Wednesday, October 28, 2015

மீரியபெத்த அனர்த்தம்-ஒரு வருட காலம் கடந்தும் மனதை விட்டகலாத துயரம்


மீரியபெத்தை பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பலியான 37 பேரது ஒரு வருட பூர்த்தி “திவசம்” பூஜை வழிபாடுகள் இன்று 29ம் திகதி பூனாகலை தமிழ் மகா வித்தியாலய ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெறவுள் ளது.

பூனாகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் ரெங்கராஜ் மோகனின் ஏற்பாட்டில் இடம் பெறும் ஒருவருட பூர்த்தி சமயக் கிரியை களை, அல்துமுல்லை கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தான பிரதம குரு பிரம்மஸ்ரீ பாலமூர்த்திஸ்வரக் குருக்கள் ஆகம விதிப்படி நடத்தி வைக்கவுள்ளார்.

அத்துடன் மண்சரிவில் பலியான 37 பேருக்குமான மலர் அஞ்சலி மற்றும் சுடர் ஒளியேற்றல், நெய் விளக்கேற்றல் ஆகியனவும் இடம்பெற்று பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்படும். அதையடுத்து, பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களைக் கொண்ட 349 பேருக்கும், அன்னதானம் வழங்கப்படும்.

மேலும் அல்துமுல்லை பிரதேச செயலாளர் வை.கே. சிரோமி ஜீவமாலா தலைமையில் ‘பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய வகையில், பலியான 37 பேருக்கான ஆத்ம சாந்தியை வேண்டி பௌத்த சமய நிகழ்வுகளும், அன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

பெற்றோர் இருவரும் பலியான நிலையில் கஜனி, சுரேஷ், சந்திரன் உள்ளிட்ட தாய் அல்லது, தகப்பன் இல்லாமலும் மொத்தமாக 97 சிறார்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் மாணவர்களாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் வங்கி வைப்பீட்டு சேமிப்பு புத்தகங்கள் உள்ளன.

ஐம்பதாயிரம் ரூபா முதல் பல இலட்சம் ரூபா வரையில் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. இன்று 29ம் திகதி மக்கள் வங்கி கொஸ்லந்தை கிளையினர் மேற்குறிப்பிட்ட 97 மாணவர்களுக்கும், கற்கை உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கவுள்ளனர்.

இம் மாணவர்களின் 53 பேர் பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் 10 பேர் கொஸ்லந்த ஸ்ரீ கணேஷா தமிழ் வித்தியாலயத்திலும் 18 பேர் அம்பிட்டிகந்த தமிழ் வித்தியாலயத்திலும், 16 பேர் பூனாகலை முன்பள்ளியிலும் கல்வி கற்று வருகின்றனர்.

பெற்றோர் இருவரையும் இழந்த கஜனி ஆண்டு 8லும், சுரேஷ் ஆண்டு 6லும், சந்திரன் ஆண்டு 7 லும் கல்வி கற்று வருகின்ற போதிலும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேல் வைப்பிலிடப்பட்டுள்ளது. ஏனைய 94 பேருக்கும் குறைந்த பட்சம் ஐம்பதாயிரம் ரூபாவுக்கு மேல் வங்கியில் வைப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ் வைப்பீடுகள் அனைத்தும் வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தோர், கிறிஸ்தவ ஸ்தாபனத்தினர், மலையகத்திலிருந்து தென் கொரியா நாட்டில் தொழில் செய்பவர்கள். புலம் பெயர்ந்தவர்கள் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மேலும் மாக்கந்தை தோட்ட தொழிற்சாலை நலன்புரி நிலையத்தில் இருந்து வரும் 349 பேருக்கும் ஒரு வாரத்திற்கு ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்து அறுநூறு ரூபாவுக்கான உலர்

உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அல்துமுல்லை பிரதேச செயலாளர் வை.கே. சிரோமி ஜீவமாலா தெரிவித்தார். தனி ஒரு நபர் இருக்கும் பட்சத்தில் அக் குடும்பத்திற்கு 700 ரூபா, இருவர் உள்ள குடும்பத்திற்கு 900 ரூபா, மூன்று பேர் உள்ள குடும்பத்திற்கு 1100 ரூபா, நான்கு பேர் எள்ள குடும் பத்திற்கு 1300 ரூபா, ஐந்து பேருள்ள குடும்ப த்திற்கு 1500 ரூபா என்ற வகையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதுவரையில் வழங்கப்படும் உணவுப் பொரு ட்கள் போதுமானதல்லவென்று எவரும் எனக்கு புகார் தெரிவிக்க வில்லை.

இன்னும் 3 மாதங்களில் இவர் களுக்கான தனி வீடுகள் 75 நிறைவு செய்யப்பட்டு வழங் கப்பட்டு விடு மென்று பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் தெனிய என்ற இடத்தில் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரையில் நான்கு வீடுகள் மட்டுமே நிறைடையும் தறுவாயிலுள்ளன. இவ்வீடமைப்பு நிர்மாணிப்பு பணிகளில் ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இப்பணிகள் இராணுவ கெப்டன் எம்.எஸ். குமார தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

அவரிடம் வினவிய போது, “இன்னும் 3, 4 மாதங்களில் 57 வீடுகள் மட்டும் பூர்த்தி செய்யப்படும். கட்டடப் பொருட்கள் கிடைக்க ஏற்படும் தாமதங்களே வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டதற்கான காரணமாகும். ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் 57 வீடுகளுக்கு மட்டுமே போதுமானதாகும். மேலும் 18 வீடுகள் நிர்மாணிப்பதற்கு, அயலிலுள்ள பிறிதொரு இடம் ஒதுக்கப்பட்டு எம்மிடம் ஒப்படைத்தால் மட்டுமே, ஏனைய வீடுகளை நிர்மாணிக்க முடியும் என்றார்”. புதிதாக வீடுகள் கட்டப்படும் இடமும் காட்டு யானைகள் வரக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதால் வீடமைப்பு காணியைச் சுற்றி வர மின்சார வேலிகளை அமைக்கவும், பிரதேச செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

ஆமை வேகத்திலேயே, வீடுகள் நிர்மாணிப்பு பணிகள் இடம்பெறுவதினால் இன்னும் ஒரு வருடமாவது செல்லுமென்ற நிலை உருவாகியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சினாலேயே, மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
மண்சரிவு ஏற்பட்டு 37 மனித உயிர்கள் பலியாகி ஒருவருடம் பூர்த்தியாகியும் பாதிக்கப்பட்டிருக்கும் 75 குடும்பங்களுக்கும் இன்னும் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படாமையினால் அம்மக்கள் தொடர்ந்தும் நலன்புரி நிலையத்திலேயே அவல நிலையில் இருந்து வருகின்றனர்.

பூனாகலைப் பகுதியின் மாகந்தையில் கைவிடப்பட்டிருந்த தேயிலைத் தொழிற்சாலையில், மேற்படி 75 குடும்பத்தினரைக் கொண்ட 349 பேர் வாழ்ந்து வருகின்றனர். இத்தேயிலைத் தொழிற்சாலைக்குள் 12ஒ8 அடி பரப்பளவான சிறு அறைகள் 55 அமைக்கப்பட்டு, மேற்படி 349 பேரும், பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கிய நிலையில் தத்தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அண்மைக்காலத்தில் இவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். இம்மக்களின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் எதுவுமின்றி கல்வியைத் தொடரும் மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமலும் பெரும் அவதியுறுவதை நேரடியாகவே காணக்கூடியதாக இருந்தது.

No comments: