Wednesday, May 6, 2009

நிம்மதியாகவும், சுயமாகவும் வாழும் வகையில் சம்பள அதிகரிக்கப்படும்

மலையக மக்கள் நிம்மதியாகவும் சுயமாகவும் வாழும் வகையில் அவர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படுமென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். முதலாளிமார் சம்மேளனத்துடனான சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது. அதனது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாம் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொண்ட போது பலர் தனிப்பட்ட முறையில் பல போராட்டங்களை மேற்கொண்டனர். இதனால் ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரூபா மாதாந்தம் நட்டம் ஏற்பட்டது. அதனைத் தவிர மெதுவாக வேலை செய்யும் போராட்டமும் நடைபெற்றுள்ளது. இதனால் அக்காலத்தில் எவ்வித நன்மையையும் தொழிலாளர்கள் பெறவில்லை. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் பொறுமையாக ஒற்றுமையாக இருந்து எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
காலவரையறைக்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில், கூட்டு பேரத்தில் பங்குபற்றும் தரப்பினர் வீணான கால தாமதத்தை ஏற்படுத்துவதை விடுத்து சம்பள உயர்விற்கான பேச்சுவார்த்தையை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென மத்தியமாகாண சபை உறுப்பினர் கனபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒன்றரை மாதங்களைக் கடக்கும் நிலையில், பேச்சுவார்த்தையோடு சம்பந்தப்பட்ட தரப்பினர் கால தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சம்பள உயர்விற்கான ஒப்பந்தம் கால தாமதமானாலும் சம்பள உயர்வை ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இரண்டு, மூன்று மாதங்களுக்கான மிகுதித் தொகையை சேர்த்து வழங்குவதன்மூலம் கூடுதலான சம்பள உயர்வை பெற்றுவிட்டதாக தொழிலாளர்களை ஏமாற்றி சமாதானப்படுத்தியதை கடந்த கூட்டு ஒப்பந்தத்திலும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு நாள் சம்பளத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து வேலை நாள் விகிதாசார அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதை முற்றாக கைவிட வேண்டும். இது முற்று முழுதான மோசடி முறையாகும்.

Tuesday, May 5, 2009

வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக பூஜை வழிபாடுகள்

பெரும்பான்மை இனத்தவர்களின் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக, சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாபெரும் பூஜை வழிபாடு செய்வதற்கு கோயில் நிர்வாக சபையினர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை அவரது அமைச்சில் சந்தித்தபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த உற்சவத்தை வெசாக் காலப்பகுதியில் நடத்தக்கூடாது என சில பெரும்பான்மையினர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதனை மீறினால் கொலை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இதனால், இக்கோயிலின் உற்சவம் இடைநிறுத்தப்பட்டது. கடந்த 28 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 10 ஆம் திகதி வரை இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கோயில் நிர்வாக சபையினரை தமது அமைச்சுக்கு வரவழைத்து நிலைமையை கேட்டறிந்து கொண்டதுடன், இது குறித்து சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அன்றைய தினமும் அதற்கு பின்னரும் இறக்குவானை பகுதியில் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இது குறித்து அமைச்சர் பௌத்த தலைவர்கள் மற்றும் மல்வத்த பீடாதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர ஒரு நாள் சம்பளத்தை வசூலிப்பது யுத்தத்தை ஆதரிக்கும் செயல் -பெ.சந்திரசேகரன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தோட்டத் தொழிலாளர்களின் ஆகக் குறைந்த ஊதியத்தில் ஒரு நாள் சம்பளத்தை வசூலிக்க முயற்சிப்பது யுத்தத்துக்குத் துணை போவதாகவே அமையுமென அமைச்சர் பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் யுத்தத்தினால் அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக என்று கூறி மலையக தோட்டத் தொழிலாளர்களிடம் ஒரு நாள் சம்பளத்தினைச் சேகரித்து வழங்குமாறு சில தொழிற்சங்கங்கள் நிர்வாகங்களிடம் கேட்டுள்ளன. அத்துடன் தொண்டு நிறுவனங்கள் பலவும் தோட்டத் தொழிலாளர்களிடம் பொருட்களையும் பணத்தையும் சேகரிக்க எத்தனிப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. பாரிய ஏவுகணைத் தாக்குதல்களினாலும் விமான குண்டு வீச்சுகளினாலும் அப்பாவிப் பொதுமக்களுக்குப் பல விதமான இழப்புகள் ஏற்படுமென உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கண்டனங்களை உதாசீனப்படுத்திக் கொண்டிருப்பதால்தான் பல இலட்சக்கணக்கானவர்கள் தமது சொந்த இருப்பிடங்களையும் வாழ்வையும் சொத்துகளையும் இழந்து அங்கவீனமடைந்த நிலையில் அகதிமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீதுமனிதாபிமானத்தோடு அனுதாபம் காட்டுவதற்கும் எவரோவிட்ட தவறுக்காக நட்ட ஈட்டினைத் தோட்டத் தொழிலாளர்களை செலுத்த நிர்ப்பந்திப்பதற்கும் வேறுபாடுள்ளது என்பதனை மலையக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மலையகத் தோட்டத்தொழிலாளர்களிடம் பணமும் பொருட்களும் சேகரிக்க எத்தனிப்பவர்கள் முதலில் இதனை மலையகத்துக்கு வெளியே நடைமுறைப்படுத்திக் காட்டுவார்களா? ஏன்று கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அக்கறை செலுத்தும் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக்கு உள பூர்வமாக செயற்படாமல் தோட்டத்தொழிலாளர்களிடம் மேலதிகமாக பணத்தினை பறிக்க நினைப்பது ஜீரணிக்கமுடியாத அவலமாகும் என்றார்.

