Friday, October 31, 2008

தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்காமை குறித்து அச்சம்

புசல்லாவ நகரத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யவும், வேறு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் நகரத்திற்கு வரும் அப்பாவி தொழிலாளர்கள் மீது நகரில் உள்ள இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு 29-10-2008 புசல்லாவையிலிருந்து பெரட்டாசி தோட்டத்துக்கு ஆட்டோவில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதேபோல் கொழும்பு போன்ற பகுதிகளில் வேலை செய்து வரும் பெரட்டாசி, மேமலை, காச்சாமலை போன்ற இளைஞர்கள் தீபாவளி தினத்தன்று தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டு திரும்புகையில் நகரில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பாதுகாப்பு கடமையில் உள்ள பொலிசார் தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான சம்பவங்கள் பற்றி உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுள்ளனர்.

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் நகர்புற இந்திய வம்சாவளியினரையும் உள்வாங்கவும்- பெற்றோர்கள், மாணவர்கள்

இந்திய வம்சாவளியினருக்காக நுவரெலியா மாவட்டம் பத்தனையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் மலையக நகர்புறங்களிலும், கிராமங்களிலும் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் புறக்கணிக்கப்படுவதாக பெற்றோர்களும், மாணவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே இம் மாணவர்களின் நன்மை கருதி பத்து சத வீத மாணவர்களையாவது உள்வாங்க வேண்டுமென பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

தமிழ் உதவி பணிப்பாளர் நியமிக்க வேண்டுகோள்

ஊவா மாகாண தோட்டப்பாடசாலைகள், நகர்புற பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, கல்வி பணிமனைகளில் நிலவும் தமிழ் மொழிப் பணிப்பாளர்களின் குறை மற்றும் இதர அபிவிருத்தி தொடர்பாக ஊவா மாகாண ஆளுனரிடம் கலந்துரையாடிய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி கல்வியமைச்சருமான எம். சச்சிதானந்தன் தமிழ் மொழி கல்வி காரியாலயங்களில் கடமையாற்றி வந்த பல உதவி பணிப்பாளர்கள் ஓய்வு பெற்று சென்றுள்ளதால் அந்த வெற்றிடத்துக்கு தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டியது அவசியமாகும். சிங்கள மொழி அதிகாரிகள் தமிழ் மொழி பாடசாலைகளுக்கு செல்லும் போது சிக்கல்கள் தோன்றும் வாய்ப்புள்ளது. எனவே உவா மாகாணத்திலுள்ள தமிழ் கல்வி பணிமனைகளில் கடமையாற்றவென தமிழ் மொழி உதவி பணி;ப்பாளர்களை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்

தொண்டர் ஆசிரியை சடலமாக மீட்பு

அக்குரஸ்ஸ வில்பிட்ட தோட்டத்தில் வசித்து வந்த பழனி விஸ்வநாதன் மகேஸ்வரி(28) தோட்டத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு இலவசமாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை திறம்பட கற்பித்து வந்தவர். இவ்வாறு கல்வி கற்பிக்க கடந்த 25-10-2008 சென்றவர் வீடு திரும்பாது காணாமல் போயிருந்தமையை இவரது தந்தை பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார். நேற்று முன்தினம் (29-10-2008) அதே தோட்டப் பகுதியிலுள்ள நீரோடையிலிருந்து இவர் அணிந்திருந்த ஆடையினால் கால்கள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இப் பெண் மரணிக்க முன்பதாக களங்கப்படுத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thursday, October 30, 2008


நிதி நெருக்கடியால் தேயிலை தொழில் பாதிப்பு

உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக இலங்கையின் தேயிலைத் தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புக்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் ஒரு அங்கமாக, கடந்த வாரம் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான தேவைப்பாடும், விலையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. பாதிப்புகளுக்கு முகம்கொடுத்திருக்கும் இலங்கைத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை, குறிப்பாக நடுத்தர ரக தேயிலைகளை உற்பத்திசெய்யும் தோட்ட உரிமையாளர்களை உற்பத்தியின் அளவினைக் குறைக்கும்படி இலங்கை தேயிலை வாரியம் கேட்டுக்கொண்டிருக்கிற போதும் உயர்ந்தர தேயிலையைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்யும்படி அது வலியுறுத்தியிருக்கிறது.
இதுகுறித்து கருத்துவெளியிட்டுள்ள இலங்கை தேயிலை வாரியத்தின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி இது ஒரு தற்காலிக பின்னடைவு என்றும், இந்தக் காலப்பகுதியில் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், முகாமையாளர்கள் தமது தோட்டங்களில் கப்பாத்து செய்தல், புதிய மரக்கன்றுகளை நாட்டுதல் போன்ற தோட்ட அபிவிருத்திப்பணிகளில் ஈடுபடலாம் என ஆலோசனை தெரிவித்தார்

தோட்டத்திற்கான பஸ்சேவையை ஆரம்பிக்க கோரிக்கை

இரத்தினபுரி காவத்தை நகரிலிருந்து வில்லம்பிய மடலகம தோட்டத்திற்கான பஸ்சேவையை உடனடியாக ஆரம்பிக்குமாறு பெருந்தோட்ட மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். நீண்டகாலமாக காவத்தை நகரிலிருந்து இந்த தோட்டத்திற்கு ஐந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையிலீடுபட்டிருந்தபோதும் தற்போது எதுவும் சேவையில் இல்லை. இதனால், மடலகம, சமரகந்த மியனவிற்ற, தெல்வலை, கோம்பகந்த நடுக்கணக்கு ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். இந்த பஸ்சேவை இல்லாத காரணத்தினால் தோட்ட மாணவர்கள் நகரங்களில் மாதம் 4500 ரூபா வாடகை கொடுத்து தங்கி கல்விகற்கின்றனர். பொருளாதார வசதியுள்ளவர்கள் மட்டுமே இவ்வாறு வாடகை செலுத்தி கல்வி கற்கின்றனர். மற்றவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளனர். தோட்ட பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் மாதம் 3000 ரூபா கொடுத்து தனியார் வாடகை வாகனத்தில் தினந்தோறும் பயணம் செய்கின்றனர். இதனால், இவர்களின் சம்பளத்தின் பெரும் பகுதி வாகன வாடகைக்காக செலவு செய்யப்படுகின்றது.

தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படவில்லை

அரசாங்க ஊழியர்களுக்கும் தனியார் துறையினருக்கும் பெருநாள் முற்பணம் மேலதிக கொடுப்பனவுகள் தாராளமாக வழங்கப்படுகின்ற போதிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரம் முற்பணம் சம்பள அதிகரிப்புகள் வழங்கப்படுவதற்கு கம்பனிகள் மறுப்புத் தெரிவித்தாக ரி.வி சென்னன் பசறையில் தங்கர் பொட்லிங் கம்பனி தொடர்பாக தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதற்கு கூட கம்பனிகள் மறுப்புத் தெரிவித்து பின்னரே குறைந்த தொகை கொடுப்பதற்கு இணங்கியுள்ளன. அதேபோல் சம்பள விடயத்திலும் தொழிலாளர்கள் போராட்டம் செய்தே குறைந்தளவு சம்பள அதிகரிப்பை பெற வேண்டியுள்ளது. நமுணுகுல தங்கர் பொட்லிங் கம்பனியின் கீழ் இயங்கிவரும் ஆறு தோட்டங்களில் மூன்று தோட்டங்களுக்கு தைப்பொங்கலுக்கும் மூன்று தோட்டங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கும் முற்பணம் வழங்குவது வழக்கம். ஆனால், கணவரல்ல, கோணக்கலை, கந்தசேனை ஆகிய தோட்டங்களில் பணிபுரியும் 3,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதற்கு பணம் இல்லாமல் கம்பனி நிர்வாகம் தடுமாற்றமடைந்து குழப்பத்தில் இருந்தது.
கடந்த வருடம் ஆறு தோட்டங்களில் பணிபுரியும் 6,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் 85 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படவில்லை. அதைவிட தொழிலாளர்களின் மாதாந்தம் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் கொடுப்பனவுகள் வங்கி மரணதார சங்கம் என்பவற்றுக்கு வருடக் கணக்காக அனுப்பி வைக்கப்படவில்லை. தொழிலாளர்களினது சம்பளத்திலிருந்து மாத்திரம் மாதாந்தம் கொடுப்பனவுகள் கழிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை.

