Monday, August 10, 2009

நீங்கள் தொழிற்சங்க பற்று கொண்டிருக்கலாம் உங்கள் மீது சங்கம் பற்று வைத்திருக்கிறதா என்பதே முக்கியம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோப்பித் தோட்டத் தொழிலுக்காக வரவழைக்கப்பட்டு 200 வருடங்கள் கடந்த நிலையிலும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் இன்றுவரையும் அடிப்படை பிரச்சினைகள் கூட முழுமையாகத் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மலையகப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளை பின்வருமாறு சுட்டிக்காட்டலாம். அடிப்படைச் சம்பளப் பிரச்சினை, சொந்த நிலம் இல்லாமை, லயத்து வாழ்க்கை முறை, அடிப்படைச் சுகாதாரப் பிரச்சினை, உட்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை, போசாக்குப் பிரச்சினை, சிறுவர் துஷ்பிரயோகம், வேலையில்லாப் பிரச்சினை, அறிவு வறுமை, அரசியல் ரீதியான விழிப்புணர்வு இன்மை, மாணவர்களின் இடை விலகல்கள், பாடசாலையின் பௌதீக வளங்கள் போதாமை, தொழில் பிரச்சினை, கசிப்பு பாவனை அதிகரிப்பு, அடிப்படை உரிமை, மீறல்கள், நிவாரணங்கள் கிடைக்காமை, தேயிலைத் தோட்டங்கள் குறைவடைதல், தொழில் பாதுகாப்பு இன்மை, போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளோடு இச்சமூகம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
மேற்கூறிய பிரச்சினைகளுக்கு எல்லாம் அடிப்படை மூல காரணம் ஒன்றுதான். இம்மக்களுக்கு கல்வி அறிவு போதாமையினால் இம்மக்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்வை பெற்றுக் கொள்ளாத நிலையே ஒரு முக்கிய காரணம் ஆகும்.
இம்மக்களுக்கு தேவையான விடயங்களை அரசாங்கத்திடம் இருந்தும், தோட்டக் கம்பனிகளிடம் இருந்தும் எவ்வாறு பெற்றுக் கொள்வது என்ற வழிகாட்டல் ஆலோசனை இவர்களுக்கு போதியளவு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மக்கள் ஒரு அடிமைச் சமூகமாக தொடர்ந்து நோக்கப்பட்டு வந்ததும், இவர்களுக்கு சலுகைகள், கல்வி வாய்ப்புகள் என்பவற்றைப் பெற்றுக் கொடுத்தால் மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு, பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற ஐயப்பாட்டாலும் அநேக விடயங்களில் காலம் காலமாக இம்மக்களின் பிரச்சினைகளை ஒரு சமூகப் பிரச்சினையாக யாரும் முன்னெடுக்க முயற்சிக்க வில்லை. அவ்வாறு சிலர் முயற்சி செய்த போதும் அதனை பல்வேறு வடிவில் மழுங்கடிக்கச் செய்த வரலாறும் உண்டு.
பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும், சிந்திக்க வேண்டும் 4 பரம்பரையாக 10கீ8 பரப்பு லயக் காம்பிராவில் எவ்வித விமோசனமும் இன்றி வாழும் இவர்களுக்கு அரசியல் ரீதியான வழிகாட்டல் ஆலோசனை செய்வது யார்? தனக்கு கிடைத்த வாக்குரிமையை சரிவர பயன்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என தீர்மானிப்பது வாக்குரிமையை பெற்ற மக்களே என்பது இவர்களுக்கு புரிந்தும் புரியாதுள்ளார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
எமது சமூகம் என்றைக்கு அரசியல் ரீதியாக தூர நோக்கோடு சிந்திக்கிறோமோ அன்றுதான் எமக்கு விமோசனம் கிடைக்கும். அரசியல் மூலமே மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
இந்த மிலேனியம் யுகத்திலும் சராயத்திற்கும், சோற்று பார்சலுக்கும், அற்ப சொற்ப சலுகைகளுக்கும், பணத்திற்கும் விலை போகக் கூடாது. அப்படி விலை போனால் இச்சமுகம் இன்னும் படுபாதாளத்திற்குச் செல்லம் என்பது போகப் போகத் தெரியும்.
நாம் எந்த தொழிற்சங்கத்தில் இருக்கின்றோம் என்பது முக்கியமல்ல. அந்த தொழிற்சங்கத்தின் மூலம் எமது சமுகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றி சிந்திக்க வேண்டும். தொழிற் சங்கங்கள் கூறும் அனைத்து விடயங்களும் சரியாக இருக்கும் என்று கூறமுடியாது. அதே வேளை பிழையாகவும் இருக்காது. அதனால் சிரியான விடயங்களை தெளிவாகப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

சிவமணம்...
அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு மலையக மக்கள் பூரண ஆணை- வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளுக்கு மலையகம் வாழ் பெருந்தோட்ட மக்கள், ஊவா மாகாண சபைத் தேர்தலில் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் என்று சுகாதார பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றையெல்லாம் அங்கீகரித்து மலையகத் தோட்டப்புற மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்துள்ளார்கள் என்றார்.
தோட்டப்புற வைத்தியசாலைகள் புனரமைப்பு, தாதியர் நியமனம் உள்ளிட்ட பணிகளை மேம்படுத்த 225 மில்லியன் ரூபா நிதியினைப் பெற்றுக் கொடுத்து மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி உதவி புரிந்தார். எனவே, இந்தத் தேர்தலில் ஊவா மாகாண தோட்டப் பகுதி மக்கள் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த ஒன்றிணைந்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டார்