Friday, May 31, 2013

25,000 ஏக்கர்பெருந்தோட்ட காணிகளை பகிர்ந்தளிக்க தீர்மானித்தமை தெரியாது- லலித் ஒபயசேகர



பயன்படுத்தாது இருக்கும் தேயிலை பெருந்தோட்ட 25,000 ஏக்கர் நிலப்பரப்பை வேலையற்ற 12,500 இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கான தீர்மானமொன்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, திறைச்சேரி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் பல மூத்த அதிகாரிகளுடனாள கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லலித் ஒபயசேகர தெரிவித்துள்ளார். 
இந்த வரடத்திற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவின் கீழ் பயன்படுத்தப்படாதுள்ள 25,000 ஏக்கர் பெருந்தோட்ட நிலப்பரப்பை சுவீகரித்து பயன்தரக்மூடிய நோக்கங்களுக்காக இளைஞர்களிடையே பகிர்ந்தளிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இளைஞர் ஒருமவருக்கு தலா இரண்டு ஏக்கர் காணியை வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் லலித் ஒபயசேகர தெரிவிக்கையில் அரசாங்கத்துடனான பெருந்தோட்டக் கம்பனிகள் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டடிருந்த போதிலும் காணி பகிர்ந்தளிக்கும் திட்டம் பற்றி குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது, பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்றிருந்த கூட்டங்களில் கம்பனிகள் சார்பில் கலந்து கொண்ட போதிலும் கூட இதுபற்றி கலந்துரையாடப்படவில்லை என்றார். 

குறித்த காணிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 100 மில்லியன் ரூபாவை கடனாக வழங்குவதற்கு திறைசேரி இணங்கியுள்ளதுடன் மேற்படி காணிகள் 30 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுமுள்ளன.
இந்த விடயம் குறித்து இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன் வைக்கப்பட்டபோது பெருந்தோட்டக் காணிகளை சுவீகரிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சிடமிருந்து தெளிவுபடுத்துகையைக் கோரியிருந்ததாகவும் ஒபயசேகர கூறினார்.
இது பற்றி பெருந்தோட்டக் கைத்தொழில் நிபுணரொருவர் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில்,

இத்தகைய நிகழ்ச்சித் திட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் அரசின் இந்த நடவடிக்கை உரிய பலனை அளிக்கப் போவதில்லை. பெருந்தோட்டக் கைத்தொழில் பற்றி அடிப்படை அறிவற்ற கட்சி ஆதரவாளர்களுக்கு இந்தக் காணிகள் வழங்கப்படவுள்ளதால் அவை உரிய பலனைத் தராதெனவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை தங்கள் பெருந்தோட்ட நிலங்களில் தேயிலைக் செடியை மீள நடுகைக்கான காணியைப் பெற்றுக்கொள்வதில் மிகப் பெரிய பிரச்சினையாக தொழிலாளர் பற்றாக்குறையே இருந்து வருவதாக பல்வேறு பெருந்தோட்டக் கம்பனிகள் முறையிட்டுள்ளன.