தமிழ் கிராம சேவகர்களை நியமிக்க கோரிக்கை
மாத்தளை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் கிராமப்புறங்களுக்கு சிங்கள கிராமசேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ளது போன்று முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிராமப்புறங்களுக்கு முஸ்லிம் கிராமசேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ளது போன்று தமிழ் மக்கள் செறிந்து வாழும் களுதாவளை கிராமத்திற்கு தமிழ்க் கிராம சேவகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய மாநகர சபை உறுப்பினருமான எம்.சிவஞானம் பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சர் கரு ஜெயசூரியவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக பதவி வகித்தபோது அவ்வப்போது பதவிக்கு வந்த அரசுகளிடம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு தமிழ்க் கிராமசேவகர்களும் தமிழ் பதிவாளர்களும் நியமிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியதையடுத்து நுவரெலியா, பதுளை ஆகிய இரு மாவட்டங்களுக்கு மட்டும் தமிழ் கிராம சேவகர்களும் தமிழ் பதிவாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை, அதிகார பரவலாக்கல் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

Friday, October 24, 2008

தொழிலாளர்களின் சம்பள உயர்வில் அரசு உறுதியா இருக்கிறது – அத்தாவுட

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக தொழில் உறவுகள் மற்றும் மனிதவள அமைச்சர் அத்தாவுட செனிவிரத்ன அமைச்சில் அண்மையில் நடைபெற்ற இலங்கை சுதந்திர தோட்டத் ஊழியர் சங்கத்தினர் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். மேலம் தெரிவிக்கையில் இது தொடர்பாக சம்பள நிர்வாக சபைகளின் திட்டங்களுக்கு அமைய முதலாளிமார் சம்மேளத்தில் அங்கம் வகித்துள்ள சிலர் குறித்த திட்டத்தை நடமுறைப்படுத்துவதை தட்டிக்கழித்து வருவதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்றார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், அனைத்துப் பிரதேச செயலகங்களிலும், தமிழ்மொழி அறிந்த ஒரு அதிகாரி இருக்க வேண்டும், எனினும் சில பிரதேச செயலகங்களில் அவ்வாறான அதிகாரிகள் இல்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் தலையீடுகளை மேற்கொண்டு, பணிகளை செய்து முடிக்கும் பாரிய பொறுப்பு தோட்டத் தொழிற்சங்களுக்கு உள்ளது.

பாதையை சீரமைக்க கோரி பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள் ஊர்வலம்

மத்தியமாகாணம் பூண்டுலோயா மற்றும் டன்சினன் இடையே சுமார் 15 கி.மீ பாதை குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப் பாதையில் போக்குவரத்து செய்ய முடியாத நிலை இருப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை அப் பிரதேசத்தில் பூண்டுலோயா, நுவரெலியா உள்ளிட்ட நகர்புற பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் உரிய பஸ் வசதிகளின்றி அல்லல்படுகின்றனர். நடைபாதை வழியாகவே இவர்கள் நகர்புற பாடசாலைகளை சென்றடைய வேண்டியுள்ளது. இதனை தொடர்ந்து பல மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கையை இடையிலே நிறுத்தியும் உள்ளனர். எனவே இப் பாதையை சீரமைத்து தருமாரும் இல்லாவிடில் எதிர்காலத்தில் தொடர்ச்சியான வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்பவற்றில் ஈடுபட போவதாக தெரிவித்து நேற்று பாதையை சீரமைக்க கோரி இப் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் ஊர்வலமாக சென்று தங்கள் எதிர்ப்பு நடவடிக்கைளை வெளிக்காட்டினர்.

