Monday, April 6, 2009

சி.டபிள்யூ.சி பஸ் வருகிறது நடந்து போகத் தேவையில்லை


“சி.டபிள்யூ.சி காரங்க ‘கமுக்கமா’ இருந்துட்டு என்னமா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்காங்க” என்று மலையகத்தில் பேச ஆரம்பித்து விட்டார்கள். “ப்ஷா நல்ல வேலை” என்று ஏனைய பகுதிகளில் பேசுகிறார்கள். உண்மையில் நம்புவதற்குச் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். என்றாலும் தண்ணீருக்குள் நெருப்பு கொண்டு செல்ல முடியும் என்பதை நடைமுறைச் சாத்தியமாக்கியிருக்கிறது சி.டபிள்யூ.சி என்கிற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போக்குவரத்துச் சேவை என்ற புதிய அத்தியாயத்தில் கால் பதிக்கிறது காங்கிரஸ்.
வெள்ளைக்கார துரைமார்களின் வாகனங்கள் ஓடுவதற்காகவென்று மட்டும் நிர்மாணிக்கப்பட்ட பல தோட்டப்புற பாதைகளில் இனி தொழிலாளர்களின் போக்குவரத்துக்காக பஸ் ஓடும். இதற்கான ஒரு புரட்சிகர நடவடிக்கையைத்தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். மேற்கொண்டிருக்கிறது. தனியாக ஒரு பஸ் போக்குவரத்து கம்பனியை ‘அன்னை கோதை தொழில் முயற்சியாண்மை நிறுவனம்’ என்ற பெயரில் ஸ்தாபித்திருக்கிறது. இதற்கு இந்திய அரசு 50 பஸ் வண்டிகளை இலவசமாக வழங்கியிருக்கிறது.
இதில் முதற் கட்டமாக இருபது பஸ் வண்டிகள், கொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்திலிருந்து தம் மலையகப் பெருந்தோட்டச் சேவையை ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையில் 2009 எப்ரல் இரண்டாந் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸினதும் மலையகத் தொழிற்சங்க வரலாற்றிலும் ஒரு மறக்க முடியாத நாள். தொழிலாளர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் எழுதப்பட்ட நாள் இது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரமின்றி எல்லா தொழிற்சங்கங்களும் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. அவர்களை என்றுமே வசதியற்ற வளமற்ற சமூகமாக வைத்திருக்கவே அவை விரும்புகின்றன என்று பல குற்றச்சாட்டுகள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இ. தொ. காவைப் பொறுத்த வரை எதுவுமே செய்யவில்லை என்பதற்கும், இனிச் செய்ய விருப்பதற்கும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து இந்தப் பணியை ஆற்றியிருக்கிறது என்றால் மிகையில்லை.
இந்த பஸ் சேவையால் உண்மையில் நன்மையடையச் போகிறவர்கள் தோட்டப்புற மாணவர்கள்தான். ஏனெனில் இது முற்றிலும் அந்த மாணவர்களின் போக்குவரத்துச் சிரமங்களை நிவர்த்திப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது என்கிறார்கள் காங்கிரஸார். மயைலகத் தோட்ட உருவாகத்திற்கு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு இருந்த போதிலும், இன்னமும் பஸ் போக்குவரத்தைக் கண்டிராத பல தோட்டங்கள் உள்ளன. நகரத்தில் இருந்து ஐந்நூறு மைல் தொலைவில் இருக்கும் தோட்டப் பாதைகள் மிகவும் குறுகியதாகவும், முறையாகப் பராமரிக்கப்படாமலும் காணப்படுவதால், இங்கு பஸ் போக்குவரத்து நடத்துவதைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை. இந்நிலையில் பாடசாலை மாணவர்கள் தோட்டப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புடன் கல்வியை நிறுத்திக் கொள்ளும் நிலை காணப்படுகிறது. சிரமத்திற்கு மத்தியிலும் நகரப் பாடசாலைகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் படும் வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. தோட்டங்களில் தற்போது தொழிலாளர்களின் மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டிகளும் நிறையவே ஓடுகின்றன. கல்வி கற்ற இளைஞர்களின் தொகை அதிகரிக்க அதிகரிக்க சொந்த வாகனங்களும் அதிகரிக்கச் செய்கின்றன. நுவரெலியா, மஸ்கெலியா, பொகவந்தலாவ, ஹப்புத்தளை உள்ளிட்ட தோட்டங்களில் வீடுகளில் வான்கள், பஸ் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக்கூட காணலாம். ஆனால், நடந்து மட்டுமே செல்வதற்கு வசதியுள்ள தொழிலாளர்களும் அவர்களின் பிள்ளைகளும், தோட்டங்களில் உருவாகிய ஆசிரியர்களும் இன்னமும் நடக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்தான் இருக்கிறார்கள். மாதத்திற்கு ஒரு தடவை அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக நகரத்திற்குச் செல்லும் தொழிலாளர்கள், தாம் வாங்கும் பொருள்களின் பெறுமதியைவிட பணம் கொடுத்து வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்திச் செல்வதற்காகக் கூறுகிறார்கள் நானுஓயா தோட்டங்களில்.
இவ்வாறான தோட்டங்களில் உள்ள தொழிலாள சமூகத்தின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் பேசுகிறார்கள். ஆனால், எல்லாம் சரி, அது ஏன் இந்திய அரசு பஸ் வண்டிகளை காங்கிரஸ்க்கு வழங்க வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு காங்கிரஸ் கேட்டதால் அதற்குக் கொடுத்திருக்கிறார்கள் என்று எளிதில் பதில் அளித்துவிடலாம். மக்களின் நலனுக்காக அவர்களுடன் பேச்சு நடத்தினோம். இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்று பத்திரிகைகளில் படம் வரப்பண்ணும் அரசியல்வாதிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இதில் மலையகத் தொழிற்சங்க அரசியலும் விதிவிலக்காக இருக்கவில்லை. என்றாலும் அண்மையில் கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான தூதுக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் காத்திரமான விடயம் கலந்தாலோசிக்கப்பட்டு நடந்தேறியிருக்கிறது. அதன் விளைவாகத்தான் இந்திய அரசு 50 சிற்றி ரைடர் பஸ் வண்டிகளை வழங்கியிருக்கிறது. பஸ் வண்டிகள் கடந்த இரண்டாந் திகதிதான் காங்கிரஸால் பொறுப்பேற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதுவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பஸ் வண்டிகளைப் பொறுப்பேற்று பதிவும் செய்து, காங்கிரஸ் நிறமும், கம்பனி பெயரும் பொறிக்கப்பட்டு பஸ் வண்டிகள் கலகலப்பாய் பூஜைக்கு வந்திருந்தன.
அதுபோல்தான் இந்த பஸ் வண்டிகளுக்கான சாரதிகள், நடத்துநர்களும் தோட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிய நீண்டநாள் உறுப்பினர்களின் குடும்பத்தில் இருந்து அதற்குப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் தலைவர் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம். கோதை பஸ் கம்பனியைப் பற்றிக் கேட்டதும், உடப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய அறங்காவலர் சபைதான் நினைவுக்கு வந்தது. கிராமத்து மக்களின் நலன்கருதி ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பென்னம்பெரிய இரண்டு பஸ் வண்டிகளை சேவை யில் விட்டிருக்கிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் பஸ் போக்குவரத்தைத் தாமதமாகவேனும் நடத்துவது அதன் அங்கத்துவர்களுக்கு மாத்திரம ன்றி முழுத் தொழிலாளர் சமூகத்திற்கும் மகிழ்ச்சி தான். இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு சாதாரண கட்டணமொன்றைச் செலுத்தி நிம்மதி யாகக் கல்வி கற்கச் செல்ல முடியும். அது சரி, இந்தப் பணியை காங்கிரஸ் எவ்வாறு நல்ல முறையில் கொண்டு நடத்தப் போகிறது, சிக்கல்களையும் சவால்களையும் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற கேள்விக்கு இடம் வைக்காமல் சேவையைத்தொடர வேண்டும். சபாஷ் சி.டபிள்யூ.சி. இறுதியாக ஒன்று, பஸ் சேவைக்கு பூஜை வைக்கும் வரை அது பற்றி எந்த ஊடகங்களிலும் பெரிதாகப் பிரசாரம். இது ஒரு வகையில் சிறப்புதான். ஆனால் விடயம் கைகூடியதும் அதனை திறம்படி செயற்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை காங்கிரஸார் மறுக்க மாட்டார்கள். பஸ் சேவை ஆரம்ப நிகழ்வுக்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் பலர் காங்கிரஸ் ‘பிரஸ் ஒபிசர்’மார்களின் செயற்பாடுகளில், திருப்தி காணவில்லை. இது இப்பொழுது மட்டுமல்ல இ. தொ. கா.வின் எந்த விடயத்திற்குச் சென்றாலும் ஊடகவியலாளர்கள் ஏதாவது ஒரு குறையைத்தான் சொல்கிறார்கள். இதற்குக் காரணம் இ. தொ. கா.வின் தலைவர்கள் அல்ல, பிரஸ் ஒபீசர் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், குற்றச்சாட்டு அவர்களுக்கு வராது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே, காங்கிரஸின் ஊடகப் பிரிவை சற்று உயிரூட்ட வேண்டும் என்பதையும் இந்த நல்ல சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துவது பொருந்தும்.

பி.வீரசிங்கம்


தினகரன்
இருந்த பிரதிநிதித்துவங்களையும் இழந்து விட்ட களுத்துறை தமிழர்கள்

மேல் மாகாணத்தில் பெருந்தோட்டங்களைக் கொண்ட மாவட்டமாகக் களுத்துறை மாவட்டம் உள்ளது. தேயிலை, இறப்பர் தோட்டங்களைக் கொண்ட இம்மாவட்டம் அகலவத்தை, பண்டாரகமை, பேருவளை, புளத்சிங்கள, தொடங்கொடை, ஹொரண, இங்கிரிய, களுத்துறை, மதுராவளை, மத்துகம, மில்லனிய, பாலிந்தநுவர, பாணந்துறை, வலல்லாவிட்ட, ஆகிய பதினான்கு பிரதேச செயலகப் பிரிவுகளுள்ளன. இவை அனைத்திலும் சிங்கள மக்களே பெரும்பான்மையினராகவுள்ளனர்.

இவற்றுள் அகலவத்தை,புளத்சிங்கள, தொடங்கொடை, ஹொரண, இங்கிரிய, மதுராவளை, மத்துகம, மில்லனிய, பாலிந்தநுவர, வலல்லாவிட்ட ஆகிய பத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தமிழர்கள் இரண்டாமிடத்திலும் பண்டாரகம, பேருவளை, களுத்துறை, பாணந்துறை ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் முஸ்லிம்கள் இரண்டாவது இடத்திலுமுள்ளனர் என்பதை 2001 ஆம் ஆண்டின் குடிசனத் தொகை மதிப்பீடு காட்டுகின்றது.
இம்மாவட்டத்தின் 2001 ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்த சனத்தொகை 1,060,800 ஆக இருந்துள்ளதுடன் சிங்களவர்கள் 923,893 பேராகவும் (87.1) தமிழர்கள் 42, 296 பேராகவும் (4%) ஆகவும், முஸ்லிம்கள் 8.8%ஆகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை நகரம் இம்மாவட்டத்தின் தலைநகராகவுள்ளதுடன் இங்கு கதிர்வேலாயுத சுவாமி கோயில் என்ற பிரசித்தமான இந்துக் கோயில் உள்ளது. அதேபோன்று பாணந்துறை நகரில் கந்தசுவாமி கோயிலும் முக்கியமானது. தற்போது இக்கோயில் நிர்வாகம் இந்து சமய விவகாரத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ளது. குளோடன் முத்து மீனாட்சியம்மன் கோயில் இங்கிரிய குறிஞ்சி மகாமாரியம்மன் கோயில், றைகம மாரியம்மன் கோயில், எலதுவ ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், சென்.ஜோர்ஜ் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில், டெல்கித் முத்துமாரியம்மன் கோயில் உட்பட பல இந்துக்கோயில்கள் இம்மாவட்டத்தில் பிரசித்தி பெற்றவைகளாகவுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் முப்பத்தெட்டு தமிழ்ப் பாடசாலைகளிருந்த போதிலும் எந்தவொரு பாடசாலையிலும் உயர்தர வகுப்புகளில் கணித, விஞ்ஞான பிரிவுகள் இல்லாமையும் மத்துகம சென்.மேரிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் கலை, வர்த்தகப்பிரிவுகளுள்ள அதேவேளை, உயர்தர வகுப்புள்ள டெல்கித், மில்லகந்த ஆகிய இரு தமிழ் மகாவித்தியாலயங்களிலும் கலைப்பிரிவுகள் மட்டுமே உள்ளன. குளோடன் நவோதய தமிழ் வித்தியாலயத்தில் தற்போது 111 வரையான வகுப்புகள் இயங்குகின்றன. இப்பாடசாலையை இம்மாவட்டத்தின் சகல வசதிகளும் கொண்ட கலை, வர்த்தக, கணித, விஞ்ஞான பிரிவுகளை உள்ளடக்கிய தரமான தமிழ்ப் பாடசாலையாக உருவாக்க கூடிய வசதிகளுள்ளன. இடவசதியும் அதிபர், ஆசிரியர் விடுதிகளும் கொண்ட இப்பாடசாலை மாணவர்களுக்கான விடுதி வசதிகள் கொண்ட இப்பாடசாலை மாணவர்களுக்கான விடுதிவசதிகள் கொண்ட பாடசாலையாக அமையக்கூடிய வசதிகள் செய முடியும். களுத்துறை மாவட்டத்தில் தரமான தமிழ்ப்பாடசாலையாக உருவாக்கக்கூடிய பொருத்தமான வசதிகள் இங்கு உள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த சி.ஜெயக்குமார் இப்பாடசாலையின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இப்பாடசாலையின் அதிபராக விருப்புடன் செயற்படும் இவ்வேளையில் அவரது ஆர்வமிக்க நோக்கத்தைப் பூர்த்தி செய முன்வர வேண்டியது பொறுப்புள்ளவர்களின் கடமையாகும். 1981 ஆம் ஆண்டில் 5.2 வீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டில் 4 வீதமாகக் குறைவடைந்துள்ளது. அதேபோன்று 1981 ஆம் ஆண்டில் 87.2 வீத சிங்களவர்களின் எண்ணிக்கை 87.1 வீதமாகவும் முஸ்லிம்களின் வீதம் 7.4 இலிருந்து 8.8 ஆகவும் மாற்றமடைந்துள்ளன.

இம்மாவட்டத்தில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினராகவுள்ள ஒரே உள்ளூராட்சி நிறுவனம் பேருவளை நகர சபை மட்டுமே. பேருவளை நகரசபை நகரசபையில் முஸ்லிம்கள் 76 வீதமாகவும் சிங்களவர்கள் 21.2 வீதமாகவும், தமிழர்கள் 2.1 வீதமாகவும் உள்ளனர். ஆனால், பேருவளை பிரதேச செயலகப் பிரிவில் 2ஃ3 பங்கினருக்கு அதிகமாக சிங்களவர்களேயுள்ளனர்.
தமிழர்களைப் பொறுத்தவரை பின்வரும் வீதத்தினராக ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள இங்கிரிய 9.5, புளத்சிங்கள 12.8, தொடங்கொடை 13, மத்துகம 9.5, மதுராவளை 10.3, பாலிந்தநுவர 9, மில்லனிய 3, வலல்லாவிட்ட 2.1, அகலவத்தை 2.7, ஹொரண 2.2, களுத்துறை 1.3 என்ற வீதத்தில் 2001 ஆம் ஆண்டு கணிப்பீட்டின் படி இருந்தமை உறுதிப்படுத்தப்படுகின்றது.

சுமார் இருபதாயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ள இம்மாவட்டத்தில் தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் முற்றுமுழுதாக இழக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் உள்ளூர் அரசியல் அமைப்புகளில் தமது பிரதிநிதித்துவங்களைப் பாதுகாத்துக் கொண்டுள்ள போதும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பறிகொடுத்துவிட்டனர்.
தமிழ்பேசும் முஸ்லிம் ஒருவர் பாராளுமன்றப் பிரதிநிதியாக இருந்த போது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் அரசியல் ரீதியான பிரதிநிதித்துவ சக்தி இருந்தது. முஸ்லிம்களிடம் ஏற்பட்ட பிளவும் தமிழ் வாக்காளரைப்பற்றி முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்திக்காமையும் இதற்கான காரணமாயமைந்துவிட்டது.

