Monday, July 19, 2010

மலையகப் பிரதிநிதிகளுக்கு மனிதாபிமான வேண்டுகோள்!

மலையகத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் கொழும்பில் அநியாயமாக உயிரிழந்துள்ளார். தோட்டப் பிரதேசங்களிலிருந்து வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களுக்குச் செல்கின்ற பெண்கள் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இப்பரிதாபத்தின் தொடர்ச்சியானதொரு சம்பவமாகவே கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்றுள்ள மர்ம மரணமும் அமைந்துள்ளது.

கொட்டாஞ்சேனை, புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள தொடர் மாடி வீடொன்றில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

இம் மரணத்துக்கான காரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து இன்னுமே உறுதி செய்யப்படவில்லை. இப்பெண்ணின் மரணம் மர்மமாகவே உள்ளது. இப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் பரவலாக நிலவுகிறது.

இம் மரணம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் வீட்டு எஜமானியும் அவரது தாயாரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னரே இப்பெண்ணின் மரணத்துக்கான காரணத்தை சரிவரக் கூற முடியுமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

செல்வந்த வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்ற மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் இன்று நேற்று உருவானதல்ல.... இப்பரிதாபமானது அக்காலம் தொட்டு நிலவி வருகிறது. பெரும் பாலும் சிறுவயது யுவதிகளே இத்தகைய அவலத்துக்கு முகம் கொடுக்கின்றனர்.

கொழும்பு நகரத்தை எடுத்துக்கொண்டால் இங்கு செல்வந்த வீடுகள் பெரும்பாலானவற்றில் மலையகத்தைச் சேர்ந்த சிறு பெண்கள் தொழில் புரிகின்றனர். இவர்களில் சிலருக்கு மாத்திரமே மனிதாபி மானமுள்ள எஜமானர்கள் கிடைக்கின்றனர்.

ஏனையோர் மிகவும் துன்பப்படுகின்றனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக வேலை வாங்கப்படும் அவலத்தை பலர் எதிர் கொள்கின்றனர். விடுமுறையென்பது இவர்களுக்குக் கிடையாது. போதிய வேதனம் பலருக்கு இல்லை. இடையிடையே வீட்டுக்குச் சென்று வர விடுமுறை வழங்கப்படுவதில்லை. ஒரு வீட்டின் அத்தனை வேலைகளையும் தனியொருத்தியாக நின்று செய்ய வேண்டிய கொடுமைக்கு சின்னஞ்சிறு பெண்கள் உள்ளாகின்றனர்.

இந்த அநீதிகளுக்கு அப்பால் ஒரு சில பெண்களுக்கு மற்றொரு கொடுமையும் இழைக்கப்படுவதாக அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திகளைப் பார்க்கிறோம். பணிப்பெண்களாக வேலை செய்யும் சிறுமியர் மற்றும் யுவதிகளுக்கு உடல் ரீதியான இம்சைகள் அளிக்கப்படும் சம்பவங்கள் சில வீடுகளில் இடம்பெறுகின்றன.

கடுமையான முறையில் அடித்துத் துன்புறுத்துதல், பாலியல் ரீதியில் பலவந்தப்படுத்துதல் போன்ற கொடுமைகளை சில பெண்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இவற்றுக்கும் அப்பால் ஒருசில யுவதிகள் கொல்லப்பட்ட பரிதாப சம்பவங்களையும் நாம் அறிந்துள் ளோம். இது போன்ற மனதை உருக்கும் பரிதாபங்களுக்கு மலை யக யுவதிகள் உள்ளாவது உண்மையிலேயே வேதனை தருகிறது.

இந்தச் சமூக அநீதிக்கு அடிப்படைக் காரணம் வறுமையாகும். குடும்ப வறுமையின் நிமித்தம் சிறு வருமானம் ஈட்டிக் கொள்வதற்காக செல்வந்த வீடுகளுக்கு வேலைக்கு வருகின்ற அப்பாவிகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியை இனிமேலும் அனுமதித்துக் கொண்டிருக்கலாகாது. வறுமையைக் காரணம் காட்டி எத்தனை காலத்துக்குத்தான் இக்கொடுமையைப் பொறுத்துக் கொண்டிருப்பது!

உண்மையில் கூறப்போனால் இந்தப் பரிதாபத்துக்கான அடிப்படைச் சூத்திரதாரிகளென குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் பெற்றோர் தான். அவர்கள்தான் தங்களது பிள்ளைகளை செல்வந்த வீடுகளில் வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் வறுமை!

பணம் ஈட்ட வேண்டுமென்பதற்காக தங்களது சின்னஞ்சிறு பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதை ஈவிரக்கமற்ற செயலென பெற்றோர் நினைத்துப் பார்ப்பதில்லை. கல்நெஞ்சம் படைத்தோரால் மட்டுமே இது முடியும்.

குழந்தையொன்று பிறந்ததிலிருந்து அதனை வளர்த்து, கல்வி ஊட்டி ஆளாக்குவது பெற்றோரின் கடமையாகும். குழந்தைக்குரிய மேற்படி வசதி வாய்ப்புகளை வழங்கத் தவறுவது அடிப்படை உரிமை மீறலாகும். ஆனாலும் இவற்றையெல்லாம் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர் பலர் கருத்தில் கொள்வதில்லை. இதற்குக் காரணம் தோட்டப் பகுதி குடும்பங்களில் நிலவும் வறுமை மட்டுமன்றி மதுபானப் பழக்கமும் தான்....

மலையகத் தோட்டங்களில் மதுவுக்கு அடிமையான பெற்றோரே பெரும்பாலும் தங்களது பிள்ளைகளை பணிப்பெண் வேலைக்கு அனுப்புகின்றனர். இது ஒருபுறமிருக்க செல்வந்த வீடுகளில் மலையக யுவதிகளை வேலைக்கென ஒழுங்கு செய்து கொடுக்கும் செயலில் தரகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்குப் பணம் கிடைக்கிறது. இதுவொரு சமூகப் பிரச்சினையென்பதை மலையக தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மலையக தொழிற்சங்கங்களுக்கு உண்டு. மக்கள் பிரதிநிதிகளான தொழிற்சங்கத் தலைவர் கள் மனிதாபிமானத்தின் பேரில் இந்த அவலத்துக்கு முடிவு காண முன்வர வேண்டும்.

நன்றி- தினகரன்

No comments: