Sunday, December 13, 2009

சர்வதேச தேயிலை தின மாநாடு டிசம்பர் 15 ஆம் திகதி


சர்வதேச தேயிலை தின மாநாடு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு பிரதான மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு 2005ஆம் ஆண்டு புது டில்லியில் நடைபெற்றது. அன்றையத் தினம் சர்வதேச தேயிலை தினப் பிரகடனமும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேயிலை உற்பத்தி செய்யும் எல்லா நாடுகளும் மேற்படி தினத்தில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பரப்புரை செய்து வருகின்றன.

தொழிலாளர்களின் வேதன உயர்வு, வீட்டுரிமை, கல்வி, நிலவுரிமை, சுகாதாரம், கலாசாரம், பெண்கள் தலைமைத்துவம், பால்நிலை சமத்துவம் குறித்து பேசப்பட்டு வருகின்றன. பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் ஏற்பாட்டில் இம்முறை அட்டனில் நடைபெறும் இம்மாநாட்டில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் ஐக்கிய நாட்டுச் சபையின் அபிவிருத்தி திட்ட நிறுவனமும் இணைந்து தயாரித்த பெருந்தோட்ட சமூக பத்தாண்டு அபிவிருத்தி திட்டத்தை பூரணமாக அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

சர்வதேச தேயிலை தின ஊர்வலமும் பொதுக் கூட்டமும் எதிர்வரும் 20 ஆம் திகதி மாத்தளை நகரிலும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதான மண்டபத்திலும் நடைபெறும் என்று பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் இணைப்பாளர் எஸ். முருகையா தெரிவித்தார்

மது பாவனையை கட்டுப்படுத்த மாற்று சிந்தனைகள் அவசியம்
முற்றாக ஒழிக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம் - புத்திரசிகாமணி

மலையகப் பகுதிகளில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளிலேயே மதுபாவனை அதிகரித்து காணப்படுகிறது. மலையக நகர்ப்புறங்களில் மதுபானச் சாலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மலையக நகர்ப்புற மதுபானச் சாலைகளுக்கு முன்னால் ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இது ஒரு புறமிருக்க தோட்டப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனைகள் லயன் குடியிருப்பு தொகுதிக்கு ஒன்றாக காணப்படுகிறது. இந்த எண்ணிக்கை தீபாவளி மற்றும் புதுவருட கொண்டாட்ட காலங்களில் பல மடங்காக அதிகரித்து விடுகிறது.

மலையக சமூகத்தின் மத்தியில் மாற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படும் இவ்வேளையில் மது பாவனையை முற்றாக ஒழிக்க முடியாவிடினும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மலையக அரசியல் தலை¨மைகள், புத்தி ஜீவிகள், படித்த இளைஞர்கள், நலன்புரி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. கடந்த தீபாவளி நாட்களில் பிரிடோ உட்பட சில அமைப்புகள் மது இல்லா தீபாவளியை கொண்டாடுவோம் எனும் தொனிப்பொருளில் மது ஒழிப்பு பிரசாரத்தை மேற்கொண்டது.

‘மத்தட தித்த’ மது ஒழிப்புத் திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தி வருகிறது. பெருநாள் மற்றும் விசேட நாட்களில் குறிப்பாக போயா தினங்களில் மது விற்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. பெருநாள் கொண்டாட்டங்களின் போதும் உற்சவ காலங்களின்போதும் மது விற்பதற்கு தடை விதிக்கப்படுகின்ற போதிலும் பாவனையாளர்கள் மதுவிற்கு பதிலாக கசிப்பு மற்றும் போதைவஸ்துக்களை பாவிப்பதாக கூறப்படுகிறது. அல்லது சட்ட விரோதமாக விற்கப்படும் மது, கசிப்பு வகைகளை பல மடங்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.
பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் தொழிலாளர்கள் அதிகளவில் மதுவை பாவிக்கின்றனர். பெண்கள் உட்பட குடும்பத்திலுள்ள அனைவரும் மதுவை பயன்படுத்தி வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. மதுபோதையால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கிறது. சண்டை சச்சரவுகள் ஒருபுறமிருக்க குடும்பங்கள் பிரிந்து அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. நன்றாக கற்கக்கூடிய மாணவர்கள் தொடர்ந்து தமது கல்வியைத் தொடர்வதற்கான சூழல்கள் இல்லாத நிலையில் கல்வியை இடைநிறுத்த நேரிடுகிறது. இந்நிலை தொடர்ந்தால் சமூகச் சீர்கேடுகள் நிறைந்த சமூகமாக மாறலாம். சில தோட்டப் பகுதி ஆசிரியர்களே மது விற்பனையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. திருமணம், மரணம், சமயச் சடங்குகளின்போது மது அதிகளவில் பயன்படுத்தப்படுவதை சமூக நலன்புரி அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.