எவ்வாறாயினும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் அவர்கள் வாழும் சகல பிரதேச செயலகப் பிரிவுகளினும் நகரசபைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது. இழந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்களுடன் இணைந்து மீட்டெடுக்க முஸ்லிம் மக்கள் எதிர்காலத்தில் சிந்திப்பர் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த உள்ளூர் அதிகார சபைகளான பிரதேச, நகரசபைத் தேர்தலுக்கு முந்திய தேர்தலின் போது ஐந்து தமிழர்கள் பிரதேச சபைகளுக்குக் களுத்துறை மாவட்டத்திலிருந்து தெரிவு செயப்பட்டிருந்தனர். ஆனால், இறுதியாக நடைபெற்ற தேர்தலில் ஒரு தமிழர் கூட தெரிவாகவில்லை. தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் முற்றாக இழக்கப்பட்டுவிட்டது.

தமிழ் மக்களின் வாக்குகள் சிதறாது முழுமையாக வாக்களிக்கப்பட்டால் குறைந்தது பதினைந்து பேர் பிரதேச சபைகளில் உறுப்பினராக முடியும். இதை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள தமிழர்களின் எண்ணிக்கை தெளிவாகக் காட்டுகின்றது. களுத்துறை மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் பெருந்தோட்டப் பகுதிகளிலேயே பெரும்பான்மையாக வாழ்வதால் அவர்களிடம் தொழிற்சங்கம் நடத்தி சந்தா வசூலிப்பதிலேயே தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றனவே அன்றி அரசியல் ரீதியாக வழிகாட்டுவதாயில்லை.

மலையகத் தமிழ்த் தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் கட்சிகளாக மாறியபின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் பற்றியே கனவு காண்கின்றன. பிரதேச செயலகப் பிரிவுகளில் தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் தொடர்பில் சிந்திப்பதில்லை. இன்று அரசியல் அமைப்புகளாக மாறியுள்ள தொழிற்சங்கங்கள் சந்தா வசூலிப்பதைவிட தொழிற்சங்க ரீதியாகச் செயலிழந்துள்ளன என்பதே உண்மை நிலையாகும்.

களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். கல்வி, தொழில், இருப்பிட, சுகாதாரம் உட்பட பல சமூக தேவைகளும் சமூக பாதுகாப்பும் அற்ற நிலையில் பெரும்பாலான தமிழ்த் தோட்டத்தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் வெளிக்கொண்டு வரப்பட்டு அவற்றிற்கு பரிகாரம் காணப்பட வேண்டியதேவை உள்ளது. சில தோட்டங்களில் வாழும் மக்கள் எந்தவொரு அடிப்படைத் தேவைகளையும் அடைய முடியாத அவல நிலையில் உள்ளமையைச் சுட்டிக்காட்ட வேண்டும். தேர்தல் காலங்களில் வாக்குவேட்டையாட களமிறங்கும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிவதில் ஆர்வம் இல்லை. இதுவே யதார்த்தம். இதுவே உண்மை.

களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்த, இழந்த தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை மீட்டெடுக்க வழிவகை காணப்பட வேண்டும். தமிழர் வாக்குகளை பிரித்துக்காட்டிப் பலப்பரீட்சை நடத்தும் தமிழ் அரசியல் செயற்பாடுகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். அப்போது தான் விடிவு ஏற்படும்.

முற்றாக அரசியல் பிரதிநிதித்துவங்களைத் தமது திட்டமில்லா, தூரநோக்கில்லா சிந்தனைகளாலும் செயற்பாடுகளாலும் இழந்துவிட்ட களுத்துறை மாவட்ட தமிழ் மக்களுக்கு சரியான, தெளிவான வழிகாட்டல் இன்று தேவையாகவுள்ளது. அரசியல் ரீதியாக ஏற்படுத்திக்கொள்ளும் பலமே கல்வி, இருப்பிடம் உட்பட சகலவற்றிற்கும் ஆதாரமாகும். இதைப்புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது வாக்காளர்களின் பொறுப்பு.

இன்று சகல தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள அரசியல் அதிகாரம் தேவை. எனவே, களுத்துறை மாவட்ட தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் வாக்காளர்கள் தமது எதிர்கால நலன்களையும் இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
இருப்பையும் கணிப்பீட்டையும் எதிர்காலத்தில் நிலை நாட்ட களுத்துறைத் தமிழ் மக்கள் சிந்தித்து, தெளிவான முறையில் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

த.மனோகரன்

நன்றி- தினக்குரல்
மலையகத் தமிழரை அழிக்கும் முயற்சியில் குடும்பக் கட்டுப்பாடு

மாற்றம் என்ற சொல்லைத் தவிர அனைத்து விடயங்களும் மாறிக்கொண்டிருக்கும் சமகால உலகில் மலையக மக்களின் வாழ்க்கைத்தரம் மட்டும், நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் மாறாமல் காணப்படுகின்றது. ஏனைய சமூகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து கல்வி, சுகாதாரவசதிகள், வீட்டுவசதி, பொருளாதாரம், சொத்துரிமை, அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பல அம்சங்களில் இவர்கள் பின்தங்கியே வாழ்க்கையைக் கொண்டு நடத்துகின்றனர். இன்று உலகின் சனத்தொகையானது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு வளர்ச்சியடைந்து செல்கின்ற வேளையில், சனத்தொகை வளர்ச்சியில் கூட இவர்கள் பின்தங்கியே காணப்படுகின்றனர். ஒரு சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சி குறைவடைந்து செல்கின்றமைக்கு அச்சமூகத்தின் அதிகரித்து வரும் கல்விவளர்ச்சி ஒரு காரணமாய் அமைகின்றது. ஆனால், மலையகத்தின் சனத்தொகை வளர்ச்சி குறைவடைந்து செல்கின்றமைக்கு அவர்கள் கல்வி ரீதியாக வளர்ச்சியடையாமையே காரணமாகும். வருடாந்த புள்ளிவிபர அறிக்கை (Statistical Annual Report-2000), பெருந்தோட்டத்துறை சனத்தொகை வளர்ச்சியானது 5.6 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக குறைவடைந்திருப்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்குப் பிரதானமாக மலையகத்தில் காணப்படும் கட்டாயப்படுத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு (Family Planning) முறையே காரணமாகும்.

அதீத சனத்தொகை வளர்ச்சியானது ஒரு நாட்டிற்குப் பிரச்சினையாக அமையும்போது, அந்நாட்டில் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு அமுலுக்கு வருவதை நடைமுறையில் சில நாட்டுக்கொள்கைகள், சட்டங்கள் என்பன சித்திரிக்கின்றன. உதாரணமாக இந்தியாவில் "நாம் இருவர் நமக்கிருவர்' என்ற கொள்கை மக்கள் மத்தியில் பின்பற்றப்படுவதும், சீனாவில் ஒரு குழந்தை மாத்திரம் பெற்றுக்கொண்டால் அதற்கான சகல செலவினங்களையும் அரசு பொறுப்பேற்பதன் மூலம் அவர்களைக் குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ள ஊக்குவிப்பதனையும் காணலாம். இங்கு குறிப்பிடக் கூடிய அம்சம் யாதென்றால், இக்கொள்கைகள், சட்டங்கள் என்பன ஒரு இனக்குழுவை மாத்திரம் மையப்படுத்தாமல், எந்தவொரு இனக்குழுவிற்கும் பாதகத்தை ஏற்படுத்தாமல் இருக்கின்றது. ஆனால், இலங்கையில் மலையக மக்களைக் கட்டாயப்படுத்தி அவர்களின் விருப்பத்திற்கு அப்பால் குடும்பக் கட்டுப்பாட்டு முறையைத் திணிப்பது அவர்களுக்குக் காட்டும் பாரபட்சமாகாதா?
2008 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதமானது 0.943மூ என ?The World Factbook குறிப்பிடுகின்றது. இவ்வளர்ச்சி வீதமானது ஏனைய ஆசிய நாடுகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்ததாகும். அத்தோடு, இலங்கையின் இன முரண்பாட்டினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதனாலும், பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளமையினாலும் நாட்டின் சனத்தொகையின் அளவு குறைந்துள்ளதை பல்வேறு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்நிலையில் இலங்கையின் குடும்பக் கட்டுப்பாட்டு முறை அவசியமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அம்முறை மலையக சமூகத்திற்கு மட்டும் கட்டாயப்படுத்தப்படுவதை நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது. இங்கு இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர் நாடியாக இருக்கும் மக்களின் உயிர்கள் அழிக்கப்படுகின்றமையை அவதானிக்க வேண்டும்.

