Monday, April 19, 2010

தோட்டத்திற்குள் புகுந்த பெரும்பான்மை இனத்தவர்களின் தாக்குதலால் நால்வர் காயம்

நிவித்திகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னகந்த மகாவெல தோட்டத்திற்குள் புகுந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்;ந்த சிலர் குடிபோதையில் அங்குள்ள தமிழர்களை தாக்கியுள்ளதோடு அவர்களின் வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இச் சம்பவத்தில் காயமடைந்த நால்வர் இத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது நீண்டகாலமாக இத் தோட்டத்திலுள்ள காணியை வெளியார் அத்துமீறி கைப்பற்றி வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து பெரும்பாலான தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்ட நிலையில் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே அங்கு வசித்து வருவதாகவும் தெரியவருகிறது.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நிவித்திகலை பொலிசில் முறைப்பாடு செய்த போதிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறைப்பாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை எனவும் மாறாக தொழிலாளர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.டி ராஜனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அவர் சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தார். தொழிலாளர்கள் நிவித்திகலை பொலிசில் முறைப்பாடு செய்யவும் ஆவண செய்தார்.

மேம்படுத்தப்பட்ட தொழில் சூழல் மூலம் தொழிலாளர் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது


கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால தேயிலைத் தொழில், பிரித்தானியா சார்ந்த சம்பிரதாய பெருந்தோட்டத்துறையில் இருந்து விலகி நீண்டதூரம் வந்துவிட்டது.

பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் அங்கத்தவரான ரேஜி ராஜியா, 1962ம் ஆண்டு இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் நுழைந்தார். அவர், பெருந்தோட்ட நிர்வாகியாக, தரகராக, இயக்குநராக மற்றும் கொள்வனவாளராக தேயிலை தொழிற்துறையின் சகல நிலைகளிலும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் 45 வருட அனுபவம் உள்ளவர்.



இலங்கையின் சம்பிரதாய பெருந் தோட்டத் துறையில் இருக்கும் பெருந்தோட்ட வாழ்க்கை, நிலையான உற்பத்தி தாக்கத்திலும், இலாபத்திலும் சீரடைந்துள்ளது என்று இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கு அளித்த பேட்டியில் ராஜியா தெரிவித்துள்ளார்.


அன்று நாட்டிலுள்ள பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் தோட்டங்களுக்கு அவற்றின் முக்கியமான சாதனைகளைத் தெரிவு செய்யும் பொருட்டு மேற் கொள்ளப்பட்ட சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பிறகு அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார். பெருந் தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத் தினால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை களுக்கு அமையவே இச்சாதனைகள் பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


“நிச்சயமாக முன்னேறுவதற்கு பல இடைவெளிகளிலிருந்தும் கடந்த 1980ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தோட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் மனிதவள அபிவிருத்தி சம்பந்தப்பட்ட துறைகளிலும் காணக் கூடியதாக உள்ளது” என்கிறார் ராஜியா.
கம்பனி தோட்டங்களில் டிரஸ்டின் தலையீட்டினால் தோட்ட மகளிர் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காண முடிந்திருக்கிறது.
“எந்த விதமான காலநிலையிலும், கடினமான நிலப்பரப்பில் கொழுந்துகளை பறிக்கும் விசேட தொழிற்றிரன் படைத்த அதேநேரம் அப்பெண்கள் துவைத்தல், விறகுகள் சேகரித்தல், உணவு தயாரித்தல், குழந்தைகளை பராமரித்தல் போன்ற வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது ராஜியா என்றார். இன்று


“ஆனால் இன்று, முன்னேற்றமடைந்துள்ள குடும்ப வசதிகளாலும் சமூக அந்தஸ்தாலும், கௌரவிக்கப்படுவதாலும் தோட்டப் பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் அரும்பத் தொடங்கியுள்ளன.” என்றும் ராஜியா கூறுகிறார்.


தோட்டங்களின் முக்கியமான துறைகளான சுகாதார பராமரிப்பு, சிறுவர் அபிவிருத்தி, குடியிருப்பு அபிவிருத்தி, வதிவிட மற்றும் சமூக அபிவிருத்தி போன்றவை முன்னேற்றம் அடைந்துள்ளது.

உதாரணமாக மது போதைக்கு அடிமையானோர்களுக்கு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் அறிவுரை வழங்குதல், வீட்டு நிதி பராமரிப்பு, வங்கியிடுதல் மற்றும் சேமித்தல், கால்நடை வளர்ப்பு, வருவாய் பெருகக் கூடிய எடுத்துக்காட்டாக சிகை அலங்கார நிலையம் போன்ற தொழில்துறைகளுக்கு கடன் வழங்குதல் போன்றவற்றில் டிரஸ்ட் எடுபட்டுள்ளது. இச்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களது பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்காக நிதியுதவியும் வழங்கப்படுகிறது.


