Monday, September 29, 2008

சர்வதேச மனித உரிமை சாசனம் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டே எமது மனித உரிமைகள் பறிக்கப்பட்டன.

பிரித்தானிய குடியேற்ற ஆட்சியின் போது இலங்கை மக்கள் எப்படி நடத்தப்பட்டார்களோ அது வேறு விடயம். ஆனால் இலங்கை சுதந்திரமடைந்தபின் இலங்கையிலிருந்த அனைத்து சமூகத் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணம் எழுந்த பிறகு, இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் மலையக தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் முதல் பாராளுமன்றத்திலேயே கிட்டத்தட்ட ஆறு லட்சம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை. 20ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் அநீதியும் மிக மோசமான மனித உரிமை மீறலுமாகும்.

1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதி சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமை சாசனத்தின் 15வது உறுப்புரை (1) ஒரு தேசிய இனத்தவராக இருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. (2) எவரதும் தேசிய இனத்துவம் மனம் போக்கான வகையில் பறிக்கப்படவோ, தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுவதோ ஆகாது என வலியுறுத்துகின்றது. சர்வதேச மனித உரிமை பிரகடனம் பிரகடனப்படுத்தப்பட்ட அதே ஆண்டிலேயே எமது பிரஜா உரிமையும் பறிக்கப்பட்டது. ஆகவே இதனைவிட உரிமை மீறல் இருக்குமா என்பது சந்தேகமே.

ஆகவே மலையகத் தமிழ் மக்களின் இந்த பிரஜா உரிமை பறிப்பு சமகால அரசியலில் ஒரு மனித உரிமைக் கண்ணோட்டத்தில் கூடப் பார்த்து நிவர்த்திக்கப்படாமல் இன்னும் பிரஜாவுரிமை எமது இலங்கையின் நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றப்படாமலிருப்பது மனித நாகரீகத்திற்கே வெட்கக் கேடான செயலாகும். எனவே மiலையக மக்களின் பிரச்சினையை இன்னும் பிரஜாவுரிமை பிரச்சினையாக மாத்திரம் மட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் மலையக தலைவர்களும் தேசிய கட்சியை சார்ந்த தலைவர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு விடயமாகும்.
- சமகால அரசியல்- அரசியல் தீர்வு- அ. லோறன்ஸ்

பெருந்தோட்டக் குடியிருப்பு தீ விபத்துக்கள் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

பெருந்தோட்ட பகுதி குடியிருப்புக்களில் ஏற்படும் தீ விபத்து தொடர்பான காரணத்தை மின்சாரசபையினரும், அனர்த்த நிவாரண அமைச்சு அதிகாரிகளும் இணைந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும்படி நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் வீ. புத்திரசிகாமணி கேட்டுக்கொண்டுள்ளார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திச் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்ட கூட்டத்தில் கல்நடை அபிவிருத்தி அமைச்சர், சீ.பி ரத்நாயக்க, பிரதியமைச்சர் மு.சிவலிங்கம், ஆகியோர் உட்பட மத்திய மாகாணசபை அமைச்சர்கள், நுவரெலியா மாவட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சம்பள உயர்வுக்கு காத்திருக்க முடியாது கூட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும் - அமைச்சர் பெ. சந்திரசேகரன்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தின்படி இன்னும் ஒரு வருடம் தமது சம்பள உயர்வுக்காக காத்திருக்க முடியாது. கூட்டு ஒப்பந்தம் என்ற இந்த நடைமுறை கிழித்தெறியப்பட வேண்டும் என அமைச்சர் பெ. சந்திரசேகரன் நானுஓயா பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வினை கம்பனிகளும், சில தொழிற்சங்கங்களும் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கம் எதிர்பார்ப்பதை நாம் ஏற்க முடியாது சம்பள உயர்வை பற்றி அரசாங்கத்துடன் பேசினால் கம்பனிகளுடன் பேசுங்கள் என்று தட்டிகழித்து விடுகின்றனர். அரசு தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கம்பனிகளையும் தொழிற்சங்கங்களையும் சுட்டிக்காட்டி தப்பி விடவும் முடியாது.