Thursday, October 30, 2008


நிதி நெருக்கடியால் தேயிலை தொழில் பாதிப்பு

உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக இலங்கையின் தேயிலைத் தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புக்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் ஒரு அங்கமாக, கடந்த வாரம் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான தேவைப்பாடும், விலையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. பாதிப்புகளுக்கு முகம்கொடுத்திருக்கும் இலங்கைத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை, குறிப்பாக நடுத்தர ரக தேயிலைகளை உற்பத்திசெய்யும் தோட்ட உரிமையாளர்களை உற்பத்தியின் அளவினைக் குறைக்கும்படி இலங்கை தேயிலை வாரியம் கேட்டுக்கொண்டிருக்கிற போதும் உயர்ந்தர தேயிலையைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்யும்படி அது வலியுறுத்தியிருக்கிறது.
இதுகுறித்து கருத்துவெளியிட்டுள்ள இலங்கை தேயிலை வாரியத்தின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி இது ஒரு தற்காலிக பின்னடைவு என்றும், இந்தக் காலப்பகுதியில் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், முகாமையாளர்கள் தமது தோட்டங்களில் கப்பாத்து செய்தல், புதிய மரக்கன்றுகளை நாட்டுதல் போன்ற தோட்ட அபிவிருத்திப்பணிகளில் ஈடுபடலாம் என ஆலோசனை தெரிவித்தார்

தோட்டத்திற்கான பஸ்சேவையை ஆரம்பிக்க கோரிக்கை

இரத்தினபுரி காவத்தை நகரிலிருந்து வில்லம்பிய மடலகம தோட்டத்திற்கான பஸ்சேவையை உடனடியாக ஆரம்பிக்குமாறு பெருந்தோட்ட மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். நீண்டகாலமாக காவத்தை நகரிலிருந்து இந்த தோட்டத்திற்கு ஐந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையிலீடுபட்டிருந்தபோதும் தற்போது எதுவும் சேவையில் இல்லை. இதனால், மடலகம, சமரகந்த மியனவிற்ற, தெல்வலை, கோம்பகந்த நடுக்கணக்கு ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். இந்த பஸ்சேவை இல்லாத காரணத்தினால் தோட்ட மாணவர்கள் நகரங்களில் மாதம் 4500 ரூபா வாடகை கொடுத்து தங்கி கல்விகற்கின்றனர். பொருளாதார வசதியுள்ளவர்கள் மட்டுமே இவ்வாறு வாடகை செலுத்தி கல்வி கற்கின்றனர். மற்றவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளனர். தோட்ட பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் மாதம் 3000 ரூபா கொடுத்து தனியார் வாடகை வாகனத்தில் தினந்தோறும் பயணம் செய்கின்றனர். இதனால், இவர்களின் சம்பளத்தின் பெரும் பகுதி வாகன வாடகைக்காக செலவு செய்யப்படுகின்றது.

தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படவில்லை

அரசாங்க ஊழியர்களுக்கும் தனியார் துறையினருக்கும் பெருநாள் முற்பணம் மேலதிக கொடுப்பனவுகள் தாராளமாக வழங்கப்படுகின்ற போதிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரம் முற்பணம் சம்பள அதிகரிப்புகள் வழங்கப்படுவதற்கு கம்பனிகள் மறுப்புத் தெரிவித்தாக ரி.வி சென்னன் பசறையில் தங்கர் பொட்லிங் கம்பனி தொடர்பாக தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதற்கு கூட கம்பனிகள் மறுப்புத் தெரிவித்து பின்னரே குறைந்த தொகை கொடுப்பதற்கு இணங்கியுள்ளன. அதேபோல் சம்பள விடயத்திலும் தொழிலாளர்கள் போராட்டம் செய்தே குறைந்தளவு சம்பள அதிகரிப்பை பெற வேண்டியுள்ளது. நமுணுகுல தங்கர் பொட்லிங் கம்பனியின் கீழ் இயங்கிவரும் ஆறு தோட்டங்களில் மூன்று தோட்டங்களுக்கு தைப்பொங்கலுக்கும் மூன்று தோட்டங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கும் முற்பணம் வழங்குவது வழக்கம். ஆனால், கணவரல்ல, கோணக்கலை, கந்தசேனை ஆகிய தோட்டங்களில் பணிபுரியும் 3,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதற்கு பணம் இல்லாமல் கம்பனி நிர்வாகம் தடுமாற்றமடைந்து குழப்பத்தில் இருந்தது.
கடந்த வருடம் ஆறு தோட்டங்களில் பணிபுரியும் 6,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் 85 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படவில்லை. அதைவிட தொழிலாளர்களின் மாதாந்தம் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் கொடுப்பனவுகள் வங்கி மரணதார சங்கம் என்பவற்றுக்கு வருடக் கணக்காக அனுப்பி வைக்கப்படவில்லை. தொழிலாளர்களினது சம்பளத்திலிருந்து மாத்திரம் மாதாந்தம் கொடுப்பனவுகள் கழிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை.

தமிழ் கிராம சேவகர்களை நியமிக்க கோரிக்கை
மாத்தளை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் கிராமப்புறங்களுக்கு சிங்கள கிராமசேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ளது போன்று முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிராமப்புறங்களுக்கு முஸ்லிம் கிராமசேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ளது போன்று தமிழ் மக்கள் செறிந்து வாழும் களுதாவளை கிராமத்திற்கு தமிழ்க் கிராம சேவகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய மாநகர சபை உறுப்பினருமான எம்.சிவஞானம் பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சர் கரு ஜெயசூரியவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக பதவி வகித்தபோது அவ்வப்போது பதவிக்கு வந்த அரசுகளிடம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு தமிழ்க் கிராமசேவகர்களும் தமிழ் பதிவாளர்களும் நியமிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியதையடுத்து நுவரெலியா, பதுளை ஆகிய இரு மாவட்டங்களுக்கு மட்டும் தமிழ் கிராம சேவகர்களும் தமிழ் பதிவாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை, அதிகார பரவலாக்கல் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.