Tuesday, March 15, 2016

நுவரெலியா - வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்


நுவரெலியா மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்க கோரி நுவரெலியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று (15) காலை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இந்த ஆர்ப்பாட்டம் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பு பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்றது. இதன்போது 50ற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்களின் பட்டப்படிப்பினை முடித்து வேலையில்லாத நிலையில் மிகவும் கஷ்டத்தினை எதிர்நோக்கி வருவதாகவும் உடனடியாக அரசாங்கம் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இதன்போது தெரிவித்தனர். 

அத்தோடு பட்டதாரிகள் மூலம் தயாரிக்கப்பட்ட மணு ஒன்றும் நுவரெலியா பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. 

உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டகாரர்கள் மேலும் தெரிவித்தனர். 

கடும் வெயில், பொருளாதார சிக்கல்... - அல்லலுறும் மலையக மக்கள்


மலையகத்தில் கடும் வரட்சியால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த மூன்று மாத காலமாக பெருந்தோட்ட பகுதியில் கடுமையான வெயில் நிலவி வருவதோடு காலை வேளையில் கடும் பணி பொழிவும் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. 

கடுமையான பணி காரணமாக அதிகமான தேயிலை செடிகள் கருகி காணப்படுவதோடு, தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சலும் குறைவடைந்துள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு அதிகமான வேலை நாட்களை வழங்க முடியாத சூழ்நிலைக்கு தோட்ட நிர்வாகங்கள் தள்ளப்பட்டுள்ளன. 

தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மாத்திரமே தொழில் வழங்கப்படுவதால் பொருளாதார ரீதியில் தனது குடும்ப சுமையுடன் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு முகங்கொடுக்கின்றனர். 

ஒரு நாள் சம்பளத்திற்காக தோட்ட தொழிலாளர்களை 18 கிலோ கொழுந்தினை பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுக்கின்றது. தற்போது தேயிலை செடிகளில் கொழுந்தின் விளைச்சல் குறைந்தே காணப்படுவதால் நிர்வாகங்கள் கேட்கும் 18 கிலோ கொழுந்தினை பறிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

கூட்டு ஒப்பந்தம் முடிந்து ஒரு வருடம் காலவதியாகிய போதிலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அசமந்த போக்கினை கடைப்பிடிப்பதாக தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயிரம் ரூபாய் பெற்று தருவதாக தொழிலாளர்கள் மத்தியில் உறுதி மொழி வழங்கிய போதிலும், இக்கட்சி எவ்வித பேச்சுவார்த்தையையும் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, தற்போது அமைச்சராக இருக்கின்ற பழனி திகாம்பரம், தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆயிரம் ரூபா பெற்று தருவதாக கூறியதாகவும், ஒரு நாளுக்கு நூறு ரூபாய் அடிப்படையில் மாதாந்தம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வழங்குவதாக குறிப்பிட்டதாகவும், இப் பணம் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை எனவும் இதனால் அவர்கள் மன வேதனையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

அத்தோடு கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மலையக மக்களுடைய வயிற்றில் அடித்த ஒரு விடயம் என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இம் மாதம் தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட சம்பளம் 3000 ரூபாய்க்கும் கீழ்ப்பட்ட தொகையே எனவும் தெரியவந்துள்ளது. 

இதனால் இவர்கள் தனது குடும்ப தேவைகளை செய்து கொள்ள முடியாத பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் கடுமையான வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு காணப்படும் இதேவேளை அதிகமான பகுதியில் காடுகளை எரித்ததால் அங்கிருந்த நீர் ஊற்றுகள் வற்றிப்போயுள்ளது. 

குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் நீர் வசதியில்லாமல் பாதிக்கப்படுவதோடு, விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அத்தோடு அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் பல்வேறு இடர்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போது தோட்ட பகுதியில் வேலைவாய்ப்பு குறைவடைந்துள்ளதால் குடும்ப வருமானத்தினை ஏற்படுத்திக் கொள்வதற்காக வெளிமாவட்டங்களுக்கு மலையக இளைஞர்கள் படையெடுக்கின்றனர். 

எனவே இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் உட்பட மலையக அரசியல்வாதிகள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென மலையக தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

- அத தெரண- 

தோட்டத் தொழிலாளர்கள் நடு வீதியில்

கடவுளின் மக்கள் என கருதப்படும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று நடு வீதியில் விடப்பட்டுள்ளனர், ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்று தொழிலாளர்களை கண்டுகொள்வதேயில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹட்டன் - வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட்டத்தில்  ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 


அவர் மேலும் கூறியதாவது, எனது ஆட்சியின் போது மலையக மக்களுக்காக பல அபிவிருத்தித் திட்டங்களை நான் முன்னெடுத்தேன். வீதி அமைப்பு, பாடசாலை அமைப்பு என உட்கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கப்பட்டன. இவ்வளவு செய்தும் மக்கள் மத்தியில் போலிக் கதைகளை கட்விழ்த்துவிட்டு சதிகாரர்கள் அவர்களை திசை திருப்பிவிட்டனர். 

மலையக மக்கள் கடவுளின் மக்களென சிங்கள கவிஞர் ஒருவர் கவிபாடியுள்ளார். ஆன்மீக வழிபாடுகளில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். இறைவழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இதன் ஊடாக மேற்படி கூற்று உறுதியாகின்றது. 

எனது ஆட்சியின்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தேன். ஆனால், இன்று என்ன நடக்கின்றது. 1000 ரூபா தரப்படும் என்றனர். 2500 ரூபா வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் அறிவித்தனர். இவை நடந்துள்ளனவா? 

மலையக இளைஞர்களுக்கு கொழும்புக்கு செல்லமுடியாத நிலை காணப்பட்டது. பாதுகாப்பு கெடுபிடிகள் உச்சமட்டத்தில் இருந்தன. ஆனால், போரை முடித்து வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதி மக்களுக்கும் நாம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம். 

வடக்கு, கிழக்கிலும் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தோம். ஆனால் அவர்களின் இதயங்களை வென்றெடுக்க முடியவில்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.