்பதும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி அட்டன் நகரில் மலையக மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டப் பேரணியினை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. ஆர்பாட்ட பேரணி ஆரம்பமாகும் வேளை அங்கு ம.ம.மு க்கு எதிராக இ.தொ.கா வினர் ஆர்பாட்டம் செய்துள்ளனர். ஏட்டிக்குப் போட்டியான ஆர்பாட்டத்தினால் அங்கு பதற்ற நிலை உருவானது. ம.ம.மு யின் தலைவரும், அமைச்சருமான பெ.சந்திரசேகரன் சத்தியாக்கிரகம் செய்யும் நிலை ஏற்பட்டது.
இதேபோல் பொகவந்தலாவ நகரில் 500 ரூபா சம்பள உயர்வினை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியன ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்புப் போராட்டமும் குழப்பியடிக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்குபற்றச் சென்ற மூன்று கட்சிகளின் தலைவர்களும் இ.தொ.கா ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டனர் வாகனங்கள் மீது கற்கலால் தாக்குதலும் நடத்தப்பட்டது.
இவ்வாறு மலையக தொழிற்சங்கங்களிடையே முரண்பாடுகள் எழுந்து தாக்குதல் வரை அவை சென்றுள்ளன. சம்பள உயர்வு கோரிய போராட்டங்களை தடை செய்வதன் மூலம் யாருக்கு பாதகம் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். எனவே மலையக தொழிற்சங்கங்களின் சுயநல அரசியலுக்காகவும், எதிர்காலத் தேர்தல்களை குறிக்கோளாகக் கொண்டு முட்டி மோதுவதை விடுத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வை பெற்றுக் கொடு;க்க முயல வேண்டும்.
சுயநல அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மலையக தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையுடன் விளையாடக் கூடாது.
எனவே சம்பள அதிகரிப்புத் தொடர்பான பேச்சுவார்த்தையின் உண்மை நிலையினை அறிவிப்பதுடன் 500 ரூபா சம்பளத்தினை பெறும் வகையில் மலையக தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இல்லையேல் பாதிக்கப்பட போவது தோட்டத் தொழிலாளர்களே அன்றி மலையக தொழிற்சங்கத் தலைவர்கள் அல்ல. மலையக தொழிலாளர்களின் நலன் கருதி மலையக தொழிற்சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணம் இது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நன்றி - வீரகேசரி
மலையக மக்கள் முன்னணி வீதி ஹட்டனில் மறியல் போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளவுயர்வை வலியுறுத்தி மலையக மக்கள் முன்னணி ஏற்பாட்டில் ஹட்டனில் 13-09-2009 ஆம் அன்று நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் போராட்டம் பொலிஸாரின் தலையிட்டினால் இறுதி நேரத்தில் இடம் பெறவில்லை. இதனைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் தலைமையில் முன்னணி ஆதரவாளர்கள் ஹட்டன் நகரின் பிரதான வீதியில் வீதி மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணிநேரம் வாகனப்போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன.இந்நிலையில் ஹட்டன் பொலிஸாரால் கண்ணீர் புகை ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொகவந்தலாவையில் பதற்றம்

தோட்டத்தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளவுயர்வை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் முன்னணி,தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புக்கள் பொகவந்தலாவை நகரில் நடத்தப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டம் இ.தொ.கா.வின் ஆதரவாளர்கள் சிலரால் இடையுறு விடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்புப் போராட்டம் பொகவந்தலாவை நகரில் 12-09-2009 நண்பகல் வேளையில் இடம் பெறவிருந்தது. இந்தப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெருந்திரளான ஆதரவாளர்கள் பொகவந்தலாவை நகரில் கூடியிருந்தனர்.
இந்த நிலையில் ஜனநாயக மக்கள் முன்;னணியின் தலைவரும் எம்பியுமான மனோகணேசன்,தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் ,இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னயியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் ,மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமார் ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோரின் வாகனங்கள பொகவந்தலாவை நகரின் நுழை வாயிலுக்கு அருகில் வருகை தந்த போது இ.தொ.கா.வின் ஆதரவாளர்கள் சிலரால் திடீரென கற்களால் தாக்கப்பட்டதைத்தொடரந்து பெரும் களேபரம் ஏற்பட்டது. சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன.பொலிஸாரினால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடிய வில்லை. இந்தத்தாக்குதல் சம்பவத்தின் போது மனோகணேசன் வாகனத்துக்குச்சிறிய சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தத்தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஜனநாயக மக்கள் முன்னணி ,தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புக்களின் ஆதரவாளர்கள் வீதிமறியலில் ஈடுபட்டனர். இதன்போது மேலதிக பொலிஸார் வரவழைக்கப்படனர். மாலை 4.00 மணியளவில் நிலைமை சுமூக நிலைமைக்கு வந்தது.