Sunday, September 14, 2008

றுவான்வெல தோட்டத்தில் மோதல் ஒருவர் பலி மக்கள் அச்சத்தில் கோவில்களில் தஞ்சம்

றுவான்வெல செஸ்ரபோர்ட் தோட்டத்தில் நேற்று முன்தினம் (13-09-2008) சனிக்கிழமை தமிழர் ஒருவருக்கும் சிங்களவர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறினால் சிங்களவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமானார். இதையடுத்து நேற்றுக் காலை அந்தத் தோட்டத்திற்கு திரண்டு வந்த சிங்களவர்கள் தமிழர்கள் மீது மோசமான தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதனால் படுகாயமடைந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் றுவான்வெல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் இந்தத் தாக்குலில் காயமடைந்துள்ளனர். இத் தோட்டத்திலுள்ள 80குடும்பங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். பெண்கள் அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலிலும் ஆண்கள் றப்பர் தோட்டங்களினுள்ளும் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு மூன்று தமிழர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பிறப்பத்தாட்சிப் பத்திரம் பெற இ.தொ.கா ஏற்பாடு

பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் மலையக தோட்டத் தொழிலாளர்களில் 30 சதவீதமானவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. மலையக தோட்டத் தொழிலாளர்களில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முதல் கட்டமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி,பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யும் பொருட்டு, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மற்றும் பொது நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியா ஆகியோரின் ஒப்புதலுடன், அமைச்சரவை பத்திரமொன்று அண்மையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் முன் வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மாத காலத்தினுள் விசேட ஏற்பாட்டின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து தோட்ட மக்களுக்கும் அவர்களது பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் பதிவு செய்யப்படாத பிறப்புகள், தேடிக் கண்டு பிடிக்க முடியாத பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை புதிதாகப் பதியவும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இது குறித்து அறிவுத்தும் கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை காலை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை காங்கிரஸ் தொழிற் கூடத்தில் நடைபெற்றபோது கொழும்பு பதிவாளர், திணைக்கள அதிகாரிகள், ட்ரஸ்ட் நிறுவன அதிகாரி, இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் இல்லாதவர்கள், தத்தமது தோட்ட குடும்பநல அதிகாரிகளை அணுகி தமது விபரங்களை கையளிக்குமாறு வேண்டப்படுகின்றனர். முதலில் தோட்டத் தொழிலாளர்கள் தமது விபரங்களை தெரிவிக்க வேண்டும். இதற்கு புறம்பான படிவமொன்று விநியோக்கப்பட்டுள்ளது.