கிராமப்புறங்களை அண்டிய தோட்டத் தொழிலாளர்கள் அதிகளவில் கசிப்பை பயன்படுத்துவதாக அறியப்படுகிறது. களுத்துறைப்பகுதியில் தோட்டமொன்றில் பெருநாள் கொண்டாட்டத்தின் போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் லயன்குடியிருப்புகள் அடித்து நெறுக்கப்பட்டன. அவர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டதுடன் தொழிலாளர்கள் நான்கு நாட்களுக்கு மேலாக அச்சத்தின் காரணமாக மறைவிடங்களில இருந்ததை தோட்ட மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தோட்டப் பகுதிகளில் இன்று வரையிலும் சில சில சம்பவங்கள் மது பாவனையால் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. நண்பர்களாக இருந்தவர்கள் விரோதிகளாக மாற்றிவிடும் வல்லமை இந்த மது விற்கு இருக்கிறது.
மரண வீடொன்றில் எட்டாம் நாள் சமயக் கிரியைகள் நடந்து முடிந்த பின்னர் வந்திருந்தவர்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ஆண்கள் இன்னொரு அறைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு மதுசாரத்தை பகிர்ந்து கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து இதுவும் ஒரு சம்பிரதாயமா எனக் கேட்டபோது, இல்லை அங்கிள் இவர்கள் அனைவரும் என் அப்பாவின் நண்பர்கள். அப்பா உயிருடன் இருக்கும்போது ஒன்றாக இருந்து மது அருந்துவது வழக்கம். அதனையே நானும் செய்கிறேன். வந்தவர்களை வரவேற்று உபசரிக்காவிட்டால் அது அப்பாவின் பெயருக்கே களங்கமாகிப்போய்விடும் என்றார். இந்த நிலையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை.

தொழிலாளர்கள் நாள் முழுதும் கடுமையாக உழைத்து மாலை வேளையில் தினமும் மதுபானத்தை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை இன்னும் உணராதவர்களாவே இருக்கின்றனர். போதைக்கு அடிமையான பலர் நோயாளர்களாக மாறி அவர்களின் வாழ்வதற்கான காலம் குறைந்து மரணத்தில் முடிந்து விடுகிறது.

பெருந்தோட்டப் பகுதிகளில் மதுபாவனையை முற்றாக ஒழிக்க முடியுமா?

மதுபாவனையை தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் அதற்கான மாற்று தீர்வு குறித்து நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணியிடம் கேட்டோம்.
உலகில் அதிகம் மது அருந்தும் நாடுகள் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலைத் தேய நாடுகளைப் பொறுத்தவரையில் மதுவை பயன்படுத்துவது ஒரு கௌரவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது மது பெருமளவில் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு அளவுக்கு மேல் குடித்து வீதிகளில் கிடப்பதெல்லாம் கிடையாது.

மது ஒழிப்பு என பேசுவதற்கு முன் மலையகத்தில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் இருப்பவர்கள் அனைவரும் குடிகாரர்கள் என்று அவமானப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்ட பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களை நாம் அதிகளவில் காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு விதத்தில் பார்க்கும்போது குறைந்த எண்ணிக்கையானோரே குடீக்கிறார்கள்.

அவர்களுடைய வருமானம் போதாமல் இருப்பதன் காரணமாக விரக்தியில் சிலர் மதுவை நாடலாம். அதிக வேலைப்பளு ஓய்வின்றிய உழைப்பால் களைப்படைவருக்கு மது எல்லாவற்றையும் மறக்கச் செய்து விடுவதாக எண்ணலாம். மது அருந்திய பின்னர் அவர்கள் உட்கொள்ளும் உணவு போதாமையால் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. எது எப்படி இருப்பினும் மது அருந்துவதால் ஏற்படும் தீமையை உணர்ந்து படிப்படியாக குறைக்க வேண்டும்.மது அருந்துவதை முற்றாக ஒழிக்க முடியாது. எனினும் அதனை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் குடிப்பவர்கள் மதுவால் ஏற்படும் தீமைகளை அவர்களே உணர்ந்து திருந்த வேண்டும் புகை பிடிப்பதை கட்டுப்படுத்த முடியாதிருந்தது. ஆனால் தற்போது பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் தாங்களாகவே நிறுத்திக் கொண்டனர். அது போலத்தான் இந்த மது பாவனையையும் கட்டுப்படுத்த முடியும்.

பி. வீரசிங்கம்
தினகரன் வாரமஞ்சரி