Tuesday, July 5, 2016

பாதுகாப்பு இல்லையா? உடன் பதியவும்

கொழும்பு மற்றும் புறநகர்களில்; பாதுகாப்பில்லாத இடங்களில் வேலைக்கமர்த்தப்படும் மலையக இளைஞர், யுவதிகளின் சுயவிவரங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதாக, காங்கிரஸின் உப-தலைவரும் சிரேஷ்ட தொழிலுறவு இயக்குநருமான எம்.வேங்குருசாமி தெரிவித்தார். சௌமிய பவனில் நடைபெற்ற மலையக இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தோட்டங்களில் படித்துவிட்டு வேலையின்றி அவதிப்படும் இளைஞர், யுவதிகளுக்கு அவர்களது தகுதிக்கேற்ப தோட்டங்களிலேயே, தொழில் வழங்கப்பட வேண்டும். ஆனால், தோட்ட நிர்வாகங்கள் தொழில் வழங்க மறுக்கின்றன. இதனால், விரக்தியடைந்த இளைஞர், யுவதிகள் தொழிலைத் தேடி கொழும்பு மற்றும் புற நகருக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்' என்றார். 'தோட்டங்களில் ஆள் பிடிக்கும் தரகர்கள், இப்போது தோட்டங்களில் அதிகமாக உலாவி வருகின்றனர். இவர்கள், தொழில்தருநர்களிடமிருந்து  ரூபாய் 5,000 முதல் ரூபாய் 10,000 வரை பணம் பெற்றுக்கொள்வதுடன் பெற்றோரை  ஏமாற்றி, பிள்ளைகளை பலவந்தமாக அழைத்துச் செல்லும் நிலை தோன்றியுள்ளது. தொழிற்சங்க சட்டதிட்டங்களின்படி, ஒருவர் தொழில்புரிய வேண்டுமெனில் 18 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆனால், மலையகத்தில் 14, 15 வயதுகளிலேயே இளைஞர், யுவதிகள்; வேலைக்காக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும்' என்றார். 

இது இவ்வாறிருக்க, வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக அனுப்புவதாக ஆசைவார்த்தைகள் கூறி, இந்த தரகர்கள் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி கஷ்டத்துக்குள் தள்ளிவிடுகின்றார்கள். இதேவேளை, கொழும்பில் பல வருடங்களாக தொழில்புரியும் இளைஞர், யுவதிகளுக்கு உருப்படியான சம்பளம், ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி போன்ற கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை. இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இவற்றை எம்மால் அனுமதிக்க முடியாது.   

எனவே, இ.தொ.கா இவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன்பொருட்டு மலையக பெருந்தோட்டங்களிலிருந்து கொழும்புக்குச் செல்லும் இளைஞர், யுவதிகள் தமது முழு விபரங்களையும் இ.தொ.கா தலைமைக் காரியாலயத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்துகொள்பவர்கள் தமது முழுப்பெயர், பெற்றோரின் விபரம், வதியும் தோட்டம், மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை குறிப்பிடுவது அவசியமாகும்' என்றார். 'இ.தொ.கா தலைமைக் காரியாலயம், 72, ஆனந்த குமாரசாமி மாவத்தை, கொழும்பு 07 அல்லது 011 2301359 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுகொள்ள முடியும்' எனவும் அவர் கூறினார்

முதலாளிமார் சம்மேளனத்தின் ஆலோசனைகள் - தொழிலாளர்களின் அடிமை நிலை

தொழிலாளர்களை கூறுபோடும் நோக்கில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள பல்வேறு ஆலோசனைகள் செயல்வடிவம் பெறுமானால் தொழிலாளர்களின் அடிமை நிலை மேலும் வலுப்பெறுவதோடு கம்பனிகள் ராஜபோகத்தை தொடர்ந்து அனுபவிக்கும் நிலைமை உருவாகும் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ் சதாசிவம் குறிப்பிட்டுள்ளார். 

ர் மேலும் தெரிவிக்கையில் கம்பனிகள் தோட்டங்களை தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு பிரிந்து கொடுப்பதனை அடிப்படையாக கொண்டு ஆலோசனைகளை முன்வைத்துள்ளது. ஊழைப்பின் மகத்துவத்தை இந்நாட்டிற்கு புரியவைத்த பெருமை படைத்தவர்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் விளங்குகின்றார்கள். இவர்களால்தான் இந் நாடு வளம்பெற்று விளங்குகின்றது. இவர்கள் தன்னிலும் மேலாக நாட்டை நேசிக்கின்றார்கள். எனினும் நாடு இவர்களை நேசிக்கின்றதா, என்பது கேள்விக்குறியோகவே இருக்கின்றது.  