Monday, May 4, 2009

சம்பள உயர்வை வழங்க மறுக்கும் நிர்வாகம் அதிகாரிகளுக்கு மட்டும் உயர்த்துகிறது –முத்துலிங்கம்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை நஷ்டம் எனக்கூறி வழங்க மறுக்கும் நிர்வாகங்கள் அதிகாரிகளின் கொடுப்பனவுகளையும், ஏனைய சலுகைகளையும் மட்டும் உயர்த்துகிறதென ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஏ.முத்துலிங்கம் பதுளையில் நடைபெற்ற பொதுக் கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே தெரிவித்துள்ளார்.
ஆகக் குறைந்த நாட் சம்பளத்தில் தொழில் செய்யும் பெருந்தோட்ட மற்றும் சிறு தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றனர். ஆனால் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைக்கும்போது தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிப்பது முதலாளிகளின் வழமையான பதிலாக மாறிவிட்டது. தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் நிர்வாகங்கள் தொழிலாளர்களின் சேமநல அபிவிருத்திகள், தோட்ட அபிவிருத்திகள் போன்றவைகளுக்கு எதையும் செய்வதில்லை. உற்பத்தி செய்கின்ற தேயிலைத்தூள், இறப்பர் போன்றவைகளை விற்பனை செய்வதே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதுடன் வெட்டியும் விற்கின்றனர்.
அடிமட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வுக் கோரிக்கைகளுக்கு மட்டும் நஷ்டம் எனக்கூறித் தட்டிக்கழிக்கின்ற நிர்வாகங்கள் அதிகாரிகளின் கொடுப்பனவுகளை பல்வேறு வழிகளில் உயர்த்தப்படுவதைப்பற்றி எதுவும் சொல்வதில்லை. தொழிலாளர்களின் இன்றைய அவசரக் கோரிக்கையான சம்பள உயர்வு மற்றும் பொதுக் கோரிக்கைகளில் தனித்தனியான கோஷங்கள் முன்வைப்பதை நிறுத்தி, தங்களது தனிப்பட்ட குரோதங்கள் அல்லது அரசியல் தொழிற்சங்கப் போட்டிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்ட கோரிக்கையை முன்வைக்க முன்வரவேண்டும்.
இதன் மூலம் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் பொதுக்கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். அத்துடன் தேயிலை, இறப்பர் கைத்தொழில் மூலம் எமது நாட்டிற்கு அந்நிய செலாவணி கணிசமான அளவு கிடைப்பதால் அரசும் கூடிய கவனம் செலுத்தி தோட்டத் தொழிலாளர்களின் வறுமையை போக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சகல மலையகத் தலைமைகளும் ஒன்றுபடவேண்டும் என்றார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியும் -ஆறுமுகன் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது ஆறுமுகன் தொண்டமான் பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த முறை சம்பள உயர்வின் போது உங்கள் ஒற்றுமையையும் கட்டுப்பாட்டினையும் இழந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித் தனி போராட்டங்களை மேற்கொண்டீர்கள் இதனால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பாரிய நட்டம் ஏற்பட்டது. மெதுவாக வேலை செய்யும் போராட்டம் காரணமாக, தனி நபர் ஒவ்வொருவரும் தலா 3000 ரூபா வரை மாதாந்தம் இழந்தார்கள். இம் முறை அவ்வாறான போராட்டங்கள் எதனையும் செய்ய வேண்டாம்.
ஒவ்வொருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சம்பளவுயர்வு பெற்றுக் கொடுக்கப்படும். இது சம்பந்தமாக பல பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் 13 ஆம் திகதியும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். அதேபோல் சம்பளமும் நியாயமான முறையில் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்