Wednesday, October 22, 2008

தேயிலை, இறப்பர் ஏற்றுமதியில் கூடிய வருமானம்

சர்வதேச சந்தையில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை மற்றும் இயற்கை இறப்பர் ஆகியவற்றுக்கு பெருமளவு கிராக்கி நிலவிவருவதால் விவசாய உற்பத்திப் பொருட்கள் எற்றுமதி 32 வீதம் அதிகரித்துள்ளதாக விவசாய ஏற்றுமதி தொடர்பான ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ தேயிலையின் ஆகக்கூடுதலான விலை 4.26 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு கிலோ இயற்கை இறப்பரின் விலை 3.02 டொலர்களாகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்த 29 வீதத்திலிருந்து 31 வீதமாக அதிகரித்துள்ளது.

குறைவான வேலை நாட்களால் தொழிலாளர்கள் துன்பம் - நட்டஈடு வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை

இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு குறைந்தளவு வேலைநாட்கள் வழங்கப்படுவதால் அம் மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர். கம்பனி தோட்டங்கள் வாரத்தில் இரு நாட்களே தொழிலாளர்களுக்கு வேலை வழங்குகின்றன. சில தனியார் தோட்ட உரிமையாளர்கள் தமது உற்பத்தியை முற்றாக கைவிட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் வேலைக்கு அழைக்கப்படுவதில்லை. கொள்முதல் செய்யப்படுகின்ற பச்சை கொழுந்து ஒரு கிலோ 59 ரூபாவிலிருந்து 25 ரூபாவிற்கு குறைவான விலையில் கொள்முதல் செய்யப்படுகின்றது. ஒரு கிலோ 300 ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட இறப்பர் சீட்டுக்கள் தற்போது 100 ரூபாவிற்கு குறைவாக கொள்முதல் செய்யப்படுகின்றன. ஒட்டுப்பால் முன்னர் 180 ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டது தற்போது 30 ரூபா – 40 ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்படுகின்றது. இவ் விலை குறைப்பு நடவடிக்கையால் தொழிலாளர்களுக்கு முறையாக வேலை வழங்கப்படவில்லை. எனவே நிலைமையை கருத்திற் கொண்டு தேயிலை, இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Saturday, October 18, 2008

தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

ஜனவசம, பெருந்தோட்டத்துறை போன்ற அரச தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய கொடுப்பனவுகள் கிட்டாமை குறித்து நீதிமன்றம் சென்று சட்ட நடவடிக்கை மேற்கொள்ள போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், சமூக துறை, இளைஞர் வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் சம்பள பிரச்சினை மக்களின் பிரச்சினையை தீர்ப்பதாக அமைய வேண்டும்

தொழில் அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன அறிவித்துள்ள, தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, நிபந்தனைகளுக்கு உட்படாத, இம்மக்களின் பிரச்சினைகளை முற்றாகத் தீர்க்கின்ற வகையில் அமையவேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணி தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க உள்ளதாக தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை மகிழ்ச்சியான விடயம். இம் முயற்சி கூட்டு ஒப்பந்தத்தின் சிக்கலான சரத்துக்களைப் போல நிபந்தனைகளுடன் அமைந்துவிடாமல் இருப்பதனை தொழில் அமைச்சர் உறுதி செய்தால் அப்பாவி தொழிலாளர்கள் முழுதாக பயனடைவார்கள். கூட்டு ஒப்பந்தம் என்ற மரணப்பொறி எமது எல்லா முயற்சிகளையுமே பயனற்றதாக்கிவிட்டது. தமது தினக்கூலியையும் இழந்த தொழிலாளர்கள் என்ன தான் ஒற்றுமையாக போராடினாலும் கூட இந்த கூட்டு ஒப்பந்தம் என்ற அகழியை தாண்ட அவர்களால் முடியாமலேயே போய் விடுகிறது. எனவே இம்முறையாவது தொழில் அமைச்சரின் நேரடித் தலையீட்டால் வாழ்க்கை செலவு புள்ளியோடு அமைந்த சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை வீண் போகக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, October 17, 2008

