Thursday, March 8, 2018

தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது

கண்டி, திகன பகுதியில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கதொரு சம்பவமாகவே அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பா.உ இந்த அசம்பாவிதங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கடந்த வருடங்களையும் இந்த வருடத்தின் இதுவரையான காலகட்டத்தையும் ஆராய்ந்து பார்க்கின்றபோது, மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான மோதல்கள் சில தீய சக்திகளால் திட்மிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் அண்மையில் கூறியிருந்தார்.

கடந்த காலங்களைப் பொறுத்தவரையில் எமது சகோதர மக்களாகிய முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்; சம்பவங்கள் தொடர்ந்து நடாத்தப்பட்டு வந்துள்ளன. தம்புள்ளையிலிருந்து மாவனல்லை, காலி ஜிந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, குருனாகலை என அது தொடர்ந்து அண்மையில் அம்பாறை, இப்போது திகன என மேலும் தொடரும் நிலைமைகளையே காணக்கூடியதாக இருக்கின்றது.

அம்பாறையில் இடம்பெற்ற சம்பவங்களின் சூடு தணியும் முன்பதாகவே திகன சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்றிருந்த ஒரு சம்பவத்தின் பின்னணியாகவே இந்த  வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றன. இச் சம்பவத்தினை ஆராய்கின்றபோது, இது முழுமனே முஸ்லிம் மக்களின் சொத்துக்களை அழிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகவே விளங்குகின்றது.

மேற்படி சம்பவத்தின்போது பொலிஸார் தங்களால் இயன்றளவில் தங்களது கடமைகளை நிறைவேற்றியதாகவே தெரிய வருகின்றது. என்றாலும், பொலிஸாரையும் மீறிய நிலையிலேயே முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு அமுலில் இருந்த போதிலும் நகர்ப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய உட்புற குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

ஒரு தனிப்பட்ட பிரச்சினையானது இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. எனவே, இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமல் தவிர்ப்பதற்கான காரணிகள் குறித்தும் ஆராய வேண்டியுள்ளது.

அதே நேரம், இத்தகைய செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, ஏதாவதொரு சம்பவம் இடம்பெறும் வரையில் பார்த்திருந்து, அல்லது வேண்டுமென்றே ஒரு சம்பவத்தை உருவாக்கி, அதிலிருந்து ஆரம்பித்து இத்தகைய வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக, நான் இந்த சபையிலே ஒரு விடயத்தைக் கூற வேண்டும். அதாவது, தமிழ் - சிங்களப் புத்தாண்டு அண்மிக்கின்ற காலப்பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களில் சிங்கள மக்கள் பொருட்கள் - குறிப்பாக ஆடைகள் வாங்கக்கூடாது என பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது ஒரு வழமையாகி வருகின்றது. இதன் பின்னணியில் ஒரு சில சுயலாப வர்த்தகர்களே இருக்கின்றனர் அன்றி, இதன் பின்னணியில் வேறு ஒன்றும் கிடையாது.

அந்த வகையில்தான் மேற்படி சம்பவங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. இந்த வருட தமிழ் - சிங்களப் புத்தாண்டு அண்மித்து வருகின்ற காலகட்டத்திலேயே மேற்படிச் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. அதாவது முஸ்லிம் மக்களது வர்த்தக நிலையங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய காலகட்டத்ததைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம் மக்களில் பலரும் அரச தொழில்வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். கடந்தகால யுத்தம் இதற்கொரு காரணமாகலாம். இவ்வாறு அரச தொழில்வாய்ப்புகள் மறுக்கப்படுகின்ற மக்கள் வர்த்தகங்களில் ஈடுபடுகின்றபோது, அதனையும் தாக்கி அழிக்க முற்பட்டால் அந்த மக்கள் தங்களது வாழ்வாதாரங்களுக்காக வேறு என்ன செய்வார்கள்? என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனவே, தங்களது சுயலாபங்களுக்கு இனவாதத்தினை பூசிக் கொண்டு, இந்த நாட்டை பின்தள்ளிச் செல்லாது எல்லோரும் இணைந்து இந்த நாட்டினை முன்னேற்றவே முன்வர வேண்டும்.

எம்மால் எல்லாற்றையும் செய்தும் இந்த இனவாதத்தினை ஒழிக்க முடியாவிட்டால் ஒருபோதும் முன்னேற முடியாது என்பதை நான் இந்தச் சபையிலே வலியுறுத்த விரும்புகின்றேன். எனவே, தயவு செய்து எவராக இருந்தாலும் இனவாதத்தைப் பூசிக் கொண்டு திரியாதீர்கள். மனித நேயத்துடன் வாழ்ந்து பார்க்க முன்வாருங்கள் என அழைப்பு விடுகின்றேன்.

20 ஆண்டுகால பதவியில் இருந்த முதல்வருக்கு சொந்த வீடில்லை

இந்தியாவின் திரிபுரா மாநில முதல்வராக கடந்த 20 ஆண்டுகளாக பதவியில் இருந்த மாணிக் சர்க்கார் தனக்கென சொந்த வீடு இல்லாததால் மனைவியுடன் கட்சி அலுவலகத்தில் தங்கியுள்ளார்.

திரிபுராவில் 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியை இழந்தார்.

திரிபுராவில் 25 ஆண்டு காலமாக நீடித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சியை பாரதிய ஜனதாக் கட்சி முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவின் எளிமையான முதல்வர் என அழைக்கப்பட்ட மாணிக் சர்க்கார் இம்முறை சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

இவ்வளவு காலம் பதவியில் இருந்தாலும் அவருக்கென சொந்த வீடொன்று இல்லை. தனக்குக் கிடைத்த பணத்தையும் கட்சிக்கு ஒப்படைத்து விட்டார். மனைவியின் வருமானத்தில் தான் அவரது குடும்பம் இருந்தது.

இந்நிலையில், 5 ஆவது முறையாக அரியணையில் ஏறும் வாய்ப்பை இழந்த மாணிக் சர்க்கார் முதல்வருக்கான வீட்டில் இருந்து வெளியேறினார்.

சொந்தமாக வீடு இல்லாததால் அவர் மனைவி பாஞ்சாலியுடன் கட்சி அலுவலகத்தில் தங்கியுள்ளார்.

உறவினர்கள் வீடு இருந்தும் அவர் அங்கு செல்லாமல் கட்சி அலுவலகத்திற்கு சென்று விட்டார். மேலும், அவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் தங்கவும் விரும்பவில்லை.

மாணிக் சர்க்கார் தற்போது குடியேறிய கட்சி அலுவலகத்தில் இரண்டு அறைகளுடன் குறைந்தளவான வசதிகளே உள்ளன.

தனது பங்களிப்பு கட்சியோடு இருக்க வேண்டும் என்பதற்காக கட்சி அலுவலகத்திலேயே அவர் தங்கிவிட்டதாகவும் தமது கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள் தான் எனவும் திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பஜன்கர் தெரிவித்துள்ளார்.

65 வயதான சர்க்கார் தனக்கு சொந்தமான பூர்வீக சொத்தை தங்கைக்கு தானமாகக் கொடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பி.பி.சி தமிழ்