Tuesday, September 15, 2009

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு சம்பள நிர்ணயசபை மூலம் நிர்ணயிக்க வேண்டும்

வாழ்க்கை செலவுகளுக்கேற்ப அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகள் வழங்கப்படுவது பொதுவாக உலக நாடுகள் அனைத்திலும் இடம்பெற்று வரும் பொதுவான நிலைப்பாடாகும்.
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வானது முதலாளிமார் சம்மேளனத்துக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தங்களின் மூலம் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. இதற்காக பெரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. தொழிலாளர்களின் சம்பள உயர்வை சம்பள நிர்ணயசபை மூலம் அல்லது ஜனாதிபதியின் மூலம் பெற்றுக்கொடுக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தோட்டத் தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும் என புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். தொழிற்சங்கங்களால் ஒற்றுமையாக முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை போராட்டம் 405 ரூபா சம்பள உயர்வுடன் பல்வேறு இழுபறிகளையும், மோதல்களையும் ஏற்படுத்தியுள்ளன. பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு இவ்வாறானதொரு சூழ்நிலை தேவையற்றதாகும். தொழிலாளர்கள் தமக்கு நியாயமான சம்பள உயர்வை கோருவதும், முதலாளிமார் சம்மேளனம் அதனை வழங்க மறுப்பதும், பின்னர் தொழிற்சங்கங்கள் இணங்கப்பட்ட சம்பள உயர்விலும் பார்க்க குறைந்த தொகைக்கு இணங்குவதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பழக்கப்பட்ட விடயமாகும். இது மாற்றம் பெற வேண்டும். நாட்டின் ஏனைய தொழிற்துறை ஊழியர்களுக்கு கிடைப்பதை போன்ற சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கும் கிடைப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஆவண செய்ய வேண்டும். தமது அடிப்படை தேவைகள் கூட இன்று வரையில் நிறைவு செய்யது கொள்ள முடியாது திண்டாடும் மலையகத் தோட்ட மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர். இப் போராட்டம் வாரக்கணக்கில் இடம்பெற்ற போதும் நியாயபூர்வமான சம்பள உயர்வு கிடைக்காது போவதால் காலாகாலமாக ஏமாற்றப்படுவது தொழிலாளர்களே. எனவே தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகி சம்பள நிர்ணயசபை மூலமாக அல்லது ஜனாதிபதியின் மூலமாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

No comments: