Thursday, November 19, 2009

தேர்தல்களில் அரசுக்கு ஆதரவு - எஸ்.அருள்சாமி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் தொழிலாளர் விடுதலை முன்னணி அரசுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அக் கட்சியில் பொதுச் செயலாளர் எஸ் அருள்சாமி தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் உயர் மட்ட அரசியல் குழு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் 16 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடியபோது
  • தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு தோட்டத் தொழிலாளர்கள் மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தற்போது தோட்டப்பகுதிகளில் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்ற தனி வீட்டுத் திட்டத்தினைத் துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பெருந்தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகள் வாழ்கின்ற பிரதேசங்களில் உரிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். போன்ற விடயங்கள் பேச்சுவார்த்தையின் போது மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்டார்
கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக 40,000 கையெழுத்துக்கள்

மலையகத்தின் பிரதான தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக இதுவரை 40,000 தொழிலாளர்கள் கையொப்பம் இட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் முன்னணி தலைவர் எஸ் சதாசிவம் ஐக்கிய மக்கள் முன்னணியினருடன் இணைந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் முதற்கட்டமாக கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்ல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர் தொழிலாளர்களிடமிருந்து கையொப்பம் பெறும் பணி தொடரும் என்றார்.
மத்திய மாகாண பாடசாலைகள் 23 ஆம் திகதி முதல் மூடப்படும்

மத்திய மாகாணத்தில் ஏ (எச் 1 என் 1) இன்புளுவென்சா காய்ச்சலுக்கான அச்சுறுத்தல் நிலவுவதையடுத்து இம் மாதம் எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடி விட அரசு தீர்மானித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுடன் 19-11-2009 அன்று நடத்திய விசேட கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.