Monday, October 17, 2011

உணவு விஷமானதால் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

தலவாக்கலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் சிறுவர் தினத்தை கொண்டாடும் முகமாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிப்படைந்த நிலையில் கொட்டகலை, நுவரெலியா, லிந்துலை, கொட்டகலை, மஸ்கெலிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இரத்னகிரி, நோர்வூட், பார்மஸ்டன், லோகி, மிடில்டன், கிரேட்வெஸ்ரன் ஆகிய பெருந்தோட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களே இச் சிறுவர்தின விழாவில் பங்குபற்றியிருந்தனர்.

உணவை உட்கொண்ட மாணவர்களுக்கு வாந்தியும், வயிற்றுவலியும், மயக்கமும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் சிறியவர்கள், பெரியவர்களும் அடங்குவர்.

இந்த உணவை விநியோகித்தோர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிபர்கள் உட்பட ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவத்தையடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதிருக்க கால்நடை உற்பத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான அறுமுகன் தொண்டமான் தலைமையில் கல்வி அதிகாரிகளுடன் சந்திப்பொன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

பாடசாலைகளில் தனிப்பட்டதாரர்கள் நிகழ்வொன்றை நடத்துவதாயின் சகல மட்டங்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளில் தனிப்பட்ட நிறுவனங்களால் உரியவர்களின் அனுமதியின்றி எந்தவொரு நிகழ்வையும் நடத்த முடியாது. அனுமதி பெற்ற பின்னரே இது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படும் என்றார்.

மலையக பகுதிகளில் நிலவும் வரட்சியினால் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைப்பு

கடந்த சில மாதங்களாக மலையகப்பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மலையகப் பகுதிகளில் நிலவும் கடும் வரட்சியினால் தேயிலைச் செடிகள் கருகியும் வாடியும் காணப்படுவதால் நிர்வாகம் தொழிலாளர்களின் வேலை நாட்களை குறைத்துள்ளது. அத்துடன் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாள் மாத்திரம் வேலை வழங்கும் நிலையில் தொழிலாளர்கள் 18 அல்லது 25 கிலோ கொழுந்து பறித்தாலும் கூட அவர்களுக்கு அரை நாள் சம்பளமே வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்பவே தீபாவளி முற்பணம் வழங்கப்படுமென தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. எனவே இது குறித்து மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் தோட்ட நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை இது குறித்து அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு வருடாந்தம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்தைக் கூட இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி முற்பணமாக வழங்கப்பட்ட 6 ஆயிரம் ரூபா இம்முறை 4,500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் இப் பண்டிகையை கூட சிறப்பாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணத்தை அதிகரித்து வழங்க பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.