Friday, November 27, 2009

நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் கிட்டும் : பசில் ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அதிக கூடிய வாக்குகள் கிடைக்கும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ கொட்டக்கலை காங்கிரஸ் தொழில்நுட்ப வளாகத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்தின் கடந்த நான்கு வருட ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளமையை நீங்கள் கண்கூடாக பார்க்கின்றீர்கள். ஆமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைகளுக்கமைய மலையக மக்களுக்கு மேலும் பல சேவைகளை நாம் செய்து வருகின்றோம்.

வடக்கில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த போது இந்திய மக்கள் எமது நாட்டின் மீது தப்பான அபிப்பிராயத்தையே கொண்டிருந்தனர். இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசி இந்திய நாடாளுமன்ற குழுவினரை இலங்கைக்கு வரவழைத்தார்.

இவ்வாறு வருகை தந்த குழுவினர் வடக்கின் இடம்பெயர் முகாம்களுக்கும் சென்று அங்கு தங்கியிருந்த மக்களின் நிலைமைகளை ஆராய்ந்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கும் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்தனர். இதன் மூலமாக இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு தொகை வீடுகள் அமைத்து கொடுப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அத்துடன் இந்திய நாடாளுமன்ற குழுவினரின் மலையக விஜயத்தின் ஊடாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கேற்ப தோட்டப் பகுதி மக்களுக்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வீடுகள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெருந்தோட்ட மக்கள் அளப்பரிய சேவையாற்றி வருகின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி மஹிந்த சிந்தனையில் பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளார்.

கடந்த காலங்களில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு கணிசமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

எனவே எதிர்வரும் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து கூடுதலான வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார். இக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த். சி.பி.ரத்நாயக்கா, முத்துசிவலிங்கம், எஸ் ஜெகதீஸ்வரன், மத்திய மாகாண கல்வி அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.