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமிழர்களாக இருப்பதாலோ என்னவோ இவர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றன. இனவாத நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் காரணமாக இம் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி இருக்கின்றது. ஒவ்வொரு அரசாங்கத்தையும் ஆட்சிபீடம் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார்கள். தங்களுக்கு என்னவோ அரசாங்கங்களின் ஊடாக கிடைக்கப் போகின்றது என்று வெறும் கனவு காண்கிறார்கள். 

ஆனால் எதுவுமே சாத்தியப்படாத நிலையில் பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு அது குறித்த கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்ட நிலையில் மலையக மக்கள் எதிர்கொண்டுள்ளனர். 

இரண்டு முகம் காட்டுகின்ற அராசாங்கங்களை போன்றே இப்போது கம்பனியினரும் மலையக மக்களை ஓரம் கட்டுவதற்கும் அம் மக்களின் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை மழுங்கடிப்பதற்கும் முனைப்புடன் செயற்படுகின்றமை வெளிப்படையாகவே தெரிகின்றது. கம்பனியினரின் அண்மைக்கால நடவடிக்கைகள் மென்மேம் தொழிலாளர்களை அடிமைப்படுத்துவதாகவே உள்ளது. 

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 12 நாட்கள் மட்டுமே வேலை வழங்குகின்ற ஒரு திட்டத்தை கம்பனியினர் ஆலோசனைகளில் வலியுறுத்தி இருக்கின்றனர்.

தேயிலை விற்பனையின் மூலம் ஏனைய நாட்களில் தொழிலாளர் தமது வருமானத்தினை ஈட்டிக்கொள்ளும் திட்டம் தொடர்பிலும் முன்வைப்புகள் இடம் பெற்று வருகின்றன. எவ்வாறெனினும் இது ஒரு சாதகமான முன்னெடுப்பாகத் தெரியவில்லை. இதனால் பாதக விளைவுகளே அதிகமாக இருப்பதாகத் தெரிகின்றது.

தொழிலாளர்களின் உரிமைகள் பலவும் பறிபோகும் நிலையே இதனால் ஏற்படும். அத்தோடு தொழிலாளர்களின் வருமானம் அப்போதைய வருமானத்திலும் கணிசமாக குறைவடையும் அபாகரமான நிலைமையே மேலெழும் 

ஊழியர் சேமலாபநிதி, உழியர் நம்பிக்கை நிதி என்பவற்றிலும் பாதிப்பு நிலைமை அதிகமாக ஏற்படும். கம்பனியினர் வளமிக்க காணிகனை தம்மிடத்தில் வைத்துக்கொண்டு விளைச்சல் குறைந்த காணிகளை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க உள்ள சூழ்சிகரமான நடவடிக்கைகள் தொடர்பிலும் இப்போது தெரியவந்துள்ளது. 

இத்தகைய வினைத்திறன் குறைந்த காணிகளை தொழிலாளகளுக்கு குத்தகைக்கு வழங்குவதன் ஊடாக எவ்வாறு தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும் என சிந்திக்க வேண்டியுள்ளது. 

கம்பனியினரின் சூழ்ச்சி நிலைபற்றி தெரிந்தும் மலையக அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கைகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாது ஏன் வாய்மூடி மௌனியாக இருந்து வருகின்றார்கள் ஏன் என்று புரியவில்லை. கம்பனியினரின் தான்தோன்றித்தனமாக முடிவுகளுக்கு மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகள் துணை போகின்றார்களா? ஆப்படியானால் இவர்களை நம்பி வாக்களித்து அரசியல் பீடமேற்றிய தொழிலாளர்களின் நிலைமை என்னாவது?

மலையக அரசியல்வாதிகள் மௌனித்திருப்பது தொழிலாளர்களைக் காட்டிக் கொடுக்கின்ற ஒரு செயலாகும். கம்பனியினரின் நடவடிக்கைகளுக்கு துணைபோகாது இவர்கள் தொழிலாளர்களை அடிமை நிலையில் இருந்து மீட்டெடுக்க முனைதல் வேண்டும்.

கலந்துரையாடல்களின் மூலம் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்தல் வேண்டும். தொழிலாளர்களின் உரிமைக்கு தோள் கொடுக்க அரசியல்வாதிகள் முற்பட வேண்டுமே தவிர வேலியே பயிரை மேயும் கீழ்த்தரமான செயற்பாடுகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.