Sunday, July 19, 2009

போக்குவரத்து வசதிகள் அற்ற நிலையில் பெருந்தோட்டங்கள் கவனிக்குமா இ.தொ.கா.?


பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்ற போதிலும் தொழிலாளர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.


கம நெகும, மக நெகும திட்டங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் தோட்டப் பாதை கள் கொங்கிரீட் போடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளன. ஆனால் நகரப் பகுதிகளுக்குச் செல்லும் வீதிகள் குன்றும் குழியுமாகவே காணப்படுகிறது. வெள்ளைக்கார துரைமாரின் நிர்வாகத்தின் கீழ் இருந்ததைவிட மிகவும் மோசமான நிலையில் பிரதான வீதிகள் காணப்படுகின்றன.


இன்றைய நவீன யுகத்தில் மலையக மைந்தர்கள் இலக்குகளுக்காக இடைவிடாது குரல்கொடுத்து வருகின்ற போதிலும் வீதிப் புனரமைப்பும், வாகன போக்குவரத்து வசதிகளும் இன்றுவரை பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது.


குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் செறிவான தொழிலாளர்களை உள்ளடக்கிய தல வாக்கலை நகரை அண்மித்த தோட்டப் பகுதி வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. இரவு நேரங்களில் மனித நடமாட்டத்திற்கு ஏற்றதாக வீதிகள் இல்லை.


குன்றும் குழியுமாக காட்சி தரும் இந்த வீதிகளில்தான் தினமும் மக்கள் பயணிக்கின்றனர்.


தோட்டங்களுக்கும் நகரத்திற்குமிடையே சாதாரணமாக 5 கி. மீற்றரிலிருந்து 15 கி. மீற்றர் வரையான தூர த்தை நடந்தே கடக்க வேண்டியிருக்கிறது. இடை நிலை, உயர்தர மாணவர்கள் நகர்ப்புற பாடசாலைகளுக்கு செல்வதானால் அதிகாலை 5.00 மணிக்கெல்லாம் புறப்பட்டே ஆக வேண்டும். சற்று தாமதமானால் கூட பாடசாலைக்குச் செல்ல முடியாது போய்விடும்.


காலை முதல் மாலை வரை தேயிலை மலை முகடுகளில் மண்டியிட்டுக் கிடந்து, கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் மக்கள் கால்நடையாகவே நகரங்களுக்கு செல்கின்றனர்.


நாளொன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இவ்வாறான வீதிகளைப் பயன்படுத்துகின்றனர். வீதிகள் குன்றும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.


இவ்வாறான வீதிகளில் வாகனங்கள் சேவையில் ஈடுபடுவது மிகவும் குறைவு. தோட்டப் பகுதிக்கு பஸ் போக்குவரத்துகள் இடம்பெறுவதில்லை என்றே கூறவேண்டும். கிராமப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது தோட்டப் பகுதிகளின் நிலைமைகள் மிகவும் கவலைக்குரிய நிலையில் காணப்படுகிறது.


தோட்டத்தில் வேலை செய்து ஓய்வுபெற்ற ஒரு தொழிலாளர் தமது ஊழியர் சேமலாப நிதியில் ஒரு வாகனத்தை மிகவும் குறைந்த விலையில் அவ்வாகனம் வீதியில் நகர்ந்து சென்றாலே போதும் என்ற நிலையில் தான் காணப்படும்.அவ்வாறான வாகனங்களே தோட்டப் பகுதிகளுக்கான சேவையில் ஈடுபடு கின்றன. பழைய வாகனங்களே மக்களை ஏற்றி இறக்கும் பணியை கனக்கச்சிதமாக செய்து வரு கின்றன.


ஓரிரு வாகனங்கள் சேவையில் ஈடுபடுகின்றன.சேவை மனப்பான்மையில் அவர்கள் ஈடுபடுவதில்லை. எந்தளவுக்கு பணத்தை வசூலிக்க முடியுமோ அந்தளவிற்கு சாதித்துவிடுவர்.


இரண்டு வாகனங்கள் அந்த வீதியில் சேவையில் ஈடுபடுமாயின் அவர்களுக்குள் போட்டா போட்டிகள் வேறு. ஒரு வாகனத்தில் செல்லும் ஒரு மாணவன் அந்த வாகனம் பழுதடைந்து விட்டால் வேறு வாகனத்தில் ஏற்றாத சம்பவ ங்களும் நடந்திருக்கின்றன.


இந்நிலையில் வாகனங்களில் பயணம் செய்து பழக்கப்பட்ட அந்த மாணவர்கள் அதிகமாக மழைபெய்யும் நாட்களில் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் போவதாக அந்த பெற்றோர் தெரிவித்தனர். தோட்ட வீதிகளில் செல்லும் வாகனங்களில் சாதாரணமாக 12 பேருக்கு மேல் பயணம் செய்ய முடியாது. எனினும் வாகனச் சொந்த க்காரர்கள் அவர் களால் முடிந்தள விற்கு ஆட்களை ஏற்றி மூச்சுகூட வெளியில் விட முடியாமல் நகர்ந்து நகர்ந்து செல்லும், போக்குவரத்துக்கென பயணிகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணமானது மூன்று மடங்கு அதிகரித்த நிலையே காணப்படுகிறது.


தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது கஷ்டப்படும் இந்த மக்கள் கட்டண அதிகரிப்பு காரணமாக தமது வீட்டுக்குத் தேவையான சாமான்கள் அனைத்தையும் ஒரு மூடையாகக் கட்டி அதனைத் தலையில் சுமந்துகொண்டு கால் நடையாகவே வீடுகளுக்குத் திரும்புவதுண்டு


இவர்களின் நிலைமை இவ்வாறிருக்க பெரும்பாலான தோட்டப் பகுதிகளில் ஐந்தாம் வகுப்பு வரையே கற்பிக்கப்படுகின்றது.


ஒரு சில பாட சாலைகளில் மட்டுமே சாதாரண தரம் வரை கற் பிக்கப்படுகிறது. உயர்தர பாடசாலைகள் நகர்ப் புறப் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இதனால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மிகுந்த அசௌகரியமான சூழலை எதிர்நோக்குகின்றனர்.


சில பெற்றோர் தோட்டப் பாடசாலையில் ஆசிரியர்கள் சரிவர கற்பிப் பதில்லை எனக்கூறி நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்புகின்றனர்.


இச் சிறார்கள் தமது சக்திக்கும் பலத்திற்கும் அப்பாற்பட்டு புத்தகப் பைகளை சுமந்துகொண்டு பல மைல் தூரம் நடந்தே பாடசாலைக்குச் செல்கின் றனர். பாடசாலை செல்வதற்கிடையில் களைத்துப் போகும் இச்சிறார்கள் உரியமுறையில் தங்கள் கல்வியைத் தொடர முடியாதுள்ளது.


பள்ளிச் சிறார்கள் தினமும் மழையிலும் குளிரிலும் நடந்து செல்வதைப் பார்க்கும் போது பரிதாபமாக இரு க்கிறது. மண் சரிவு, இடி, மின்னல் போன்ற இயற்கை அனர்த்த சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கும் இச்சிறார்களின் கல்வியையும் எதிர்கால இலட்சியத்தையும் பாதுகாப்பதற்கு மலையக அரசியல் தலைமைகள் முன்வரவேண்டியது அவசியமாகும்.


போக்குவரத்து பிரச்சினை காரணமாக பல மாணவர்கள் ஆரம்ப நிலையிலேயே கல்வியை இடைநிறுத்தி வீட்டு வேலைகளில் ஈடுபடுவதையும், தேயிலைத் தோட்டங்களில் வேலைக்குச் சேர்ந்து விடுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.


கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் ஆகியோர் தமக்கான வைத்திய சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு கால்நடையாகவே நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.


ஆபத்தான நிலையில் இருக்கும் தொழிலாளர்களை தோட்ட வாகனங்களுக்காக காத்திருந்து அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கிடை யில் உயிரிழந்த சம்பவங்களும் தோட்டப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களை ட்ரக்டரில் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில் குழந்தைகளை பிரசவித்த தாய்மார்தான் எத்தனை பேர்.
இந்நிலை மாற வேண்டும். தேயிலை தோட்டத்திலேயே காலாகாலமாக பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வரும் தொழிலாளர் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.


மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் 1திர்காலத்தில் மலையக அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளினது நிலைமைகள் கேள்விக் குறியாகிவிடும்.


சந்ததி சந்ததியாக தேயிலைத் தோட்டத்திலேயே பிறந்து வளர்ந்து அங்கேயே சமாதியாகிப் போகின்ற மலையக மக்களினது போக்குவரத்துப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காண வேண்டியது எம் தலைவர்களினதும் கட்டாய கடமையாகும்.


தோட்டத்திற்கும் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் இடையிலான வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக பஸ் சேவைகள் நடத்தும்படி தொழிலாளர்கள் கோருகி ன்றனர். சாராயத் தவறணைகளை திறப்பதற்கு பதிலாக மக்கள் நலனுக்கான பணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் இந்த போக்குவரத்துத் துறையும் ஒன்று. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.


தோட்டப் பகுதி மக்களின் நலன் கருதி இ. தொ. கா. பஸ் சேவைகளை நடத்தப் போவதாக செய்திகள் வெளியாகின. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடத்தப்ப டும் இச்சேவையை ஒரு கட்டமைப்பின் கீழ் எதிர்காலத்தில் சிறந்த போக்குவரத்து சேவைகளை நடத்தக்கூடிய ஒரு ஸ்தாபனமாக அது இருக்க வேண்டும்.


போக்குவரத்து வசதிகள் இல்லாத தோட்டங்களில் இப் போக்குவரத்து சேவைகளை நடத்தக்கூடிய சக்தியும் பலமும் இ. தொ. காவிற்கே இருக்கிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதுபோல மக்களின் நலனில் அக்கறை கொண்டு இவ்வாறான பஸ் போக்குவரத்து சேவைகளை நடத்தும்படி தோட்ட மக்கள் வேண்டுகின்றனர். இவ்விடயத்தில் அரசியல், தொழிற்சங்க வேறுபாடுகள் எதனையும் பார்க்காமல் கூடிய விரைவில் பஸ் சேவைகளை நடத்த இ. தொ. கா. ஆவன செய்ய வேண்டும்.


டி. உமாதேவி

பேராதனைப் பல்கலைக்கழகம்