தமிழ் சாகித்திய விழாவில் கௌரவிக்கப்படுவோர்

மத்திய மாகாண தமிழ்க் கல்வி இந்து கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் 18, 19 ஆம் திகதிகளில் நுவரெலியாவில் இடம்பெறவுள்ள மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் பின்வருவோர் கௌரவிக்கப்படவுள்ளோர்

ஆன்மீகத்துறை ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஐயர், சிவசங்கர குருக்கள், கனகசபை இராஜபுவனேஸ்வரன், ரகுநாதன் ராஜேந்திரன்.
கல்வித்துறை முத்து கருப்பன் சோமசுந்தரம், செல்லையா ஜெயக்குமார், திருமதி சீவரட்ணம்.
சமூக சேவைத்துறை சிதம்பரம் பெருமாள் ரெட்டியார், எம்.எம்.சத்தியானந்தன், பழனியாண்டி மோகன் சுப்பிரமணியம், அ. .பாஸ்கரன்.
கலைத்துறை சந்தனம் பிரான்ஸிஸ் வசந்தன், எஸ்.செல்லத்துரை, எஸ்.ஆறுமுகராஜா, பிரதிஷ்குமார், எம்.எஸ்.ஸ்ரீதயாளன்.
ஊடகத்துறை அருணாசலம்பிள்ளை பொன்னம்பலம், சிவலிங்கம் சிவகுமார், சுப்பிரமணியம் ஜெப்ரி. ஜெயதர்ஷன், பெரியசாமி இராஜேந்திரன், இரா செல்வராஜா, தேவராஜன் வசந்தகுமார்.
விளையாட்டுத்துறை கருப்பையா திருநாவுக்கரசு, கே.ரெங்கநாதன்.
தொழிற்சங்கத்துறை நல்லன் இராமசாமி, இராமகிருஷ்ணன்.
அரச நிர்வாகத்துறை ச.ஜேசுதாசன்
இவர்களுடன் நுவரெலியா கோட்லோஜ் தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபர் வீ. பாலேந்திரா, கந்தப்பளை மெதடிஸ் கல்லூரி அதிபர் மகேஸ்வரன்,
கொழும்பிலிருந்து பொகவந்தலாவை வரை நடந்து சாதனை படைத்த தயாளன் (பொகவந்தலாவை சென். மேரிஸ் தமிழ் மகா வித்தியாலய மாணவன், பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்ப் பிரிவு)
மத்திய மாகாண விளையாட்டுப் போட்டியில் மரதன் ஓட்டப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற மாணவி அல்பியன் தமிழ் வித்தியாலய மாணவி லக்னபிரியா (அக்கரப்பத்தனை அல்பியன் தோட்டம்)

Wednesday, October 8, 2008

சபை நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் நடைமுறைபடுத்தவும் - எஸ். இராதாகிருஷ்ணன்

மத்திய மாகாண சபை அதன் அனைத்து கடிதப் போக்குவரத்துக்கள் உட்பட பல்வேறுபட்ட அறிக்கைகளையும் வெளியீடுகளையும் அரச கரும மொழியான தமிழில் நடைமுறைப்படுத்தா விட்டால் இச் சபையின் தமிழ், முஸ்லீம் உறுப்பினர்கள் அடுத்த சபைக் கூட்டத்தை பகிஷ்கரித்து போராட்டம் நடத்துவார்கள் என மத்திய மாகாணசபை இ.தொ.கா உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ். இராதாகிருஷ்ணன் கண்டி பல்லேகல – கம்உதாவ மத்திய மாகாணசபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்த மாகாணசபை ஆரம்பித்து 19 வருடங்கள் ஆகின்றபோதும் இன்றும் தமிழ் மொழிக்குரிய உரிமைகளும், அந்தஸ்தும் வழங்கப்படவில்லை. நமது மாகாண சபையிலும், ஏனைய அரச அலுவலகங்களிலும் அனைத்து கருமங்களும் சிங்க மொழியிலேயே நடைபெறுகின்றன. சபையின் தலைவர் டபிள்யூ. எம். யுசமான தங்களது தாய் மொழியில் கடிதங்களையும், அறிக்கைகளையும் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. அது அவர்களது உரிமை என தெரிவித்திருக்கிறார். இதேவேளை சபைத் தலைவரின் தனிச் சிங்களத்திலான காப்புறுதி தொடர்பான அறிக்கை உறுப்பினர்களின் கையெழுத்திற்காக சபை சேவகரால் இராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தபோது சிங்களத்தில் உள்ளதால் அதில் தான் கையெழுத்திட முடியாது என்று மறுப்பினை தெரிவித்தார்.

குளவிகள் கொட்டியதில் பெண் தொழிலாளி மரணம்

இரத்தினபுரி காவத்தை ஓபாத்த இல-02 தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளியான வெள்ளையம்மா(53) தனியார் தேயிலை தோட்டமொன்றுக்கு தொழிலுக்கு சென்ற வேளை அங்கு குளவிக்கூடு ஒன்று உடைந்ததில் அதிலிருந்த பெருமளவிலான குளவிகள் கொட்டியதால் அப் பெண் தொழிலாளி ஸ்தலத்திலேயே மரணமானதாக காவத்தை பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் (07-10-2008) பிற்பகல் 1.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சுமார் 500க்கு மேற்பட்ட குளவிகள் கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலையக கல்வி அபிவிருத்தியில் அமரர் தொண்டமான்பெருந்தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கவும், சுவீடன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யவும், அதன் மூலம் கல்வி அபிவிருத்தி ஏற்படவும் காரணமாக இருந்த அமரர் எஸ். தொண்டமான் சேவை நினைவு கூரப்படும் என தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் எஸ். ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். மேலும் 1988ம் ஆண்டு மாகாணசபை நிர்வாக முறை அமுல்படுத்தப்பட்டபோது மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சை கேட்டுப் பெற்றார். அதன் பயனாக எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சராக பதவி வகிக்க முடிகிறது.

இந்திய வம்சாவளியினர் “இலங்கை தமிழர்கள்” என்ற வகையிலான சட்டமூலம்

இந்திய வம்சாவளியினர் என்ற மலையக மக்களின் நாமத்தை நீக்கி அவர்களை இலங்கை தமிழர்கள் என்று அழைக்கும் வகையிலான ஒரு சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவேன் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார். எதிர்காலத்தில் உள்ளுராட்சி தேர்தல் யாவும் தொகுதிவாரியாக நடத்தப்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மலையக மக்களும் முஸ்லீம் மக்களை போன்று பெரும்பான்மை கட்சிகளில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி கொள்ள முடியும். தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை, சம்பள பிரச்சினை தொழிற் பிரச்சினை போன்றவற்றுக்கு தொகுதி எம்.பி க்கள் மூலம் ஜனாதிபதி வரை எடுத்துச் சென்று தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
இனப்பிரச்சினையில் தமிழக கட்சிகளின் நிலைப்பாடு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். – சந்திரசேகரன் பா.உ

1983ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டபோது அனைத்து தமிழக கட்சிகளும், மக்களும் திரண்டெழுந்த வரலாற்று சம்பவத்துக்கு பின்பு தமிழகத்தில் ஆளும், எதிர்கட்சிகள் இலங்கை சிறுபான்மை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முனைந்திருக்கின்றமை இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என சமூக அபிவிருத்தி அமைச்சர் பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம் திரண்டெழுந்தால் இந்திய டில்லி அரசு தலைகுனிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதுவே இலங்கை தமிழ் மக்களுக்கு தலை நிமிர்வை உருவாக்கும். இலங்கை வாழ் வடக்கு கிழக்கு தமிழர்களாக இருந்தாலும், மலையக தமிழ் மக்களாக இருந்தாலும் எவரும் சிங்கள மக்களை அடிமைப்படுத்த நினைத்தவர்கள் அல்ல. சிங்கள தலைமைகளோடு கைகோர்த்த கடந்த வரலாறே இது வரையிலும் பதியப்பட்டுள்ளது. தமிழர்களின் உயர்வுக்கு தேசிய தலைவர்கள் எப்போது தடைபோட ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே முறுகல் நிலையும் போராட்டமும் தோன்ற ஆரம்பித்து விட்டன. இலங்கை பிரச்சினையில் மௌனம் காத்த தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தற்போது உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க கூடிய அளவில் சில முடிவுகளை எடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அதேபோல் எதிர்கட்சி தலைவி ஜெயலலிதா இலங்கை தொடர்பில் இவ்வளவு வெளிப்படையாக தமது கருத்தை வெளிப்படுத்தியிருப்பது இலங்கை தமிழர்களுக்கு புத்தூக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்று மாற்றங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மாணவனுக்கு பல்கலைகழக அனுமதி வழங்க கோரி அமைச்சர் செல்லச்சாமி கடிதம்