வீட்டு சௌகரியங்களுக்கு தேவையான வசதிகள், சூரிய ஒளி மூலம் மின்சாரம், சுடுநீர், தொழிற்சாலையிலும் வெளிக்களத்திலும் ஓய்வு அறைகள், முதியோர் இல்லம் மற்றும் கலாசார தேவைகளை கருதி சில பெருந்தோட்ட மாவட்டங்களில் மயானங்களையும் டிரஸ்ட் அமைத்துத் தந்துள்ளது.


“தேசிய மயமாக்கப்பட்ட நாளிலிருந்து, பெருந்தோட்ட சமூகத்துக்காக கட்டாயச் சேவைகளை முன்னேற்ற தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது கம்பனி தோட்டங்கள் இதைவிடவும் முன்னேறியுள்ளன. தற்போது விசேடமான சேவைகள், சிறந்த முறையான கட்டமைப்பில் தோட்ட குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சில நேரங்களில் அயல் கிராமப்புற சமூகங்களுக்குக் கொடுக்கும் விதத்தில் சலுகைகள் நிரம்பி வழிகின்றன” என்கிறார் இவர்.


அநேக தோட்டங்களில் உள்ள 0-5 வயதெல்லையையுடைய சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் சமூக கட்டமைப்புடன் உபகரணப்படுத்தப்பட்ட பிரிவுகளுடன் பயிற்சியளிக்கப்பட்ட தராதரமுள்ள உத்தியோகத்தர்கள் மூலம் முகாமைப்படுத்தப்பட்டதாகும். இன்றைய காலகட்டத்தில் அனேகமான நிறுவனங்களில் நிகழும் குழந்தை பிறப்புக்களின் போது, தாய்மார்களுக்கு உரிய ஊட்டச்சத்தும், பிரசவ பராமரிப்பும் வழங்கப்படுகிறது. இன்று இறப்புகளின் எண்ணிக்கை தேசிய கணக்கிற்கு உட்பட்டதாகவே உள்ளது.
கூடுதலான இளைஞர்களும் இள வயதினருமே புதிய வசதிகளுடைய வீடமைப்பு குடியிருப்புகளில் குடியேறுகின்றனர். இது அவர்கள் தனித்தனியான வீடமைப்புகளை ஏற்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. வயது முதிர்ந்தோர் இம்முறைமையை ஏற்றுக்கொள்ள காலம் எடுக்கலாம். ஆனால் இது முன்பைவிடவும் மிகப்பெரியதொரு முன்னேற்றமாகும். அதிகமான தகராறுகள் நீர் குறைவினாலும், கூரை ஒழுக்கினாலும், வதிவிட குறைபாடுகளாலுமே ஏற்படுகின்றன” என்கிறார் ராஜியா.


பிராந்திய கம்பனி தோட்டங்கள், சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவீனமயமான தரக்கட்டமைப்பாகிய சுகாதார, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரச்சான்றிதழ்களுடன், தொழிற்சாலை அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இத்தொழிற்சாலைகள் மேம்படுத்தப்பட்டதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளதுடன் சுத்தமான, ஒழுங்கமைக்கப்பட்ட தொழில் சூழ்நிலை மூலம் தொழிலாளிகளின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. தொழிற்சாலை ஓய்வறை உட்பட இவைபோன்ற செயற்பாடுகள் இலங்கை தேயிலையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


கம்பனி தோட்டங்களில் பொதுவாகக் காணப்பட்ட வேலை செய்யும் நிலைமை வெகுவாக மாறி நல்ல நிலையை அடைந்துள்ளது. தற்போது தோட்ட முகாமைத்துவம், தொழிலாளர்களது கண்ணியத்தினை அடையாளம் கண்டுகொள்வதை அதிகரித்துள்ளதுடன் உடன்பாட்டுடனான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.


“ஆரம்பத்தில் இது ஒரு கொடுங்கோலான அமைப்பாக இருந்தது. தற்போது தோட்டங்களை நிர்வகிப்பதில் கலந்தாலோசிக்கும் அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு தோட்டத்திலும் தோட்ட கண்காணிப்பாளர், தொழிலாளர் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டு தொழிலாளர் செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான செயற் குழுக்களில் தற்போது பெண்களும் பிரதிநிதிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இது முன்னேற்ற வழியின் பெருமாற்றமாகும். இந்த செயற்குழுக்கள் மூலம் தொழிலாளர்களது தகராறுகள் சுமுகமாக பேசித்தீர்க்கப்படுகிறது. இதன் மூலம் தகராறுகளில் வீணாக்கப்படும் நேர விரயம் மற்றும் வேலை நிறுத்தங்கள் தவிர்க்கப்படுகின்றன” என்று சொல்கிறார் ராஜியா.


(இலங்கை பெருந்தோட்ட முதலாளிகள் சம்மேளன ஊடக வெளியீடு)
நன்றி- தினகரன் வாரமஞ்சரி