கூலிப்படைகளாக இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட இம்மக்களைத் தொடர்ந்தும் அந்நிலையிலேயே வைத்திருப்பதனை பெரும்பான்மை சமூகம் விரும்புகின்றது. இவர்கள், குறிப்பாக கல்வி ரீதியாக வளர்ச்சியடைவதனை விரும்பாத பெரும்பான்மை அரசியற் குழாம், ஒரு நிர்ப்பந்தத்தின் பேரிலேயே இவர்களுக்கான கல்வி வசதிகளை செய்து கொடுக்கின்றது. பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுவதைப் போல, மலையகத்தில் இரண்டாம் நிலைக்கல்வி (க.பொ.த. சாஃத) வரை கற்றவர்களே அதிகம். உயர்கல்வி பெறுபவர்களின் தொகை சமீபகாலமாக அதிகரித்த போதிலும், ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும்போது இத்தொகை மிகக் குறைவாகும். பெரும்பான்மையினர் இலங்கையின் பொருளாதாரத்திற்குத் தேவையான தொழிற்படையை மாத்திரமே மலையகத்திலிருந்து எதிர்பார்க்கின்றனர். தேயிலைத் தோட்டத்திலும் , தேயிலைத் தொழிற்சாலைகளிலும் தினக்கூலி (Daily Wage) பெறுபவர்களாக விளங்க வேண்டும் என்பது அவர்களின் அவா. சனத்தொகை ரீதியாக வளர்ச்சியடைந்துவிட்டால் அம்மக்களுக்கான சகல வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம் நேரிடும். அவ்வாறு வசதிகளைப் பெறும்போது ஒரு சமூக அசைவியக்கத்தின் (Social Mobility) மூலம் அவர்கள் வேறு தொழில்களை நோக்கி இடம்பெயர்ந்து விடுவர். எனவே தேயிலைத் தோட்டங்களில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதற்கான ஆளணி இல்லாமல் போய்விடும்.

