Tuesday, September 15, 2009

மலையகம் தந்த பாடம்
வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?
-சாகரன்-
கடந்த இரு வாரங்களாக தமது வாழ்வு ஆதாரமான சம்பள உயர்வுப் போராட்டத்தை மலையக தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வந்தனர். பிரிட்டஷ் ஆட்சிக்காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வாழ்வு அளிப்பதாக பசப்பு வார்த்தை காட்டி இராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆடு மாடுகள் போல் ஏற்றப்பட்டு தலைமன்னார் துறைமுகத்தில் இறக்கப்பட்டனர் இத் தொழிலாள அடிமைகள்.
அக்கால கட்டத்தில் தலைமன்னார் தொடக்கம் மலையகம் வரைக்கும் வீதிகள் ஏதுமற்ற நிலை இருந்தது. தலைமன்னாரில் இருந்து மலையகம் செல்வதற்கான வீதிகளை தாமே நிர்மாணித்து, தாம் நிர்மாணித்த பாதை வழியே நடந்தே பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையை அம்மக்கள் கொண்டிருந்தனர். இப்பாதை நிர்மாணிப்பில் பல ஆயிரக்கணக்க மக்கள் தமது உயிரை மாய்த்தக் கொண்டு ஏதுமற்றவர்களாக எரியூட்டப்பட்டனர் என்பதே சோக வரலாறு. மன்னார் மண்ணுக்கு உரமாக்கப்பட்டனர். இராமாணயத்தில் அனுமான் தனது பரிவாரங்களுடன் இணைந்து இலங்கைக்கு கடல் வழியே பாதை அமைத்ததாக கதைகள் கூறுகின்றன. அது உண்மையோ, பொய்யோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நாம் வாழும் நூற்றாண்டில் தலைமன்னாரில் இருந்து மலையகம் வரை பாதையமைத்து தமது உயிரை தியாகம் செய்த வரலாறு எமது மலையக மக்களுக்கே சேரும். இவர்களே உண்மையில் வரலாற்று நாயகர்கள். ஆமாம் இலங்கையில் நாம் கண்ட வரலாற்று நாயகர்கள்.

No comments: