Saturday, July 2, 2016

கொட்டகங்கை தோட்ட காணி தனியாருக்கு விற்பனை - எதிராக ஆர்ப்பாட்டம்

ரங்கல, கொட்டகங்கை தோட்டத்தின் மேற்பிரிவிலுள்ள பல ஏக்கர் காணியை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு எதிராக தோட்ட மக்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொட்டகங்கை மேற்பிரிவு தோட்டத்திலுள்ள சுமார் 60 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான தமது தோட்டப் பகுதியில் 50 ஏக்கர் காணி விற்பனை செய்யப்பட உள்ளதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தோட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொட்டகங்கை தோட்டத்திலுள்ள மக்களுக்கே அந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்துவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து அறிந்துகொள்வதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு வினவினோம்.
அமைச்சர் தற்சமயம் வெளிநாடு சென்றிருப்பதாகவும், அமைச்சர் நாடு திரும்பிய பின்னர் அதுகுறித்து அவரது கவனத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும் அந்த அலுவலகத்திலுள்ள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
நன்றி- நியூஸ் பெஸ்ட்