Thursday, May 21, 2009

துவேஷத்தை வளர்க்காமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.ஏ. இராமையா

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாகக் கூற முடியாது. அதே நேரத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் புதிய வடிவம் பெற்றுள்ளன. அவற்றுக்கு ஏதுவான அரசியல் தீர்வு முன்வைக்கப்படா விட்டால் புதிய முரண்பாடுகள் தோன்றும்.
அதேவேளை தமிழ் மானசீகமான முறையில் வேதனை கொள்ளத்தக்க வகையில் சில பேரினவாத சக்திகள் துவேஷத்தைக் கக்கி வருவது மேலும் பிரச்சினைகள் தோன்ற வழிவகுக்கும். எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக சில வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தமிழ் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட்டு தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் ஒற்றுமையுடனும் சௌஜன்யத்துடனும் வாழக்கூடிய வகையில் செயற்திட்டம் முன் வைக்கப்பட வேண்டும். மேலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது பழைய சோற்றை மீண்டும் கொடுப்பதைப் போல அல்லாது, சகல தரப்பினரோடும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தோடும் கலந்துரையாடி தமிழ் மக்களுக்கு சகத்துவமும் கௌரவமும் அளிக்கும் வகையில் அரசியல் தீர்வுகள் அமைய வேண்டும்
இவ்வாறு செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஓ.ஏ.இராமையா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மலையக பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும்

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிப்போர் தமது பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட தெரிவு செய்யும் ஒரு விடயம் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு. மத்தியதர வர்க்கத்தினரின் தெரிவும் அதுவாகவே உள்ளது. இலங்கையை பொறுத்தவரை இது சற்று அதிகம். காரணம் அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருவதில் மூன்றாவது இடத்தில் இதை அடக்குமளவிற்கு இதன் ஆதிக்கம் உள்ளது.
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்ற செல்வோரின் தொகை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச்செல்லும் பெருந்தோட்ட பகுதி வாழ் பெண்களின் நிலையோ மிகவும் கவலைக்குரியது.
தமது சம்பள விகிதங்கள் வேலை நேரங்கள் பற்றிய போதிய விளக்கங்களின்றி தமது குடும்ப சூழ்நிலையை மட்டும் கருத்திற்கொண்டு வெளிநாடு செல்லும் இவர்கள் அங்கு சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர்.
பல இன்னல்களுக்கு மத்தியில் அவர்கள் உயிர் பிழைத்து நாடு திரும:புவதே பெரிய விடயமாகிவிட்டது. கடந்த வருடத்தில் மட்டும் பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வெளிநாடு சென்ற பெண்களில் பலர் தாம் கடமையாற்றிய வீடுகளில் இனந்தெரியாத முறையில் மரணத்தை தழுவியுள்ளனர். மேலும் அவர்களின் உடல்கள் கூட இரண்டு மாதங்கள் கழித்தே சொந்தங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வெளிநாடு செல்லும் பெண்களுக்குரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் எந்த முகவர் நிலையம் மூலம் செல்கின்றனர். அது பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்து பரிசீலித்து பார்க்கவும் எவரும் முன்வருவதில்லை.
ஒரு சில பெண்கள் தமது குழந்தைகளை வேறு ஒருவரின் பராமரிப்பில் விட்டுச் செல்லும் நிலையில் தற்போதைய பொருளாதார சூழ்நிலை உள்ளது. எனினும் அவர்கள் செல்லுமிடத்தில் நிம்மதியாக இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியே. ஆகவே இது தொடர்பில் அக்கறையுள்ள சிவில் மற்றும் பெண்கள் தொடர்பான இயக்கங்கள் இவர்களின் நிலை தொடர்பில் ஆராய பெருந்தோட்டப் பகுதிகளில் அமைப்பொன்றை நிறுவ வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைப்பார்களாயின் ஒரு சமூகத்தின் வாழ்வியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்க தீர்வு காண்பதாக அமையும்.
- சூரியகாந்தி-
வறுமை காரணமாக வெளிநாடு செல்லும் பெருந்தோட்ட பெண்கள்

தோட்டப்பகுதிகளில் தொடர்ச்சியான வேலை நாட்கள் குறைப்பு, மற்றும் வேலைக்கேற்ற ஊதியமின்மை, சம்பள உயர்வு அதிகரிக்கப்படாமை, வறுமை என்பவற்றினால் மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக செல்லும் பெருந்தோட்டப் பெண்களின் தொகை அதிகரித்துள்ளது. இலங்கையின் வறுமை விகிதம் மலையகப் பகுதிகளை மிக மோசமாக பாதித்துள்ளதாகவும், அதுவும் நுவரெலியா மாவட்டத்தில் 32 வீதமாக வறுமை உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊவா மாகாணத்தில் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் தொகை அதிகரிப்பதன் மூலம் அங்கு தோட்டப் பகுதிகளில் வறுமை நிலை அதிகம் என்பதே காரணமெனத்; தெரிவிக்கப்படுகிறது. இதனால் தேயிலை உற்பத்தி தொழில்துறையும் பாதிப்புக்குள்ளாகலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை

கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள தோட்டப்புறங்களில் வாழும் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் இரகசியமாக இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தோட்டங்களை வசிப்பிடமாகக் கொண்டு வெளி இடங்களில் கடமையாற்றி வரும் தொழிலாளர்களையே வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு தோட்ட நிர்வாகங்களும் உடந்தையாக உள்ளன. இதனால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தோட்டங்களில் நிரந்தரமாக வசிப்பவர்களின் தொழிலாளர் குடும்பங்களில் இருந்து ஒருவராவது அத் தோட்டத்தில் கடமையாற்ற வேண்டுமென்று தோட்ட நிர்வாகங்கள் அண்மைக்காலமாக வலியுறுத்தி வந்தாலும் தற்போதைய வேலை குறைப்பு நடவடிக்கையால் தொழிலாளர்கள் வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்கின்றனர். இவ்வாறு வேலை செய்வது குறித்து தோட்ட நிர்வாகமும், தோட்ட கம்பனிகளும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தோட்டத்தில் கிடைக்கும் ஊதியம் தங்களுக்கு போதாதென்றும் குடும்ப சீவியத்தை கொண்டு நடாத்த முடியாதென்று சுட்டிக்காட்டுகின்றனர். இதேவேளை அவிசாவளை பம்பேகம் தோட்டத்தைச் சேர்ந்த டிகோவப்பிரிவில் வெளியிடங்களில் வேலை செய்தவர்களின் குடியிருப்புக் கூரைகளை தோட்ட நிர்வாகம் பலவந்தமாக அகற்றிய சம்பவம் இடம் பெற்றுள்ளது. பின்னர் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை யடுத்து பின்னர் அவை மறுபடி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான தோட்டப் பகுதிகள் பெரும்பான்மை சிங்கள மக்களை சூழ்ந்துள்ள பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் மரணம்

மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை ஏற்பட்ட மண் சரிவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட ஆறு பேர் மண்ணினுள் புதையுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் தொடர்ந்து கடும் மழை பெய்ததையடுத்து வீட்டுக்கு மேல் பகுதியில் உள்ள மண்திட்டி திடீரென வீட்டின் மீது சரிந்து விழுந்ததால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மண் சரிவினால் அந்த வீடு முற்றாகவே மண்ணினுள் புதையுண்டதால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அதில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடும் மழை பெய்து கொண்டிருக்கையில் பலத்த சிரமத்தின் மத்தியில் பொதுமக்களும் பொலிஸாரும் மண்சரிவில் சிக்கியுள்ளவர்களின் சடலங்களை மீட்டெடுத்தனர்.