தேங்கிக் கிடந்த தபாலினால் பல்கலைகழக அனுமதியை இழந்த மாணவன் தொடர்பிலும் மேற்படி மாணவனுக்கு பல்கலைகழக அனுமதியை பெற்றுக் கொடுக்கும்படியும் உயர்கல்வி அமைச்சர் விஸ்வ வர்ணபால அவர்களுக்கு தபால், மற்றும் தொலை தொடர்பு பிரதியமைச்சர் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவனுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்குமாறு இரத்தினபுரி இ.தொ.கா காரியாலயத்திற்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, October 7, 2008

தொழிலாளர் வர்க்கத்தினரிடையே இன ஒற்றுமை (1890-1930)

இலங்கை தொழிலாளர் இயக்க வரலாற்றில் இன, மத உணர்ச்சிகளுக்கு மேலாக வர்க்க உணர்வு மேலோங்கி இருந்த காலகட்டங்களும் உண்டு. 19-ம் நூற்றாண்டில் பெருந்தோட்டத்துறை முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் வளர்ச்சியடையத் தொடங்கியது. தொழிலாளர் வர்க்கத்தில் சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்திய தமிழர், மலையாளிகள், முஸ்லீம்கள், மலாயர், பறங்கியர் போன்ற பல்வேறு இனத்தினரும் காணப்பட்டனர். இவர்கள் பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மதத்தினராவர். இது தவிர சிங்களவர், தமிழர், மலையாளிகள், ஆகியோரிடையே சாதி வேறுபாடுகளும் நிலவின. எனினும், ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்ற உணர்வும் குறைந்த சம்பளம், நீண்ட வேலை நேரம், மோசமான வேலை நிலைமைகள் போன்ற பொதுவான ஒடுக்கு முறைகளுக்கு உட்படுபவர் என்ற உணர்வும் யாவரிடமும் நிலவின. மேலும், சுரண்டப்படும் தொழிலாளர் என்ற வகையில் தமது நிலைமைகளை முன்னேற்றுவதற்காகத் தம்மை ஒழுங்கமைத்துப் போராட வேண்டும் என்ற விழிப்புணர்வும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகர்ப்புற தொழிலாளர்களிடையே வளர்ந்திருந்தது. 1890 ம் ஆண்டில் நிகழ்ந்த முதலாவது தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கும் 1930-ம் ஆண்டுகளின் பொருளாதார மந்தத்திற்கும் இடைப்பட்ட 40 ஆண்டுகளில் காணப்பட்ட வர்க்க உணர்வும் தொழிலாளரின் கூட்டு நடவடிக்கையும் குறிப்பிடக் கூடிய அம்சங்களாகும். 1880-ம் ஆண்டுகளிலிருந்து இக்காலகட்டம் வரை இனவெறி பிரச்சாரத்திற்கு இடம் தராது மத, சாதி, இன பேதங்களை மறந்து பொருளாதார கோரிக்கைகள் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒன்றிணைந்து போராடினர் இதற்கும் மேலாக பிரித்தானிய முதலாளிகள், உத்தியோகத்தர் ஆகியோருக்கு எதிராக மத்திய தர வர்க்க தேசியவாதிகளின் எதிர்ப்புக்களுக்கு முன்னோடியாகவும் இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தினரின் போராட்டம் தீவிர நடைமுறை கொண்டதாகவும் இருந்தது.

இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள் -குமாரி ஜெயவர்த்தனா-

ஒத்துழைப்பு இன்மையால் வீடமைப்புத் திட்டம் நிறைவேறுவதில் தாமதம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புக்களை அமைத்துக் கொடுக்கும் தேசிய வீடமைப்பு திட்;டத்தினரால் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டத்தை நிறைவேற்றும் போது தோட்ட முகாமையாளர் ஒத்துழைப்பு இன்மையாலும் இது தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதில் எவ்வித ஆர்வமும் காட்டுவதில்லை. இவ்வாறு தோட்ட அதிகாரிகளினதும், தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இன்மையாலும் அத் திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் சிரமமும் தாமதமும் ஏற்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு திணைக்களத்தின் மாவட்ட முகாமையாளர் கே.வி. எல்லாறவ உலக குடியிருப்பு தினமான நேற்று தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் கண்டி மாவட்டத்தில் இந்த ஆண்டு 1242 வீடுகள் நிர்மாணிப்பதற்கான திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 705 வீடுகளுக்கான பணி ஆரம்பமாகின. சுமார் 289 வீடுகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளபோதிலும் தோட்ட உட்கட்டமைப்பின் நிதி கிட்டுவதில் உள்ள தாமதத்தால் தடைபட்டுள்ளன.

Thursday, October 2, 2008

அரசியல் ரீதியாக மலையக மக்களை பலவீனபடுத்தும் முயற்சிக்கு மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்

இந் நாட்டில் ஏற்பட்டுள்ள இன நெருக்கடி, யுத்தம், விலைவாசி உயர்வு என்பன தோட்டத் தொழிலாளர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்துள்ளன. நாட்டின் துன்பகரமான வாழ்க்கையை வாழ்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களே சமூக அபிவிருத்தி சமுதாய அநீதி ஒழிப்பு அமைச்சர் சந்திரசேகரன் கொட்டக்கலை பொரஸ்கீப் தோட்டத்தில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் அரசியல் ரீதியாக மலையக மக்களை பலவீனப்படுத்த பல சூழ்ச்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இம் மக்களை தோல்வியுறச் செய்வதன் மூலம் அவர்கள் சார்ந்த கட்சிகளை பலமிழக்கச் செய்ய நினைக்கிறது. சதா காலமும் சம்பள பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அதற்கப்பால் மலைய மக்களின் இருப்பை நிலைநாட்டுகவதற்கு அரசியல் ரீதியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களுக்கு சக்தியையும் தைரியத்தையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

Wednesday, October 1, 2008

முறையற்ற தபால் விநியோகத்தால் பல்கலைகழக வாய்ப்பை இழந்த மாணவன்

இரத்தினபுரி மாவட்டம் காவத்தை ஒபாத்த இல-02 கீழ்பிரிவைச் சேர்ந்த கே. சூரியகுமார் என்ற மாணவன் காவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவனான இவர் பல்கலைகழகத்துக்கு தகுதி பெற்றிருந்தார். பல்கலைகழக அனுமதிக்காக மானிய ஆணைக்குழுவிற்கும் விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பங்களை ஏற்று ஆணைக்குழு உரிய ஆவணங்களை அனுப்பி வைத்திருந்தபோதிலும் மாணவனுக்கு கடிதம் கிடைக்காததால் பதில் கடிதமும் அனுப்பிய போதிலும் காலம் கடந்து விட்டது. கடிதம் கிடைக்கவில்லை. கடிதம் கிடைக்காததால் தோட்டக் காரியாலயத்துக்கு பல முறை தேடி அலைந்திருந்திருக்கிறார். கடிதம் ஒரு மாதத்திற்கு மேலாக தேங்கிக் கிடந்துள்ளமை தெரிய வந்துள்ளது. எனினும் மாணவனுக்கு பல்கலைகழக அனுமதி வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்பிரதேச மக்கள் நடந்த உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி மாணவன் சூரியக்குமாருக்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.