Tuesday, December 22, 2015

சம்பள உயர்வு வழங்காவிடின் தோட்டங்களை கையளியுங்கள்

தோட்டங்களின் மூலம் வருமானம் இல்லாவிட்டாலோ, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாவிட்டாலோ அவற்றை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு சபை முதல்வரும் அமைச்சருமான லக்க்ஷ்மன் கிரியெல்ல தோட்ட கம்பனிகளை வலியுறுத்தியுள்ளார்.
பெருமளவான உள்ளூர் முதலீட்டாளர்கள் தோட்டங்களை பொறுப்பேற்று தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அமைச்சர் லக்க்ஷ்மன் கிரியெல்லவின் தலைமையில் நடைபெற்றது. இங்கு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட அமைச்சர், சிலர் தோட்டங்களினூடாக கிடைக்கும் வருமானம் போதாது என்று கூறிக்கொண்டு லாபத்தை மறைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
புதிய அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கமைய அரசாங்க ஊழியர்களுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கியிருக்கிறோம்.இவர்களுக்கு மட்டுமன்று நாட்டிற்கு அமைதியாக சேவையாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு துரிதமாக  சம்பள உயர்வு வழங்குமாறு தோட்ட கம்பனிகளிடம் வலியுறுத்துகிறேன். இல்லாவிட்டால் சகல தோட்டங்களையும் அரசாங்கத்திடம் கையளிக்குமாறு தெரிவிக்கிறேன். நாம் எந்த சவாலையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சில தோட்ட உரிமையாளர்கள் தோட்டங்களை நிர்வகிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வெள்ளைளைக்காரர்களின் காலத்தில் ஒவ்வொரு கம்பனிக்கும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் வீதமே தோட்டங்களுக்குக்கு இருந்தன.ஆனால் இன்று நிலைமை முற்றாக மாறியிருக்கிறது.
 சில தோட்ட உரிமையாளர்களுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர் காணியிருக்கிறது. சிலர் தோட்டங்களினூடாக கிடைக்கும் வருமானம் போதாது என்று கூறிக்கொண்டு லாபத்தை மறைக்கின்றனர்.தோட்டங்களினூடாக வருமானம் கிடைக்காவிட்டாலோ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாவிட்டாலோ சகல தோட்டங்களையும் அரசாங்கத்திடம் கையளியுங்கள்.
 பெருமளவான உள்ளூர் முதலீட்டாளர்கள் தோட்டங்களை பொறுப் பேற்க தயாராாக உள்ளனர். அவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் தயாராக இருக்கிறார்கள். பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்யவும் முன்னேற்றவும் அரசாங்கம் தயாராக இருக்கிறது.
தோட்டங்களின் மூலம் வருமானம் இல்லாவிட்டாலோ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாவிட்டாலோ அவற்றை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு தோட்ட கம்பனிகளிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருப்பதன் ஊடாக மக்கள் ஆணை குறித்து தெளிவாகிறது.குரோத அரசியலை கைவிட்டு நாட்டை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு சகல அரசியல்வாதிகளிடமும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.