Monday, February 28, 2011

சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கத் தலைமைகள் மௌனம் ஏன்?

கடந்த வருடங்களில் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு தொடர்பாக மலையக தொழிற்சங்கத் தலைமைகள் ஐந்தாறு மாதங்களுக்கு முன்பிருந்தே ஆரவாரத்துடன் அமர்க்களமாக குரல் எழுப்பி வந்தன. முழங்கின. அறிக்கைகளை ஆர்ப்பரித்துவிட்டு வந்தன.

இந்த வருடம் இன்னும் சில வாரங்களே இருக்கின்ற நிலையில் 20 இற்கும் மேலான தொழிற்சங்கங்கள் இருந்தும் ஒரே ஒரு தொழிற்சங்கம் மாத்திரம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 700 ரூபா சம்பள உயர்வினை வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்து அறிக்கை விட்டிருக்கிறது. ஏனைய தொழிற்சங்கங்கள் மௌனம் சாதித்து வருவது எதனால், இதுதான் தொழிலாளர் நலன் கருதி ஆற்றுகின்ற சேவையா?

கடந்த காலங்களில் நாம் கேட்ட சம்பளத்; தொகை கிடைக்கவா செய்தது என்ற தாழ்வு மனப்பான்மையில் இருக்கின்றனரா, அல்லது பெரும் தொழிற்சங்கங்கள் என்ன தொகை கேட்கிறதோ அதனைப் பார்த்துவிட்டு பிறகு கேட்போம் என்ற நிலையில் இருக்கின்றனவா? ஆனால் ஏனைய தொழிற்சங்கங்கள் கேட்கும் தொகைக்கு ஏறுக்கு மாறாக அல்லது கூட்டிக் குறைத்து கேட்போம் என்ற நிலையில் இருப்போம் என்கின்றனரா?

தொழிலாளர்கள் நலனையே கொண்டு செயற்படும் தொழிற்சங்களாக இருந்தால் முன் கூட்டியே இந்த தொழிற்சங்கங்கள் கேட்டிருக்கும் அல்லவா?

இப்படி காலத்தை கடத்தி வந்தால் எப்படி? தலைவர்களுக்கு அப்படி ஒன்றும் நட்ட ஏற்பட போவதில்லை எப்படியும் தோட்டதொழிலாளர்களே நட்டமும் கஷ்டமும் அடைவர்.

வருடா வருடம் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கிடைக்கும் என்று தலைவர்களின் வாக்குறுதிகளை வேதவாக்காக எண்ணி மனப்பால் குடித்து பின்னர் இறுதியில் பெரும் ஏமாற்றம் அடைகின்றனர்.

இந்த நிலை தொடரக்கூடாது. தொழிற்சங்க மகத்துவம் மலையகத்தில் ஓரளவுக்கு மங்கி வருகின்ற வேளையில் தொழிலாளர் தலைவர்கள் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் முன்பு போல் பிடிப்பு ஏற்பட வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஆயுதம் தொழிலாளர்களுக்கு நியாயபூர்வமான சம்பளத்தை பெற்று தருவதுதான். தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த காலங்களில் பெரும் தொகையினைப்பெற்றுத தருவோமென்று கூறி கடைசியில் யானைப் பசிக்கு சோளப்பொரி என்ற கதையாக்கியதை போன்ற கதையாகி விடக்கூடாது.

தலைவர்கள் தியாக சிந்தையுடனும் உயர் சிந்தையுடனும் உழைகை;கும் வர்க்கத்தின் மேன்மைக்காக ஒன்றிணைந்து இவ்வருடம் சம்பள உயர்வினை பெற்றுத் தருவார்கள் என்று பலரும் நம்பியே இருக்கின்றனர்.

இராகலை டி. ஆர். எஸ்

மரக்கறி உற்பத்தியாலர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு


மலையகத்தில் மரக்கறி உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் மரக்கறி வகைகளை சாக்குகளில் அடைத்து அனுப்புவது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் நுவரெலியா, கந்தப்பளை, வெலிமடை பகுதி விவசாயிகள் வர்த்தகர்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்

மரக்கறி வகைகளை உற்பத்தி செய்யும் தோட்டங்களில் இருந்து அதிக தூரத்தில் உள்ள பிரதான வீதிக்கு கொண்டுவரும் போது பிளாஸ்டிக் கூடைகளில் கொண்டு வருவது சிரமமாக இருப்பதாகவும் அதனால் சாக்குகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் அமைச்சரிடம் விடுதத கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

வெளிமாவட்டங்களுக்கும் மரக்கறி வகைகளை அனுப்பும்போது பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்துவதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.இன்னும் ஆறு மாதங்களில் அதனை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சாக்குகளில் மரக்கறிகளை அனுப்பும்போது அவை பழுதடைவதால் பிளாஸ்டிக் கூடைகளில் அவற்றை அனுப்பவேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

சாக்குகளில் மரக்கறிகளை உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து பிரதான பாதைக்கு கொண்டுவர சாக்குகளை பயன்படுத்த பொலிஸார் தடுப்பது குறித்தும் அமைச்சரின் கவனத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது.