Sunday, July 26, 2009

இன அடிப்படையில் எம்மவர்களின் ஆட்சி அதிகாரத்தில் 25 பிரதேசத்தில் இயங்க வேண்டும்.

இலங்கையில் பரவலாக வாழும் மக்களை அரச சேவைகள் இலகுவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மாகாணசபைகள், பிரதேச சபைகள் உருவாக்கம் பெற்றன. இந்த சபைகளின் சிறப்பான பணிகளின் பொருட்டு கடந்த வாரம் 13ம் திகதி முதல் 18ம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட மாகாண சபைகள் உள்ளுராட்சி வாரம் நுவரெலியா பிரதேச சபை ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் பல விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. கொட்டகலை ஸ்ரீP முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற இதற்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக சமூக அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் பெ.சந்திரசேகரன் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் அமைச்சர் பெ. சந்திரசேகரன் பேசுகையில் இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை பரவலாக்கும் நோக்கிலேயே மாகாண சபைகள், பிரதேச சபைகள் உருவாக்கம் பெற்றன.
மலையக மக்களின் விகிதாசார அடிப்படையில் நோக்கும் போது குறைந்த பட்சம் 25 பிரதேச சபைகள் எம்மவர்களின் ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும். எனினும் தற்போது அம்பகமுவ பிரதேசசபை, நுவரெலியா பிரதேச சபை என்பனவே எம்மவர்களின் ஆட்சியின் கீழ் உள்ளன. எதிர்காலத்தில் இந்த நிலைமையினை மாற்றியமைக்கக் கூடிய வகையில் நாம் செயற்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவர உள்ளேன். நுவரெலியா பிரதேசசபையை பொறுத்தவரையில் குடாஓயா, கொட்டகலை, நானுஓயா, அம்பேவல என்று அதன் எல்லைகள் பரந்து இருந்த போதும் இப் பிரதேச சபைக்கு கிடைக்கின்ற வருமானம் மிகக் குறைவாகும். இருந்தபோதும் முன்னேற்றகரமான செயல் திட்டங்களை வகுத்து செயல்படும் பிரதேச சபை தலைவரின் பணிகள் பாராட்டத்தக்கது.