இந்த அம்சத்தின் காரணமாகவே இன்று மலையகத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு முறை அத்தியாவசியமானதொன்றாகத் திணிக்கப்படுகின்றது. இவர்களிடம், “உனக்கு வருமானம் இல்லை” எவ்வாறு இத்தனை குழந்தைகளை வளர்க்கப்போகின்றாய், அநியாயமாக நோயிலும், பட்டினியிலும் சாகப்போகின்றனர்” என்று தோட்ட வைத்தியர் ( Estate Medical Officer), தாதி குறிப்பாக தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் ( Estate Welfare Officer) போன்றோர் “உளவள ஆலோசனை” (Counseling) மூலம் இவ் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால சந்ததியினரை இல்லாமல் செய்கின்றனர். “கொடியின் காய் கொடிக்குப் பாரமில்லை” என்பதுபோல தன் குழந்தைகளை தன்னால் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையை இல்லாமல் செய்து, நிறைய குழந்தைகள் பெறுவது கேவலம் என்ற நிலைக்கு அவர்களை மாற்றி விடுகின்றனர். அதேவேளை, கிராமப்புற சிங்கள மக்களும், முஸ்லிம் இனத்தவரும் மூன்றிற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதனையும் அல்லது தங்களுக்கு வேண்டியளவு குழந்தைகளைப் பெறுவதையும் நடைமுறையில் காணலாம். அவர்களுக்கென எந்தவொரு கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், மலையக மக்களின் குழந்தைப் பேறானது பெரும்பாலும் இரண்டு குழந்தைகளுடன் மட்டுப்படுத்தப்படுகின்றது. இதற்காக இவர்கள் ஒரு “டசின்” (12) அல்லது இரண்டு “டசின்” (24) குழந்தைகள் பெறவேண்டும் என்பது கருத்தல்ல. அதே சமயம் நான்கைந்து குழந்தைகள் பெறுவது சமூகத்திற்கு தீங்குமல்ல. இம்மக்களால் இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறவும், வளர்க்கவும் சக்தியிருக்கும்போது, அதைத் தடுப்பது ஒரு இன பாரபட்சமான செயல் என்றே கூற வேண்டும்.
இன்று தோட்டப்புறங்களில் இளைஞர், யுவதிகளுக்காக நடைபெற்றுவரும் பாலியல் உறவு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மலையக சனத்தொகையை கட்டுப்படுத்துவதனையே நோக்காகக் கொண்டுள்ளன. இது நேரடியாக கூறப்படாமல், “எயிட்ஸ்” (HIV) வராமல் தடுப்பதற்கான பாதுகாப்பான உடலுறவு முறையைப் பற்றியே என்று வெளியில் கூறினாலும், மறைமுகமாகக் குடும்பக் கட்டுப்பாட்டையே சுட்டி நிற்கின்றது. இங்கு குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் யாதென்றால்,”எயிட்ஸ்” நோயானது பெருந்தோட்டப்புறப் பகுதிகளில் பெருவாரியாக இனங்காணப்படாமையும், அந்நோய் பெரும்பாலும் நகரத்திலேயே பரவிக்கொண்டிருக்கும் வேளையில் நகர்ப்புறங்களிலேயே விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள், கருத்தரங்குகள் நடத்த வேண்டிய தேவை இருக்கின்றது. மாறாக பெருந்தோட்டங்களில் இவை நடத்தப்படுவதற்கான நியாயப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மலையகத்தைப் பொறுத்தவரை தற்போது குடிநீர், போஷாக்கு உணவு, சுத்தமான சூழல், பாடசாலை இடைவிலகல் போன்ற எத்தனையோ சமூகப்பிரச்சினைகள் இருக்குமிடத்து, அவற்றைப் பற்றி அக்கறை கொள்ளாமல் தனியே பாலியல் உறவில் மாத்திரமே கவனம் செலுத்துவதற்கான தேவை என்ன?

மலையக கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டிற்கு பிரசவத் தாய்மாரின் போஷாக்கின்மை பிரதான காரணங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால், இதனைத் தவிர்ப்பதற்கு போஷாக்கு உணவுத்திட்டங்கள், மக்களுக்கான சம்பள உயர்வு, குழந்தைப் பிறப்பு இடைவெளிக்காலத்தை கூட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்குதல் என்பவற்றை அரசு மேற்கொள்ளலாம். அதனைவிடுத்து தனியே நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாடு (LRT) முறையின் மூலமே அப்பிரச்சினையை நிவர்த்தி செய்யலாம் என்பது தவறான கருத்தாகும். இந்நிலைமை தொடருமாயின், எதிர்காலத்தில் இலங்கை வரலாற்றின் ஏடுகளைத் திருப்பிப் பார்க்குமிடத்து மலையகத் தமிழர் என்ற இனம் இல்லாமல் இருக்கும்.

எனவே மரத்தைப் பற்றி நிற்கும் கொடிபோல் அல்லாமல், ஒரு மரமாக தனித்து நிற்பதற்கு மலையக சமூகத்தின் சனத்தொகையானது வளர்ச்சியடைய வேண்டும். பேரினவாதத்தின் இந்த சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு மலையகத்தில் கல்வி கற்ற சமூகம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு, அம்மக்களை பலவீனமானவர்களாகக் காட்டும் வறுமையை ஒழிப்பதற்கும், அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையவும் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்படுதல் அவசியமாகும். இவர்கள் பலவீனமானவர்கள் அல்ல என்று பேரினவாதிகள் நினைப்பதற்கு இம்மக்கள் விரைவாக பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

-எல். கமலேஸ்வரி-
நன்றி- தினக்குரல்