Monday, November 2, 2015

சம்பள உயர்வு கோரி போராட்டம்

இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாயை பெற்றத்தர வேண்டுமென கோரி,  ஹட்டன், எபோட்சிலி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தினர். இன்று 02-11-2015 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக கண்துடைப்பு வேலைகளை கைவிட்டு மலையக அரசியல்வாதிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். இன்று தொழிலாளர்கள் விழித்துக் கொண்டிருக்கின்றார்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றும் முயற்சியை கைவிரித்துவிட்டு தொழிலாளர்களின் உணர்வை மதித்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர்.
தொழிலாளர்களின் உணர்வை மதிக்காமல் தொழிற்சங்கவாதிகள், அரசியல்வாதிகள் இழுபறி நிலையில் ஒவ்வொரு சம்பள பேச்சுவார்த்யையும் முன்னெடுத்து செல்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற செயல்பட வேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ரூபாய் சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வை பெற்றுத்தராத பட்சத்தில் தொழிலாளர்களாகிய நாம் தொழிற்சங்கங்களுக்கு வழங்கி வரும் “சந்தாப் பணத்தையும் நிறுத்துவோம்” என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தீபாவளியை முன்னிட்டு 15000 ரூபாயை முற்பணமாக தரவேண்டும்.  தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இதுவரை 7 பேச்சுக்கள் நடைபெற்றுவிட்டன. வாக்களியுங்கள் 1000 ரூபாய் சம்பள உயர்வை பெற்று தருகின்றோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நம்பியே வாக்களித்தோம். ஆனால், இதுவரை சம்பள உயர்வு பெற்றுகொடுக்கப்படவில்லை.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்விடயத்தில் தலையிட்டு சம்பள உயர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம். சீரற்ற காலநிலையிலும் அட்டை கடியை பொருட்படுத்தாமல்  8 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை ஏமாற்றவேண்டாம் என தொழிலாளர்கள் இதன்போது கோஷமெழுப்பினர்.

 தீபாவளியை முன்னிட்டு சம்பளத்தை முன்கூட்டி வழங்கவும்  
எதிர்வரும் 10ஆம் திகதி தீபாவளி என்பதால் பாடசாலை மாணவர்களுக்கு 9ஆம் திகதி விடுமுறை வழங்குமாறும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை முன்கூட்டியே வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் இது குறித்து தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானுமுனிப்பிரிய மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய ஆகியோரின் கவனத்துக்குக் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
 
இதேவேளை, அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளத்தை முன்கூட்டி பெற்றுக்கொடுக்குமாறு, இரத்தினபுரி தமிழ் ஆசிரியர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.  
சித்திரைத் திருநாளையொட்டி அரசாங்க சேவையாளர்களுக்கு மாதாந்த சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படுவது போன்று, தமிழர்களின் முக்கிய திருநாளான தீபாவளி திருநாளை முன்னிட்டும் அரசாங்க சேவையாளர்களுக்கு முன்கூட்டி சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றார் கணபதி இராமச்சந்திரன்  




சம்பள உயர்வை பெற்றுகொடுக்க அரசியல் பலம் தேவையில்லை

பெருந்தோட்ட மக்களது சம்பள உயர்வை பெற்றுகொடுக்க அரசியல் பலம் தேவையில்லை.  தொழிற்சங்க பலமும் பேரம்பேசும் சக்தியுமே தேவை. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இதனையே கையாண்டு சாதனை படைத்தார் என  சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் 1970 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் எவ்வித அரசில் பலமோ அந்தஸ்தோ இன்றி பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களை நடத்தினார். இக்காலக் கட்டத்தில்தான் அவரது வெவண்டன் தோட்ட சொத்துக்களும்  உடைமைகளும் அரசுடைமை என்ற பெயரில் பறிக்கப்பட்டது. இருந்தபோதும்  துன்ப துயரங்களை  தனதாக்கிக் கொண்டு துணிவுடன் செயற்பட்டார். 1970முதல் 1977 வரையிலான காலங்களில் பெருந்தோட்ட மக்கள் பஞ்சம், பசி, பட்டினி, வறுமைகளுக்கு முகம்கொடுத்து சொல்லொன்னா கொடுமைகளை அனுபவித்த நேரத்திலும் முழு மலையகமும் ஸ்தம்பிதமாகும் வகையில்  பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினார்.
 
அனைத்து தொழிலாளர்களும் பங்கெடுத்த இப்போராட்டத்துக்கு  இலங்கையில் அனைத்து ஊடகங்களும்-சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம, ஆசிய பசுபிக் பிராந்திய அமைப்புகளும் கை கொடுக்க முன் வந்தன.
 
வெற்றி அல்லது வீர மரணம் என்ற தொனியை தனதாக்கிகொண்ட போஸ்டர்கள் முழு மலையகத்திழும் தலைநகர் கொழும்பிலும் ஒட்டப்பட்டன.அமைச்சர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அவர் நடத்திய பிரார்த்தனை, தொழிற்சங்க போராட்டமே பெருந்தோட்ட மக்களது பிராஜா உரிமைக்கும் சம்பள உயர்வு-சமசம்பளத்துக்கும்  வித்திட்டது.
 
தோட்டங்களை நடத்துவற்கு திரைசேரி ஊடாக பல கோடி ரூபாய்களை  சிலவழிக்க முடியாது என்பதால்தான் 22 தனியார் கம்பனிகளுக்கு தோட்டங்கள் கையளிக்கப்பட்டன.
 
தோட்டங்களை ஆதாயம் தரக்கூடிய வகையில் நிர்வகித்துக்கொள்ள தோட்ட கம்பணிகள் வழிசமைத்துக்கொள்ள வேண்டும் என்பற்காகவே இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகின்றன

கிளிநொச்சி பரந்தனில் மலையக மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

இலங்கையின் மலையகத்தில் மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட மலையக மக்களுக்கான வீடுகள், காணி உரிமைகள் மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வடக்கு மாகாணத்தின் பரந்தன் நகரில் எழுப்பப்பட்டிருக்கின்றது.
 
இலங்கை மெதடிஸ்த சபையின் பெருந்தோட்ட சமூக மேம்பாட்டுத் திருப்பணி என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மீரியபெத்தை மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஞாயிறன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
மீரியபெத்தையில் பாதிக்கப்பட்டு இன்னும் தற்காலிக முகாமில் வசிக்கின்ற மக்களுக்கு உடனடியாக நிரந்தர வீடுகள் வழங்கப்படுவதுடன் மலையக மக்களின் லயன்- குடியிருப்பு வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அந்தத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.
 
இந்த விடயங்களைச் செயற்படுத்துவதற்கு தோட்டக் கம்பனிகளுக்கு அரசாங்கம் நிபந்தனை யுடன் கூடிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மலையகத் தொழிற்சங்கங்கள் அந்த மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஒன்றிணைந்து இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் மற்றும் மலையக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக வடக்கு கிழக்கு பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்று இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டிருக்கின்றது.
 
மெதடிஸ்த சபையின் பெருந்தோட்ட சமூக மேம்பாட்டுத் திருப்பணி திட்டத்தின் இணைப்பாளரும்  பரந்தன் தேவாலயத்திற்குப் பொறுப்பானவருமான அருட்தந்தை செங்கன் தேவதாசனின் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் அவர் இந்த கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

வார்வீக் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் - மேலும் 30 குடும்பங்களை வெளியேற உத்தரவு

பதுளை மாவட்டம் வார்வீக் பெருந் தோட்டத்தில் தொடர்ந்தும் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறக்கம் ஏற்படும் அபாயம் எதிர்நோக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் 30 தொழிலாளர் குடும்பங்களை உடன் வெளியேறுமாறு பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஏ.எல்.எம். உதயகுமாரவும், வெளிமடை பிரதேச செயலாளரும் இணைந்து மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளனர்.
 
உடன் தோட்டத்தை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுமாறு உத்தரவிட்டால் எம்மால் எங்கு போக முடியும். பாதுகாப்பான இடங்களில் அரச அதிரகாரிகளே எங்களை குடியமர்த்த வேண்டும். அவர்கள் மறுப்பார்க்கள யானால் இத்தோட்டத்திலேயே செத்துமடிவோம். வேறு எங்கும் எங்களால் போக முடியாதென்று” அபாயத்தை எதிர்நோக்கியுள்ள மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.
 
வார்வீக் தமிழ் வித்தியாலயத்திலும் 19 குடும்பங்களைக் கொண்ட 98 பேர் தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு போதிய இடவசதிகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. தொடர்ந்தும் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறங்கல் ஏற்படும் அபாயம் எதிர்நோக்கப்படுவதால் மேலும் 80 குடும்பங்களைக் கொண்ட முன்னூற்று நாற்பது பேரை உடன் வெளியேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இம்மக்களை மாற்று இடங்களில் உடனடியாக குடியமர்த்தும் வகையிலான செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான விசேட பேச்சுவார்த்தைகள் இன்று 02.11.2015 இல் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.