Sunday, May 3, 2009

பெருந்தோட்டப் பகுதிகளில் நிரந்தர குடிநீர் விநியோக திட்டம் அவசியம்

பெருந்தோட்டப் பகுதிகளில் குடிநீரை இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி வாய்ப்புகள் இருந்த போதிலும் அவற்றை அம்மக்கள் பயனடைவதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். இதுவரை காலமும் குடிநீரை விநியோகிப்பதற்கான உறுதியானதும் நிரந்தரமானதுமான திட்டம் எதுவும் மேற்கொள்ளப்படாமையே இதற்கான பிரதான காரணமாகும்.
தோட்டங்களை நிர்வகித்து வந்த ஆங்கிலேயர் காலத்தில் தொழிலாளரின் குடிநீர்;வசதி கருதி நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்ததை யாரும் மறந்துவிட முடியாது. இரும்புக் குழாய்கள் பொருத்தப்பட்டு லயன் குடியிருப்புகளுக்கு நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் இதனை முறையாகப் பேணிப் பாதுகாக்காததாலும் தோட்டங்கள் கைமாறிய பின்னர் பொறுப்பேற்றவர்களின் கவனயீனத்தாலுமே காலப் போக்கில் தொழிலாளருக்கான குடிநீர் விநியோகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எனினும் தோட்ட அதிகாரி உதவி அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களுக்கான குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி சீராக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும். யுனிசெப், சீடா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களினால் தொழிலாளரின் குடிநீர் வசதி கருதி பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவையும் வெற்றியளித்ததாகத் தெரியவில்லை. தொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆறு, கிணறு, குளம், குட்டை, நீரோடை, நீரூற்று போன்ற இடங்களிலிருந்து தேவையான குடிநீரைப் பெற்று வருகின்றனர்.
அண்மைக் காலங்களில் பெருந்தோட்ட நம்பிக்கை நிதியத்தினால் தோட்டங்களில் கிணறுகள் கட்டப்பட்டுள்ள போதிலும் அவை பொருத்தமான இடங்களில் கட்டப்படவில்லை. நீரின்றி கட்டப்பட்ட நாள் முதல் கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
தொழிலாளர்களுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களில் கூட குடிநீர் விநியோகத் திட்டமில்லை. வசதியுள்ள வாய்ப்புள்ள சிலர் தமது சொந்த முயற்சியினால் கிணறுகளை அமைத்துக் கொண்டுள்ளதுடன் நீரிறைக்கும் இயந்திரத்தின் மூலம் நீரைப் பெற்றுக் கொள்ளும் வசதியையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
குடிநீர்த்திட்டம் என்ற பெயரில் பெருந்தோட்ட நிதியத்தின் பணம் வீணாக விரயமாகிறதே தவிர தொழிலாளர்களுக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை.
கிராமப்புர மக்களின் குடிநீர் வசதி கருதி இன்று பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பலனடைந்து வருவதுடன் அதற்கான கட்டணமும் அவர்களிடமிருந்து அறவிடப்படுகிறது. இது போன்ற திட்டம் தோட்டப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படுமாயின் தொழிலாளர் எதிர் நோக்கிவரும் குடிநீர்; பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடியதாகவிருக்கும்.மலையக மக்களுக்கு சேவையாற்றக்கூடிய மூன்று அமைச்சுக்கள் இயங்கி வருகின்றன. இந்த அமைச்சுக்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆகக் கூடிய சேவைகளைப் பெற்றுக் கொடுக்க நல்லதொரு வாய்ப்பு கிட்டியுள்ளது. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, இளைஞர் வலுவூட்டல், சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சமுதாய அபிவிருத்தி, சமூகச் சீரழிவு ஒழிப்பு அமைச்சுகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் தோட்டப் பகுதிகளில் நிரந்தரமானதும் நீடித்து நிலைக்கக் கூடியதுமான குடிநீர்த் திட்டத்தை மேற்கொள்ள முன்வர வேண்டும். களுத்துறை மாவட்ட தோட்டப்பகுதிகள் கவனிப்பாரின்றி காணப்படுகிறது. அப்பகுதிகளில் இவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த மாவட்டமே எல்லா வகையிலுமே பின்னடைந்த நிலையில் இருந்து வருகின்றது.
மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூற எந்தவொரு பிரதிநிதியும் முன்வராமல் இருப்பது வேதனை தரும் விடயமாகும். பிரச்சினைகளை எடுத்துக் கூறுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சங்கத் தலைவர்கள் அவ்வப்போது அறிக்கை விடுக்கின்றனர். அவர்களைச் சந்திக்க தலைமைக் காரியாலயத்துக்குச் சென்றால் அங்கிருப்பவர்கள் தலைவர்மாரைச் சந்திக்க விடாது தடுத்து ‘நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்’ எனக் கூறி திருப்பியனுப்பி விடுவதாகத் தொழிலாளர் தெரிவிக்கின்றனர்.